சங்கிலியை இழுத்தால் ரெயில் நிற்பது எப்படி?

asiriyarthagaval
0

 


‘எச்சரிக்கை சங்கிலி’ என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது. 

எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும்.

வெறும் ஒரு சங்கிலியைப் பிடித்து இழுத்து அத்தனை பெட்டிகள் கொண்ட ரெயிலையும் நிறுத்த முடிவது எப்படி?

 ரெயில் என்ற தொடர் பெட்டிகள், எஞ்சின் என்ற இயந்திரத்தால் இழுக்கப்படுகின்றன. அதை இயக்கும் ஓட்டுநர் எஞ்சின் பெட்டியில் இருப்பார். தொடர் வண்டி சரியான பாதையில் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க கடைசி பெட்டியில் கார்டு எனப்படும் பாதுகாவலர் இருப்பார். ஆனால் இடையிலுள்ள பெட்டிகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு அவசரம் ஏற்பட்டாலோ என்ன செய்வது?

 இதன் காரணமாகத்தான், ஒவ்வொரு பெட்டியிலும் 'எச்சரிக்கை சங்கிலி' வைக்கப்பட்டு இருக்கிறது. ஆபத்து நேரங்களிலும், உரிய காரணத்துடனும் ரெயில் நிறுத்தப்படலாம். ஆனால் விளையாட்டுக்காகவோ, காரணமின்றியோ ரெயில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். சரி, ஒரு சங்கிலியின் மூலமாக ரெயில் எப்படி நின்றுவிடுகிறது? 'எச்சரிக்கை சங்கிலி' என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது. இதற்காக எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும். முதன்மை காற்றுக் கொள்கலனுக்குச் செல்லும் காற்றை இந்த கம்ப்ரெசர் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். 

அந்த கொள்கலனில் இருந்து அனைத்து பெட்டிகளுக்கும் முதன்மை பிரேக் குழாய் செல்லும். ஒவ்வொரு பெட்டியின் கீழும் உள்ள பிரேக்கை கட்டுப்படுத்தும் துணை காற்றுக் கொள்கலன்களுக்கும் இந்த கம்ப்ரெசரே காற்றை அனுப்புகிறது. ஒவ்வொரு பிரேக் கருவியிலும் பிரேக்கை நிறுத்தும் வகையில் அழுத்தப்பட்ட காற்று பிரேக் சிலிண்டருக்குச் செல்வதை, ஒரு சிறிய வால்வு தடுத்துக் கொண்டிருக்கும். 

இதனால் சக்கரத்தை நிறுத்தும் வேலையை பிரேக் சிலிண்டர்கள் செய்வதில்லை. ஆனால் அதேநேரம் ஆபத்து எச்சரிக்கை சங்கிலியை யாராவது பிடித்து இழுத்தால், அது முதன்மை பிரேக் குழாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக, வால்வு பிஸ்டன் திறந்து பிரேக் சிலிண்டருக்குள் அழுத்தப்பட்ட காற்று வரும். 

இதனால் பிரேக் பிஸ்டன் இழுக்கப்பட்டு சக்கரங்களின் மீது பிரேக் கட்டை அழுத்த, சக்கரங்கள் நின்று விடுகின்றன. ஒட்டுமொத்த ரெயிலும் நின்றுவிடுகிறது. உடனடியாக எஞ்சின் ஓட்டுநரும், கார்டும் எந்தப் பெட்டியில் சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அந்தப் பெட்டிக்கு ஓடி வருவார்கள். ஏன் சங்கிலியைப் பிடித்து இழுத்தார் என்று சம்பந்தப்பட்டவர் விளக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம்தான்.


Post a Comment

0Comments

Post a Comment (0)