பயிற்று
மொழி குறித்த பிழையான அணுகுமுறையால், தற்காலத்திய மாணவர்கள்
ஆங்கிலத்திலும், தமிழிலும் போதிய திறமையின்றி, அரைகுறையான அறிவையே பெற்று
உள்ளதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கல்விதான்
விடுதலையின் திறவுகோல். ஆனால் இக்கல்வி ஆங்கிலேயர் ஆட்சி வரை இந்தியாவில்
ஒரு சில உயர்சாதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
தவிரவும்,
பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கவும் பட்டது. 1832 - ஆம் ஆண்டில்தான்
முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியானது.
ஆனால், தமிழ்வழிக் கல்வி அப்பொழுதும் கட்டாயமாக்கப்படவில்லை. பிறகு இந்திய
ஆட்சிப் பொறுப்பு, 1857 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி
முறையிலிருந்து இங்கிலாந்துப் நாடாளுமன்றத்திற்குக் கைமாறியது. அதன்பிறகு
நடைமுறைக்கு வந்த மெக்காலே கல்வித் திட்டத்தின்படி, மூன்றாம் வகுப்பு
தொடங்கி ஆங்கிலம் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டது.
ஆனால் தாய்மொழியில் கற்க
வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்புவோர் கற்கலாம் என்பதுதான் நிலை.
இந்திய விடுதலைக்குப பிறகும் இந்த நிலையில் பெரிதும் மாற்றம் இல்லை.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற பெரும்
போரட்டங்களின் விளைவாக, தமிழகத்தில் இருமொழிக் கல்வி என்பது தொடக்கத்தில்
நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு படிப்படியாக ஆங்கிலத்தின் செல்வாக்கு
மேலோங்கி, ( Hindi never, English ever என முழங்கி) தமிழ்வழிக் கல்வி
புறக்கணிக்கப்பட்டது பெரும் சோகம். தமிழ்வழிக் கல்விக்கான தடைகள்
வேலைவாய்ப்பின்மை இந்திய விடுதலைக்குப் பிறகு, மத்திய அளவிலும், மாநில
அளவிலும் தாய்மொழிக் கல்விக்குப் பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை. இதற்குப்
பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலும் முக்கியமுமாகத் தமிழ்வழிக் கல்வி,
தங்களது குழந்தைகளுக்குப் போதிய வேலைவாய்ப்பினை வழங்குமா என்ற அச்சம்
பெற்றோர்களிடையே மேலோங்கி இருந்தது. இன்றும் இருக்கிறது. பயிற்று மொழியைக்
காட்டிலும், வயிற்றுமொழி அவர்களது முன்னுரிமையாக இருந்தது. இதைத் தவறு
என்று சொல்ல முடியாது. பள்ளிகளின் கட்டமைப்பு அடுத்து, தமிழ்வழிக் கல்வி
வழங்கும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு பெற்றோர்களைப் பின்வாங்கச் செய்தது.
கழிப்பிடம் கூட இல்லாத பள்ளிகளில் தங்களது பெண் குழந்தைகளைச் சேர்க்கப்
பெற்றோர்களுக்கு இருந்த தயக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே! கழிப்பிடம்
இருக்கும் பள்ளிகளில் தண்ணீரும் இல்லை, தூய்மைப் பணியாளர்களும் இல்லை.
ஆசிரியர் தட்டுப்பாடு அடுத்து, போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,
தமிழ்வழிப் பள்ளிக் கூடங்களின் கல்வித் தகுதி பற்றிய கேள்விகளும் மேலோங்கி
நிற்கின்றன. மேலும் பல தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர் / ஈராசிரியர்கள்தான்
அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களையும் நடத்துகின்றனர்.
அதேபோல், மேனிலைப் பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற முக்கிய
பாடங்களுக்குக் கூட உரிய ஆசிரியர்கள் இல்லை. தவறான புரிதல் ஆங்கிலக் கல்வி
குறித்தும், ஆங்கில வழியிலான கல்வி குறித்தும் உள்ள பாகுபாடு பலருக்குத்
தெரியாமல் இருக்கிறது. ஊடகங்கள் - குறிப்பாக ஒரு சில ஆங்கில ஊடகங்கள் -
இவ்விரண்டையும் போட்டுக் குழப்பி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலம் பயில்வதற்கு
எதிரானதோர் கல்வித்திட்டம் என்பதாகத் திட்டமிட்டுப் பரப்புரை செய்தன. தமிழ்
பயிற்சி மொழியில் சேர்ந்தால், உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவே
இல்லாமல் போய்விடும் எனும் பொய்யான கருத்து மக்களிடையே திட்டமிட்டுப்
பரப்பப்பட்டது. எனவே, ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோருக்கு இது மிகப்
பெரும் தடையாகத் தோன்றியது. தங்களது குழந்தைகள் ஆங்கில அறிவு இல்லாமல்
இருப்பது அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அது குழந்தைகளின் எதிர்காலத்தைப்
பாதிக்கும் என்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியுள்ளது. புதிய அலை தவிரவும்,
1990-க்குப் பிறகு பேரலையாக எழுந்த தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம்
ஆகியவற்றின் விளைவாகக் கல்வி, ஒரு சேவை என்ற நிலையிலிருந்து கல்வி, ஒரு
தொழில் என்பதாக மாறியது. உலக வங்கி போன்றவை எதிர்காலத்தில் கல்வி
மிகப்பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாறும்; எனவே வணிகர்கள் அதில் அதிகம்
முதலீடு செய்ய வேண்டும் என அறிவித்தன. இந்தியா காட் ஒப்பந்தத்தில்
கையொப்பம் இட்டது கல்வி வணிகர்களுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.
கல்வியைத் தொழிலாக நடத்தி, அதில் லாபம் ஈட்டுவது தவறல்ல என உச்சநீதிமன்றம்
போன்றவை கூட கல்வி வணிகமயத்திற்கு ஆதரவு நல்கின. எனவே, மக்களிடம் நிலவும்
அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, "கல்வித் தந்தைகள்" புற்றீசல்கள் போலத்
தனியார் கல்வி நிறுவனங்களைத் தொடங்கிக் கல்லா கட்டத் தொடங்கினர்.
பட்டதாரிகள் ஆசிரியராக வேலை பார்த்தனர். படிக்காதவர்கள், கல்வி
நிறுவனங்களின் உரிமையாளராக, படித்த ஆசிரியர்களுக்கு முதலாளிகளாக மாறினர்.
இந்தக் கல்விக் கொள்ளையர்கள் தங்களது லாபத்தைப் பெருக்கிக்கொள்ள
வலைப்பின்னல் போல வலிமையான அமைப்பை உருவாக்கி, அரசையே மிரட்டும் அளவுக்கு
வளர்ந்து விட்டனர் என்பதுதான் மிகப்பெரும் அவலம். அதுமட்டுமல்லாமல்,
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களிலேயே பலர் பெருமளவு
ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்கள்
தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு தர அணியமாக இல்லை. அந்நியர் வந்து புகல் என்ன
நீதி? இதற்கிடையில் வெளிமாநிலத்தவர் / பிற மொழியாளர்கள் / தமிழைப் பற்றிக்
கிஞ்சித்தும் கவலை கொள்ளாதவர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டணியில் இணைந்து
கொண்டனர். தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் பல லட்சம் ரூபாய்களை இறைத்து,
தங்களுக்குச் சார்பான ஆணைகளை நீதிமன்றத்தில் பெறவும் இவர்கள் துணிந்து
விட்டனர். இந்த நச்சுக் காளான்களை எதிர்கொள்ளவது தற்பொழுது மிகப் பெரும்
சவாலாக உள்ளது. தடைகளுக்கு விடை தமிழ்வழிக் கல்விக்கு முதல் தடை,
வேலைவாய்ப்பு. தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20% இட
ஒதுக்கீடு வழங்கப்படுகிறது: இதை 80% விழுக்காடாக உயர்த்த வேண்டும். மேலும்
தமிழ்வழிப் பயின்றோர் என்பது பள்ளிப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை
தமிழில் பயின்றவர்கள் என்பதாகக் கருதப்படுகிறது. இதை மாற்றி 10-ஆம் வகுப்பு
வரை தமிழில் பயின்றிருந்தாலே இச்சலுகை வழங்கலாம். மேலும் தமிழ் வழியில்
பட்டப்படிப்பு எங்கே இருக்கிறது? எனவே, இதில் மாற்றம் தேவை. மேலும்
"மண்ணின் மைந்தருக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை" எனச் சட்டம் இயற்ற
வேண்டும். இன்று ஒரே நாடு, ஒரே மொழி எனத் தொடர்ந்து ஒரே / ஒரே எனக்
கூச்சலிடும் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் இத்தகைய
சட்டத்தை எப்பொழுதே கொண்டு வந்து விட்டனர். எனவே தமிழ்நாட்டில் இதுவோர்
அவசரக் கடமையாகும். இந்த முன்னுரிமை அரசுப் பணிகளுக்கு மட்டுமல்ல, தனியார்
துறைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் சரோஜினி மகிஷத் குழுவின்
இத்தகைய பரிந்துரையைப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கர்நாடக அரசு
செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல், கர்நாடகத்தில் எந்தக் கட்சி
ஆட்சிக்கு வந்தாலும் தாய் மொழி வழிக் கல்வி எனும் நிலைப்பாடு என்றுமே
மாறுவதில்லை. தவிரவும், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர் சங்கம் ( எதிர் )
கர்நாடக அரசு ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கில், தொடக்கக் கல்வி வரை
தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது
இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். மேலும், சிறுபான்மையினர்
நடத்தும் நிறுவனங்களில் மொழிப் பாடம் மற்றும் பயிற்றுமொழி தொடர்பாக
விதிவிலக்கு ஏதும் இல்லை எனும் கர்நாடக அணுகுமுறை பின்பற்றத்தக்க
ஒன்றாகும். தமிழ்வழிக் கல்வியின் வெற்றிக்கு முதற்படியாக, தமிழை நூறு
விழுக்காடு ஆட்சிமொழியாக மாற்ற வேண்டும். "ஆட்சி மொழி அன்னைத் தமிழாக
இருக்கும் பொழுது, ஆங்கிலம் பயிற்சி மொழியாக இருப்பது, தழையிலே தண்ணீர்
ஊற்றிவிட்டு, வேரிலே வெந்நீர் ஊற்றுவதற்கு இணையாகும்" என அண்ணா கூறியது.
இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கது. மேலும் ஆட்சிமொழி, முழுமையும் தமிழாக
இருந்தால், தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு வேலைவாய்ப்பும் எளிதாகும்.
தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவும் அதிகமாகும். மேலும், தமிழை ஆட்சி
மொழியாக்குவதை எதிர்த்துப் பிறர் சட்டத்தடை பெறும் வாய்ப்பு மிகவும்
குறைவு. எனவே, ஆட்சிமொழி முயற்சி வெற்றி பெற, முதலில் தலைமைச்
செயலகத்திலிருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும். மாற்றம், கீழிருந்து
மேல் அல்ல, மாறாக மேலிருந்து கீழ் என்பதாக இருக்க வேண்டும். அரசு ஆணைகள்,
அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் வந்தால், மாவட்டங்களில் உள்ளவர்கள்
இயல்பாகத் தமிழுக்கு மாறியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும், மாற்று
மொழியைச் சார்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்குத் தமிழைக் குறுகிய
காலத்தில் கற்றுத் தரும் முன்னெடுப்புகள் வலுப்பெற வேண்டும். தலைமைச்
செயலகத்தில் இப்பொழுது அத்தகைய முயற்சிகள் மிகவும் பின்னடைவில் உள்ளன.
தமிழ் ஆட்சி மொழி மசோதா ஆளுநர் இசைவுடன் 1957 ஜனவரி 19 அன்று
நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 23 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு
இருந்தாலும், அதன் பிறகு அதை வலியுறுத்திப் பலமுறை அரசாணைகள்
வெளியிடப்பட்டு இருந்தாலும், இதில் போதிய முன்னேற்றம் இல்லை என்பது
வருந்தத்தக்கது. அரசின் பற்றுறுதிதான் இந்தத் தேக்கத்தை உடைக்க முடியும்.
மேலும், தமிழ்வழிக் கல்வி குறித்தவை அனைத்தும் அரசாணைகளாக மட்டுமே
வெளியிடப்படுகின்றன. அரசாணைகளை வழக்கு மன்றத்தில் எளிதாக முடக்கிவிட
முடிகிறது. எனவே, அவற்றைச் சட்டமாக்கிப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை
அரசுக்கு உள்ளது. தாய்மொழி வழிக் கல்விக்குப் பாரதிய ஜனதா அரசு முழு ஆதரவை
வழங்கும் எனப் பிரதமர் மோடி உள்பட பலரும் உறுதி அளித்து வருவதையும் இங்கு
பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் தாய்மொழிக் கல்வியைக் காந்தி அடிகள்,
ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளனர். "
தாய்மொழிக் கல்விக்குத் தேவையான நூல்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. நான்
சர்வாதிகாரியாக இருந்தால், இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாது அதை
உடனடியாகச் செயல்படுத்துவேன். பாடப்புத்தகங்கள் பிறகு தானே வரும்" எனக்
காந்தியார் சொன்னது குறிப்பிடத்தக்கது. 1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட
டாக்டர் இராதா கிருஷ்ணன் குழு மற்றும் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட
டாக்டர் கோத்தாரி கமிஷன் ஆகியவை தாய்மொழிக் கல்வியை மிகவும் வலியுறுத்தின.
1955 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் பேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்
ஜீவானந்தம், பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தாய்மொழிக்
கல்வியே பயன்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தமிழ்
மொழி வளர்ச்சி அடைந்தபின், பயிற்றுமொழியாக்கலாம் என்பது நீச்சல் பழகிய பின்
நீரில் இறங்கலாம் என்பது போன்றது எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜீவா
வலியுறுத்தினார். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில தாய்மொழிக் கல்வியே பல
நிலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பாவிலுள்ள 20 தனித்தனி
நாடுகளில் அவரவர் தாய்மொழியே பயிற்று மொழியாக உள்ளது. வளர்ந்த நாடுகளான
பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, சுவீடன், ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும்,
வளரும் நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும், மிகவும்
ஏழை நாடாகாகக் கருதப்படும் சோமாலியா போன்ற நாடுகளிலும தாய்மொழிக் கல்வியே
நடைமுறையில் உள்ளது எனும் உலக நிலவரம் மக்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டக்கூடியதாக உள்ளது. அடுத்து, தாய்மொழியில் கல்வி கற்பிக்க அனைத்திந்திய
தொழில்நுட்பக் குழு (AICTE) அனுமதி வழங்காது எனக் கூறப்படுகிறது. ஆனால்,
உண்மை நிலை வேறு வகையாக உள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
எந்த ஒரு தேர்வையும் ஆங்கிலத்திலும் எழுதலாம். தாய்மொழியிலும் எழுதலாம் என
நடைப்படுத்திப் பல ஆண்டுகள் ஆகிறது. மேலும் "பல்கலைக்கழகம் விரும்பினால்,
புதிய உயர் தொழில்நுட்பக் கல்வியைத் தொடங்கலாம். அதற்கு அகில இந்தியத்
தொழில்நுட்பக் கவுன்சிலின் ( AICTE ) அனுமதி தேவையில்லை" எனத் திருச்சி
பாரதிதாசன் பல்கலைக் கழக வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது. அடுத்து, தாய்மொழிக் கல்விக்கு எதிராக இருப்பவர்கள்
சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை மேற்கோளாகக் காட்டித் தங்களது வாதத்திற்கு வலுச்
சேர்க்கின்றனர்.
அதாவது உலகு தழுவிய மனித உரிமைப் பிரகடனம் (மாணவர்களின்
உரிமைகளுக்கான ஒப்பந்தம்) 26 (3) ஆவது பிரிவு, தமது குழந்தைகளுக்கு எத்தகைய
கல்வியை வழங்க வேண்டும் என்பது குறித்துப் பெற்றோருக்கே முன்னுரிமை
வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் பிரிவை மேற்கோளாகப் பலரும்
காட்டுகின்றனர். அதன் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களது விருப்பப்படி
ஆங்கில வழிக் கல்வியே மாணவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்கின்றனர்
"கல்வித்தந்தையர்கள்".
ஆனால், அந்தப் பன்னாட்டு ஒப்பந்தத்தை நுணுகி
ஆராய்ந்தால், ஓர் உண்மை புலனாகிறது. அதாவது அதில் எத்தகைய கல்வியை அளிப்பது
( What kind of education ) என்பதைப் பற்றித்தான் கூறப்பட்டுள்ளதே தவிர,
எந்த மொழி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது பற்றி எந்தக் குறிப்பும்
அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியல் சாசனத்தின்
253-ஆவது பிரிவு இவ்விடத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அரசியல்
சாசனம் நாடாளுமன்றத்திற்கு வழங்கி உள்ள அதிகாரத்தின்படி 1992 செப்டம்பர் 11
- இல் மத்திய அரசாங்கம் கையெழுத்து இட்ட மனித உரிமைகள் ( குழந்தைகள் உரிமை
) பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தைச் செயற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில்
சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில்
இயற்றப்படாத நிலையில், மேற்படிச் சர்வதேச ஒப்பந்தத்தின் பிரிவுகள் இந்திய
மக்களைச் சட்டப்படி கட்டுப்படுத்தக் கூடியது அல்ல என்பதைத் தமிழறிஞர்
சு.நரேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கல்வி நிறுவனக் கட்டமைப்பு,
ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றைச் சரிசெய்ய அரசு, கல்விக்காகச் செலவிடும்
தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் கல்வியில் பயிற்சி மொழி பற்றித்தான்
மிக அதிக வழக்குகள் போடப்படுகின்றன. அவை நீண்டகாலம் நிறுவையிலும் உள்ளன.
எனவே இவற்றைத் தவிர்க்க, மிகத் திறமை வாய்ந்த வழக்குரைஞர் குழு ஒன்றை அரசு
உருவாக்க வேண்டும். வலுவான சட்ட விளக்கங்கள் தரப்படாததால், கல்வி சார்ந்த
பல வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தோல்வி அடைந்தது
கடந்த கால வரலாறாகும். எனவே, இதுகுறித்து அரசு, மிகவும் எச்சரிக்கையோடு
செயல்பட வேண்டும்.
தமிழ்வழிக் கல்விக்கு, மக்களிடையே நிலவும் ஆங்கில
மோகம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதுவும் ஒரு காரணம் என்பதை
மறுப்பதற்கு இல்லை. ஆனால், அது மட்டுமே காரணம் எனத் தனித்துச்
சுட்டிக்காட்ட முடியாது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், தமிழ்வழிக் கல்வி
குறித்துப் பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன என்பதைக் கருத்தில்கொள்ள
வேண்டும். மேலும், வேறு ஒரு மொழியைப் பயில்வதற்குத் தாய்மொழிக் கல்வியே
உறுதுணையாக உள்ளது என்பதை யுனெஸ்கோவின் பல்வேறு அறிக்கைகள் நிறுவுகின்றன.
தாய்மொழியில் கல்வி பயில வேண்டும் எனக் கூறினால், பிற மொழிகளை - குறிப்பாக
ஆங்கிலத்தை - புறக்கணிக்க வேண்டும் என்பது பொருளல்ல. அறிவுத்துறையிலும்,
வேலைவாய்ப்புச் சந்தையிலும் ஆங்கிலத்தின் இன்றியாமையாமையை அங்கீகரிக்க
மறுப்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. இன்றைய மெட்ரிகுலேசன்
பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற
விதியுள்ளது.
தமிழ் அல்லது தாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என
முதலில் அது திருத்தம் செய்யப்பட வேண்டும். மழலையர் வகுப்புகளில் ஆங்கிலப்
பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மழலையர் மற்றும் ஐந்தாம்
வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க
வேண்டும். அரசின் பயிற்று மொழிக் கொள்கையைப் பின்பற்றாத பள்ளிகள் ஒரு
குறிப்பிட்ட கால எல்லைக்குள் (எடுத்துக் காட்டாக மூன்றாண்டுகள்) மாற்றி
அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவிக்க வேண்டும். இதனை ஏற்காத
பள்ளிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று
மொழியாக இருக்கும் பிரிவுகளை ஆறாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக
(படிப்படியாக) நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே
பல்வேறு கல்வியாளர்களும், கல்வி ஆணையங்களும்கூட இத்தகைய சில பரிந்துரைகளை
வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்று மொழி குறித்த பிழையான
அணுகுமுறையால், தற்காலத்திய மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் போதிய
திறமையின்றி, அரைகுறையான அறிவையே பெற்று உள்ளதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள்
வெளிப்படுத்துகின்றன.
எனவே, இதுகுறித்து மிக அவசரமான, காத்திரமான நடவடிக்கைகள் தேவை. அதற்கு
அரசுதான் முன்கை எடுக்க வேண்டும். சிவில் சமூகம் அதற்கான அழுத்தத்தைத் தர
வேண்டும். இந்த முயற்சி வெற்றிபெற்றால், கவிஞர்கள் கனவு கண்டது போல்,
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்ற நிலை உருவாகும். [கட்டுரையாளர் -
தமிழியக்கச் செயற்பாட்டாளர்; தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,
தமிழ்நாடு ]
Dailyhunt