மனமும் இதயமும்

Ennum Ezhuthum
0




பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். 

சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான். அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம்.

 மனம் என்பதற்கு இன்னொரு சொல்லாகவே இதயம் என்ற சொல் பயன்பட்டு வருகிறது. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்துவிட்டேன் என்றுதான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். அங்கு தொலைந்தது மனம்தான். இரக்கப்படுவது மனதுதான். ஆனால் இரக்கமில்லாதவனிடம் 'இதயமே இல்லையா உனக்கு?' என்று கேட்கிறோம். அதே போல் உலகெங்கிலும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எமோஜி ஹார்டீன் அதாவது இதயம் ஆகும். 

சமூக ஊடகங்களில் இப்போதெல்லாம் வெறும் நீலநிற லைக்கைவிட சிகப்பு நிற இதயக் குறியீடே பெரிதும் விரும்பப்படுகிறது. அதாவது உணர்வுகளை வெளிப்படுத்துவது இதயம்தான் என்னும் பொருளில் இதயத்தின் அடையாளமாக ஹார்டீன் எமோஜி பயன்படுத்தப்படுகிறது. நமது இதயம் அந்த ஹார்டீன் படம் போல் அழகாக இருக்காது என்பது வேறு விஷயம். உண்மையிலேயே உணர்வுகளைத் தோற்றுவிப்பது இதயம் அல்ல. நமது மனதின் இருப்பிடமான மூளைதான் அது. பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான். 

ஆனாலும் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம். உண்மையில் இரண்டும் மூளையில்தான் நடக்கிறது. ஆனாலும் மனதில் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முக்கிய உறுப்பாகவும் அவ்வுணர்வுகளால் பாதிக்கப்படும் பிரதான உறுப்பாகவும் இருதயமே இருக்கிறது. 

பயப்படுவது மூளையாக இருந்தாலும் அந்த பயத்தால் அதிகமாகத் துடிப்பது இதயமாகத்தான் இருக்கிறது. அதே போல் பதட்டம் அதிகமாகும் போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது . 

இதுவும் இருதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆக மனதில் ஏற்படும் மாறுதல்கள் இதயத்தில் வெளிப்படுகிறது. இது எதனால் நடைபெறுகிறது? நம்முடைய உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளையும் நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. அதே போல் இதயத்தையும் நரம்புகள் கட்டுப்படுத்துகின்றன. தன்னிச்சையாக இல்லாமல் அனிச்சையாக கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் இதனைச் செய்கிறது. பதற்றம் அடையும் போது மூளையிலிருந்து இருதயத்துக்குத் தகவல்கள் செல்கின்றன. ஏன் பதட்டப்படும் போது இருதயம் அதிகமாகத் துடிக்க வேண்டும்?

 பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு மனிதனுக்கு இருந்த இரண்டே பிரச்சனைகள்தான். ஒன்று உணவு தேடுதல், இன்னொன்று உணவாகிவிடாமல் தப்பித்தல். இந்த இரண்டுக்கும் அவன் ஓட வேண்டும். அதற்கு அவனது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக இருதயம் வேகமாகத் துடிக்கிறது. அதற்கு அட்ரீனலின் என்ற வேதியல் சுரப்பு சுரக்கும். அந்தக் காலத்தில் ஈ.எம்.ஐ பிரச்சனை, போட்டித் தேர்வுகள் , மாதாந்திர டார்கெட் என வேறு எந்த டென்ஷனும் கிடையாது. ஒரே பிரச்சனையான மிருகங்களின் தாக்குதலுக்கு ஓட வேண்டும். 

அவ்வளவுதான். ஆனால் தற்காலத்தின் நெருக்கடிகள் உடல் சார்ந்தவை அல்ல. பெரிதும் மனம் சார்ந்தவை. ஆனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போதும் நம் உடல் ஆதி மனிதனின் உடல் போன்றே எதிர்வினை ஆற்றுகிறது. 

ஆகவேதான் மன அழுத்தத்தினால் இருதயமும் பாதிக்கப்படுகிறது. அதிகமாகக் கவலை பதட்டப்படுவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதே போல எல்லாமே மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆளுமை கொண்டவர்களுக்கும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 

அதீதக் கவலை மற்றும் பதற்றத்தினால் மாரடைப்பு மட்டுமின்றி இருதயத் துடிப்பு தாறுமாறாகப் போகும் arrhythmia பிரச்சனைகளும் ஏற்படலாம். நேரடியாக மட்டுமின்றி மன அழுத்தத்தினால் தூக்கமின்மை ஏற்படும், உணவுக்கட்டுப்பாடின்றி உண்பார்கள் சிலர், காஃபீ டீ அதிகம் குடிப்பது, சிகரெட் மது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

 இவை அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இருதயத்தைப் பாதிக்கக் கூடியவை. மனஅழுத்தத்தினால் இருதயம் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் சில பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 1. உடற்பயிற்சி மிக முக்கியம். மனதுக்கும் நல்லது இருதயத்துக்கும் நல்லது. 

2. தூக்கமும் மிக முக முக்கியம். நீண்ட நேரம் கண்விழித்திருப்பது இதயத்திற்குக் கெடுதி தருவது. 

3. ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் உங்களுக்கே உங்களுக்காக.

 4. சின்ன விஷயங்களுக்காக பெரிதாகக் கவலைப்படாதீர்கள். 

5. சிகரெட், மது போன்ற போதைப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிக்காதீர்கள்.

 6. மன அழுத்தம் இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.

 

Post a Comment

0Comments

Post a Comment (0)