சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!
ஒரு ஏழை பொன் (தங்கம்) வாங்க நினைத்தால், அவனால் முடிவதில்லை. காரணம் அவன் வாங்கும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் அதன் விலை. எனவே பொன் அவனுக்குக் கிடைக்காது !
ஆனால் அவன் விரும்பும் ஒரு செயலை நிறைவேற்றிக் கொள்வதற்கு புதன்கிழமை தான் நல்ல நாள் ; புதன் தான் வேண்டும் என்று நினைத்தால் அவனுக்குப் புதன் கிடைத்துவிடும்.
அப்படியென்றால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு என்ன பொருள் ?
சூரியக் குடும்பத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கோள்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். புதனும் அவற்றில் ஒன்று !
கோள்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவற்றின் ஒளி (வடிவம்) சூரிய ஒளிக்கு முன் எடுபடுவதில்லை. புதன் 29 பாகைகளுக்கு மேல் விலகிச் செல்வதில்லை என்பதால் அது சூரியனுக்கு அருகிலேயே எப்போதும் இருக்கிறது.
எனவே அதன் ஒளி சூரிய ஒளியால் அமுக்கப்பட்டு விடுகிறது. ஆகையால் புதனை நாம் பார்க்க முடிவதில்லை! ஒரு ஆண்டில், 4 மாதங்கள் மட்டும் சூரிய எழுகைக்குச் சற்றுமுன் புதன் கீழ்த்திசையில் எழுவதால் அது நம் கண்களுக்குச் சில மணித்துளிகள் மட்டும் தெரியும்.
சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை! ஆண்டின் கடைசி 4 மாதங்களில் சூரிய மறைவுக்குச் சற்றுப் பின்பே புதன் மறைவதால் மேற்றிசையில் ஒருசில மணித் துளிகள் மட்டும் புதன் நமது கண்களுக்குத் தெரியும் !
ஒரு ஆண்டில் நான்கு மாதங்களுக்குப் புதனைப் பார்க்கவே முடியாது. காரணம் புதனின் உலா சூரியனுடனேயே நிகழ்கிறது; எட்டு மாதங்களில் சில நிமிடங்களுக்கு மட்டுமே பார்க்கலாம்.
அந்த சில நிமிடங்களிலும் மேகம், பனி, மழை போன்றவை குறுக்கிட்டால் வாய்ப்பிருந்தும் பார்க்க முடியாது ! இதனால் தான் பணமிருந்தால் பொன் கூட கிடைத்துவிடும்.
ஆனால் புதன் கிடைப்பது அரிது என்னும் பொருளில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று நம்முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் !