சுகாதார உரிமைச் சட்டம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்!

Ennum Ezhuthum
0

 

சுகாதார உரிமைச் சட்டம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்!

ந்தியாவில் உரிய நேரத்தில் அவசர சிகிச்சைகள் கிடைப்பது அரிது. வர்க்கம், சாதி, இனம், மதம், பாலினம், நகரம் - கிராமம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகள் இதற்குத் தடையாக உள்ளன.

இந்தச் சூழலில், ராஜஸ்தான் மாநில அரசு கொண்டுவந்திருக்கும் 'சுகாதார உரிமைச் சட்டம்' (Right to Health Act - 2022) பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசரச் சிகிச்சைக்கான 'நம்மைக் காக்கும் 48' திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அதில் விபத்துதான் முதன்மையான அம்சம். ராஜஸ்தான் அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம் அதையும் தாண்டியது; ஆனால், முழுமையானதா?

சட்டத்தின் நோக்கம்: இந்தச் சட்டத்தின்படி, ராஜஸ்தான் மாநில அரசு, தனியார் மருத்துவமனைகள், அவசரச் சிகிச்சைகளை வழங்க வேண்டும்; மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவ மையங்களுக்கு மாற்றும்போது, அவசர ஊர்தி வசதி வழங்க வேண்டும்; இவற்றை மறுக்கும் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். நோய்த் தடுப்பு, சுகாதார மேம்பாடு, குணப்படுத்துதல் மற்றும் வலிநிவாரணச் சிகிச்சை போன்றவற்றை வழங்குவது உள்ளிட்டவை இச்சட்டத்தின் பிற நோக்கங்கள்.

நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு இன்று போதிய அளவில் இல்லை; போதாக்குறைக்குத் தனியார்மயம் வேறு. 2020இல் மட்டும், மருத்துவச் சிகிச்சை கிட்டாததன் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 45%. இப்படியான சூழலில், அவசரச் சிகிச்சைகளை வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தனியார் மருத்துவமனைகளுக்கும் உள்ளன. ஆனால், பல அரசு தனியார் மருத்துவமனைகள் அவசரச் சிகிச்சைகளை வழங்க மறுத்துவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண இச்சட்டம் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

அனைவருக்கும் இலவச சிகிச்சையா? சுகாதார உரிமை அனைவருக்கும் அவசியம். உலகச் சுகாதார நிறுவனமும் தொடர்ந்து அதை வலியுறுத்திவருகிறது. எனினும், ராஜஸ்தானின் இந்தப் புதிய சட்டம், சுகாதாரத்துக்கான உரிமையை, மருத்துவச் சிகிச்சைக்கான உரிமையாக மட்டுமே சுருக்கிவிட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் அனைவருக்கும், அனைத்து வகை சிகிச்சைகளும் இலவசமாகக் கிடைத்துவிடாது. உலகச் சுகாதார நிறுவனத்தின் வரையறையின் அடிப்படையில், உடல்ரீதியான, உளரீதியான, சமூகரீதியான முழுமையான சுகாதாரத்தை எல்லாம் இச்சட்டம் வழங்கிவிடாது. வெறும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு மட்டுமே உதவும்.

அரசு மருத்துவமனைகளில், அனைத்துச் சிகிச்சைகளும் முழுமையாக, இலவசமாக வழங்கப்படுவதை இச்சட்டம் உறுதி செய்யவில்லை. 'இலவசம் அல்லது நோயாளிகளின் சக்திக்கு ஏற்பக் கட்டணம்' என்கிறது. இலவச மருந்துகள், சிகிச்சைகள், பரிசோதனைகளும்கூடக் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே கிட்டும். அரசு மருத்துவமனைகள் வணிகமயமாவதை இச்சட்டம் தடுக்காது.

'மருத்துவக் காப்பீடு, சில சிகிச்சைகளுக்கு இலவசம், பிறவற்றுக்கு சக்திக்கேற்பக் கட்டணம்' என்றே சொல்கிறது. மருத்துவப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, நிரந்தரப் பணி, உழைப்புக்கேற்ற ஊதியம், பணி நேரம் போன்ற உரிமைகள் குறித்து இச்சட்டம் மௌனம் காக்கிறது.

மருத்துவர்களின் கருத்து எவையெல்லாம் 'அவசரச்சிகிச்சைகள்' என இச்சட்டத்தில் விளக்கப்படவில்லை. செலவுகளுக்கான பணத்தை மருத்துவமனைகளுக்கு அரசு எவ்வாறு அளிக்கும் என்பதும் குறிப்பிடப்படவில்லை. தவிர, 'அபராதம் கூடாது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரவர்க்கத்தின் தலையீடுகள் அதிகரிக்கும். நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனைகள் - மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்.

ஏற்கெனவே அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கே, கட்டுப்படியான கட்டணத்தை உரிய நேரத்தில் அரசு வழங்கவில்லை. பொருளாதார இழப்பு ஏற்படும்' என்றெல்லாம் தனியார் மருத்துவர்கள் விமர்சிக்கிறார்கள்.

மேலும், '50 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளை மட்டுமே இச்சட்ட வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும். அவசரச் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகள் மூலமே வழங்க வேண்டும்' என்று கூறும் தனியார் மருத்துவர்கள், 'அரசு தனது பொறுப்பைத் தனியார் மருத்துவமனைகள் மீது சுமத்துவது சரியல்ல. அரசமைப்பு வழங்கியுள்ள தொழில் செய்யும் உரிமைக்கு எதிரானது' எனக் கூறிப் போராட்டம் நடத்தினர். தற்போது அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

தார்மிக உரிமை இருக்கிறதா? அரசிடமிருந்து பல பெரிய தனியார் மருத்துவமனைகள் ஏராளமான சலுகைகளைப் பெறுகின்றன. நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு போன்ற சலுகைகளுடன் அரசின் மருத்துவக் காப்பீடு மூலமும் பலன் பெறுகின்றன. அவை, மருத்துவத் தொழில் மூலம் ஈட்டும் சொத்துகள் யாவும் மக்களிடமிருந்து வந்தவைதான். இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, அவசர நேரத்தில் சிகிச்சை வழங்க மறுப்பது சரியா என்பதுதான் கேள்வி.

மேலும், ராஜஸ்தானில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டதையும், அவற்றை நடத்த நிதியுதவி வழங்கப்பட்டதையும் அவற்றின் மூலம் லாபம் அடைந்ததையும் தனியார் மருத்துவர்கள் மறந்துவிட்டார்கள். நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்களும் மாவட்ட மருத்துவமனைகளும் இன்றைக்குத் தனியாருக்கு வழங்கப்படுகின்றன. இதனால் இளம் மருத்துவர்களுக்கு, பணியாளர்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

அரசு மருத்துவமனைகள் வணிகமயமாகின்றன. மருத்துவத் துறையே, மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட துறையாக, அமெரிக்க பாணியில் மாற்றப்படுகிறது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட மருத்துவர்களுக்கு மனமில்லை.

என்ன செய்ய வேண்டும்? தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் நடைமுறை என்பது, தனியார் துறையையே வலுப்படுத்தும்; பொது சுகாதாரத் துறையைப் பலவீனப்படுத்திவிடும். ஆயினும், அரசு மருத்துவக் கட்டமைப்புகள் போதிய அளவு இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனைகளையும் தற்காலிகமாகப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே, தனியார் மருத்துவமனைகளும் மருத்துவத் துறையினரும் பாதிக்கப்படாமல், அரசு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேவேளை, பொதுச் சுகாதாரத் துறையையும் போர்க் கால அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும். மருந்துகள், மருத்துவக் கருவிகளை அரசே உற்பத்தி செய்ய வேண்டும்.

ஏனெனில், ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் 55%ஐத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்துதான் இந்தியர்கள் செலவழிக்கின்றனர். மருத்துவச் செலவின் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் 6 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான அரசு நிதி ஒதுக்கீடு 1.2%தான். அதை 6%ஆக அதிகரிக்க வேண்டும். மருந்துகள், மருத்துவப் பொருள்கள், கருவிகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊதியங்களும் வாங்கும் சக்தியும் குறைந்துகொண்டே வருகின்றன.

அரசுகளின் கடமை: தேசிய சுகாதாரக் கொள்கை வரைவு அறிக்கை 2015இல், சுகாதாரத்தை அடிப்படைஉரிமையாக்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், தேசிய சுகாதாரக் கொள்கை 2017இல் அது இடம்பெறவில்லை. 15ஆவது நிதி ஆணையம் அமைத்த குழு, சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால், அப்பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில், வாழ்வதற்கான உரிமை - தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமையை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டக்கூறு 21இன்படி, வாழ்வதற்கான உரிமையில், சுகாதாரத்துக்கான உரிமையும் அடங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, சுகாதாரம் என்பதை மத்திய அரசும் இதர மாநில அரசுகளும் அடிப்படை உரிமையாக்க முன்வர வேண்டும்.

- ஜி.ஆர்.இரவீந்திரநாத் |மருத்துவர்; சமூக சமத்துவத்துக்கா ன டாக்ட ர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்; தொடர்புக்கு: daseindia@gmail.com

Post a Comment

0Comments

Post a Comment (0)