வேலையின்மையை வெல்வோம்

Ennum Ezhuthum
0

 

வேலையின்மையை வெல்வோம்
டந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, டி.சி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகேந்திரா, அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வளாகங்களில் நேர்முகத் தேர்வு நடத்தி தங்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்தின.
 
தற்போது சர்வதேச அளவில் ஐ.டி. நிறுவனங்களில் உபரியாக பணியாளர்கள் உள்ளதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது 12,000 பணியாளர்களையும், விப்ரோ நிறுவனம் 450 பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. சாப் (எஸ்.ஏ.பி.)நிறுவனம் உலக அளவில் 3,000 அல்லது 2.5% பணியாளர்களையும், ஐ.பி.எம். 3,900 பணியாளர்களையும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரையில் சுமார் 2 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. இவர்களில் 30 % முதல் 40 % பேர் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அடுத்த ஆறு மாதங்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பணியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது . நம் நாட்டில், 2018 -19 நிதி ஆண்டில் வேலையின்மை 5.8 % ஆக இருந்து, 2020-21 நிதி ஆண்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. எனினும் வேலையின்மை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளதை மறுக்க இயலாது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக, சமூக பாதுகாப்பிற்காக நிறுவியுள்ள 'இஷ்ராம்' செயலியில் டிசம்பர் 2022 வரை சுமார் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலையில்லாதவர்களே. தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக சுமார் 67.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை அறிவியல், சட்டம் போன்ற படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களும் அடங்குவர்.

அரசு வேலைக்காக பதிவு செய்திருப்பவர்களில் சுமார் 28 லட்சம் பேர் 19 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களே. வேலையின்மையைக் குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் பத்து லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்காக 'ரோஜ்கர் மேளா' எனும் வேலைவாய்ப்பு திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமரால் தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள வேலையற்றோர் எண்ணிக்கையை பார்க்கும் போது நிரப்பப்பட உள்ள பத்து லட்சம் அரசுத்துறை பணியிடங்கள் என்பது மிக சொற்பமே.

மேலும், தற்போதுள்ள நிதிநெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு இடைக்காலத் திட்டமாக, பெரும்பான்மையான மாநிலங்கள், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்களுக்குரிய நிதி சார்ந்த பலன்கள் தருவதை சற்றே தாமதப்படுத்துவதற்காக அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது. அரசுத் துறைகளில் சில நூறு காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுத் துறைகளிலும் அவ்வப்போது ஆள்குறைப்பு செய்யப்படுகிறது. இது போன்ற சூழலில், அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை.

எனினும் அரசு வேலைக்கே பெரும்பாலான இளைஞர்கள் ஏங்குகின்றனர். இதனை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசு வேலை வாங்கித் தருகிறோம், வெளிநாட்டில் ஆயிரக்கணக்கான ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று வேலை தேடும் இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சிலர் தாங்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்க வைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்று பெரும் தொகையை தர விரும்பும் பெற்றோர்கள், அத்தொகையை முதலீடாக வைத்து தம்பிள்ளைகள் தொழில் முனைவோராக வேண்டும் என ஆலோசனை வழங்கி வழிகாட்ட முன் வருவதில்லை.

அரசு வேலை அரிதாகி வரும் இக்காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களிலும் பணிப்பாதுகாப்பு என்பது இல்லாத நிலையில், சுயதொழில் முனைவோராக மாறுவதே சிறந்ததாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மேக்அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலையில்லா திறமையான இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்கமாகும். பிரதமரின் முந்த்ரா திட்டத்தின் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் குறு, சிறு தொழில் தொடங்குவதற்காக ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.

2023-24 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் இளம் தொழில் முனைவோர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வண்ணம் வேளாண் ஊக்குவிப்பு நிதி ஏற்படுத்தப்படும் என்பதோடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க மூலதன செலவுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான அரசின் திட்டமாகும். 'டிரன்ஸ் யூனியன் சிபில்' நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களே வங்கிகளில் அதிகம் கடன் வாங்குகின்றனர். இவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டுக்கு முன் 38 %-ஆக இருந்தது, தற்போது 43%-ஆக உள்ளது. தொழில் தொடங்க வங்கிகள் தரும் கடன், அரசின் மானியம் ஆகியவற்றோடு சரியான திட்டமிடல், தன்னம்பிக்கை கொண்டு இளைய தலைமுறையினர் சிறந்த தொழில் முனைவோராகி வேலை தேடும் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)