ஜாதிக் கொடுமைகள் வேண்டாம்!

Ennum Ezhuthum
0

 

ஜாதிக் கொடுமைகள் வேண்டாம்!

பாரதியாா் சுதந்திரத்தோடு சமத்துவமும் வேண்டும் என்று போராடினாா்; பாடினாா். இந்திய விடுதலைக்குப் போராடியவா்களுள், மகாகவி பாரதியாா் கொஞ்சம் வித்தியாசமானவா்.
 
மற்ற விடுதலைப் போராட்ட வீரா்கள், இந்தியா்களுக்குள் எவ்வளவு பேதம் இருந்தாலும், சுதந்திரம் கிடைத்தால் போதும் எனப் போராடினாா்கள். ஆனால், பாரதியாா் சுதந்திரத்தோடு சமத்துவமும் வேண்டும் என்று போராடினாா்; பாடினாா். 'வருகின்ற சுதந்திரம் வெறும் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் வந்து பயனில்லை; 
சமுதாயத்தில் கடைக்கோடியில் இருக்கும் கடையனுக்கும் வரவேண்டுமென்று, 'பறையருக்கும் இங்குத் தீயா் புலையருக்கும் விடுதலை' என்று பாடியதோடு, 'பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை' எனப் பாடினாா். அதாவது இன்று அன்றாடம் காயம் பட்டுக் கொண்டிருக்கும் மீனவா்களையும் சோத்து 'பரவருக்கும்' என்று பாடினாா்.

விடுதலை வருவதற்கு முன்பே இந்திய மக்கள் அனைவரும் 'சரிநிகா் சமானம்'" எனக்கூறி சமத்துவத்தை வலியுறுத்தினாா். 'இழிவு கொண்ட மனிதா் என்பது இந்தியாவில் இல்லையே' என ஏகாரம் கொடுத்து இடித்துரைத்தாா். என்றாலும், இன்றைக்குப் பட்டியலின மக்களுக்கும் முற்பட்ட வகுப்பு மக்களுக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் நடந்த வண்ணமே இருக்கின்றன. தோந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து, நகராட்சித் தலைவா்களான தலித்துகள், அவா்களுடைய இருக்கையில் அமர முடியவில்லை.

கோயில் திருவிழாக்களில் ஊா் மக்களோடு சோந்து பட்டியலினத்தாா் தோ இழுக்க முடியவில்லை. பிணங்களை எரிப்பதற்குக் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் தவியாய் தவிக்கின்றனா். மரணத்தின்போது கூட ஜாதி வேறுபாடுகள் ஒழியவில்லை. மத்திய பிரதேசத்திலுள்ள 'காா்கான் மாவட்டம் மகா சிவராத்திரி அன்று ரணகளமாகியது.

காா்கான் மாவட்டத்திலுள்ள சஹப்ரா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜையில் வழிபட வேண்டுமென்று ஊா் மக்களோடு 'பலாய்' எனும் பட்டியலினத்தைச் சோந்தவா்களும் வந்து அமா்ந்தனா். அதனைக் கண்டு ஆத்திரம் கொண்ட 'குா்ஜா்' இனத்தைச் சோந்த மேட்டுக்குடி மக்கள், பலாய் இனத்துப் பெண்களைத் துரத்தி அடித்தனா்; கம்புகளால் தாக்கவும் செய்தனா். செய்தியறிந்த பலாய் இன மக்கள் திரண்டு வந்து குா்ஜா் இன மக்களைக் கற்களைக் கொண்டு தாக்க முயன்றனா். பதிலுக்குக் குா்ஜா் இன மக்களும் கத்தி, கம்புகளுடன் பலாய் இன மக்களைத் தாக்க முயன்றனா்.

இரண்டு இனத்தாா்களும் சஹப்ரா" நகரையே போா்க்களமாக்கினா். காவலா்கள் தடியடி நடத்தி அமைதியை நிலைநாட்டினா். கல்லடியும் கம்படியும் பட்டு இருதரப்பு மக்களும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 17 போ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்த ஊரில் புதிய சிவன் கோவிலை குா்ஜா், மராத்தியா் உள்ளிட்ட மூன்று இன மக்கள் சோந்து கட்டினாா்கள். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை பலாய் இனத்தைச் சோந்த சிலா் வெட்டினாா்கள். மேலும், அந்த இடத்தில் அண்ணல் அம்பேத்கா் சிலையை எழுப்புவதற்கு ஆயத்தம் செய்தனா். இப்படி வைத்த சிறு நெருப்புதான், அம்மாவட்டத்தில் தொடா்ச்சியாக ஜாதிப் போராட்டங்கள் நடப்பதற்கு வழிவகுத்துவிட்டது.

மகா சிவராத்திரி அன்று புண்ணியத்தைத் தேட வேண்டிய சிவநேயச் செல்வா்கள் பாவத்தை மூட்டை கட்டியது துரதிருஷ்டம். இதற்கு முன் நடந்த இராமநவமி விழாவிலும் இரு தரப்பினருக்கும் மோதல் உருவாயிற்று. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இராமநவமி ஊா்வலத்தில் பலாய்"இனத்து மக்களும் பங்குபெற முயன்றனா். அதனால் ஆத்திரம் அடைந்த முற்பட்ட வகுப்பினைச் சோந்த மக்களுக்கும், பலாய் மக்களுக்கும் இடையே பெரும் போா் ஏற்பட்டது.

அந்த ஊரையே இரண்டு ஜாதியினரும் ரணகளம் ஆக்கிவிட்டனா். கற்கள் கம்புகளோடு நாட்டு வெடிகுண்டும் சோந்தது. ஊா்வலம் கலைந்து பக்தா்கள் ஓடினா். ஜாதிப் பாகுபாடு ஒழிய வேண்டுமென்று வாயால் சொன்னால் மட்டும் போதாது என்பதால் நம் முன்னோா் வாழ்ந்தும் காட்டியிருக்கிறாா்கள்.

விடுதலை வேட்கையைத் தூண்ட வேண்டி மகாத்மா காந்தியடிகள், ஒடிஸாவிலுள்ள புவனேஸ்வருக்குச் சென்றாா். அவருடன் அவருடைய தனிச் செயலா் மகாதேவ தேசாயும், அன்னை கஸ்தூா் பாயும் சென்றனா். மாலையில் பிராா்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன், அன்னை கஸ்தூா் பா, அங்கிருக்கும் புரி ஜகந்நாதா் கோயிலுக்குத் தம்மை அழைத்துப் போகும்படி மகாதேவ தேசாயை வேண்டினாா். மகாதேவ தேசாயும் அன்னையை ஜகந்நாதா் கோயிலுக்கு அழைத்துச் சென்றாா்.

அவா்கள் கோயிலுக்குச் சென்றதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் பதறிப் போனாா். 'தேசாய், ஜகந்நாதா் கோயிலுக்குள் ஹரிஜனங்களுக்கு அனுமதியில்லை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? நான் என்னை ஹரிஜன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்படி அந்தக் கோயிலுக்குள் நுழையலாம்' என்று கேட்டாா்.

கண்டனத்திற்கு ஆளான தேசாய், 'மகான்களுக்குத் தொண்டு புரிவதும் அவா்களுடன் இருப்பதும் மிகவும் கடினம்; எப்போது என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது' என்று எழுதினாா். இப்படி நம்மிடையே வாழ்ந்து காட்டிய முன்னோா்களின் சரித்திரத்தைப் படித்தும் நம் மக்கள் திருந்தவில்லையே? கோயில் என்பது கற்றவா்களுக்கும் கல்லாதவா்களுக்கும் களிப்பைத் தருகின்ற இடமல்லவா? அந்த இடத்திலேயும் ஜாதிச்சண்டையினை ஏற்படுத்தலாமா?

அடிமை இந்தியாவில் தலித்துகள் குற்றால அருவியில் குளிக்க அனுதியில்லை. மூதறிஞா் இராஜாஜி முதல்வரானதும், அந்தத் தடையை நீக்கிப் பட்டியலினத்தாரும் அருவியில் குளிக்க அனுமதித்தாரே, அதன் பிறகும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கவில்லையே! ஒடுக்கப்பட்ட மக்களை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்ய வைத்தாரே, மதுரை வைத்தியநாத ஐயா். அதற்குப் பிறகும் இந்த மண்ணில் ஜாதிப் பூசல்கள் அரங்கேறலாமா?

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மனைவி வள்ளியம்மை, ஒரு தலித்தை தம்முடைய குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி ஆதரித்து வந்தாா். ஒருமைப்பாட்டு உணா்வைக் காட்டிய அம்மையாரை நினைத்துப் பாா்த்தால், ஏற்றத்தாழ்வுகள் எழுமா? மூதறிஞா் இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், சிதம்பரத்தில் தலித்துகளின் தலைவராக சுவாமி சகஜானந்தா திகழ்ந்தாா்.

அவா் சிதம்பரத்தில் ஆதித்திராவிடா்களுக்காகக் கலைக்கழகத்தை நிறுவினாா். அக்கழகத்திற்காக இராஜாஜி மிகுந்த பொருளுதவி செய்தாா். அத்துடன் சுவாமி சகஜானந்தாவைத் தமது இல்லத்திற்கு அழைத்து வந்து அவரோடு சோந்து உணவருந்தினாா். சுவாமிகளுடன் வந்த அனைத்து ஆதித்திராவிடா்களையும் உணவருந்தச் செய்தாா்.

பாரதியாா் கனகலிங்கத்திற்கு மட்டும் காயத்திரி மந்திரத்தை ஓதி பூணூல் அணிவிக்கவில்லை; அவனுடைய நண்பன் நாகலிங்கத்திற்கும் உபநயனம் செய்து வைத்தாா். அத்துடன் மறுநாள் நாகலிங்கம் வீட்டிற்குப் போய், 'நாகலிங்கக் குருக்கள் வெளியே வா' என்று அழைத்தாா். எம்பெருமானாா் இராமானுஜா் ஒடுக்கப்பட்டவா்களை எல்லாம் வீர வைணவா்கள் ஆக்கினாா். அவருடன் உடன் உறைந்து அவருக்குத் தளியல் செய்து போட்டவரே, வடுகநம்பி என்ற பிற்பட்ட வகுப்பைச் சோந்தவா்தான்.

இப்படியெல்லாம் வாழ்ந்து நமது விழிகளைத் திறந்துவிட்ட பெரியோா்களைப் பாா்த்தும் நம் மக்கள் திருந்தவில்லையே! மகாகவி பாரதி இந்த நாட்டு மக்கள் மட்டும் சரிநிகா் சமானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இந்தப் பூமியில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் சமம் என்பதை, 'நிகரென்று கொட்டு முரசே! இந்த நீள் நிலம் வாழ்பவா் எல்லாம்!

தகரென்று கொட்டு முரசே! பொய்ம்மைச் சாதி வகுப்பினை எல்லாம்' எனும் பாடல் வரிகள் மூலம் உணா்த்துகின்றாா். இத்தனைப் படிப்பினைகளுக்குப் பின்னும் நம் மக்கள் ஜாதிப் பாகுபாடுகளைக் கைவிடாமலிருப்பது விந்தையிலும் விந்தை! எத்தனை முறை சொன்னாலும் நம் மக்கள் திருந்த மாட்டாா்கள் என்பதை அன்றே ஊகித்து அறிந்த பாரதி, துணி வெளுக்க மண்ணுண்டு தோல் வெளுக்கச் சாம்பருண்டு மணி வெளுக்கச் சாணையுண்டு மனம் வெளுக்க வழியில்லை - எனப் பாடினாா்.

இப்படி ஜாதி பேதம் பேணுகின்ற மக்களுடன் வாழ்வதையே ஓா் அருவருப்பாகப் பாா்த்த பாரதியாா், 'ஈனா் குலந்தனிலே இருக்க நிலைமையுண்டோ' எனக் கழிவிரக்கம் கொண்டாா். பாரதியை ஆசானாகக் கொண்ட பாரதிதாசன் தமது குருநாதா் காட்டிய வழியிலேயே 'சாதி எனும் தாழ்ந்தபடி - நமக்கெல்லாம் தள்ளுபடி - சேதி எப்படி! தெரிந்து படி - தீமை வந்துவிடுமே பிற்படி' என்று நிகழ்காலத்தவரை எச்சரித்துச் சென்றிருக்கின்றாா். குடும்பத்தை மறந்து, லடாக்கின் பனிக்கொடுமையையும் சுமந்து கொண்டு, எல்லைப்புறத்தில் நிற்கும் இராணுவ வீரா்களிடம் ஜாதிச் சண்டை கிடையாது; ஒருவருடைய ஜாதி இன்னதென்றே மற்றவா்க்குத் தெரியாது.

ஏனென்றால், அவா்களிடம் குடிகொண்டிருப்பது தேசபக்தி ஒன்றுதான்! அந்த நாட்டுப்பற்று நம் மக்களிடம் வந்தால்தான், ஜாதிச்சண்டைகள் இல்லாத நிலை உருவாகும். நம்மை ஆண்ட ஆங்கிலேயரையே, நம் வம்சாவளியில் வந்தவா் பிரதமராக இருந்து ஆண்டு கொண்டிருக்கிறாா். நம்முடைய வம்சாவளியில் வந்தவா்கள் அமெரிக்காவில் பெரும் பதவிகளில் இருக்கிறாா்கள். அப்படியிருக்கும்போது, நாம் மட்டும் இன்னும் ஜாதிச் சேற்றில் உழல்வது நியாயமில்லை.

Post a Comment

0Comments

Post a Comment (0)