கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட்

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 



கிளெய்ம் மறுப்பு - புதிய உடல்நலக் காப்பீடு நிறுவன இயக்குநருக்கு பிடிவாரண்ட் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (Rejection of Claims - Warrant against Director of New Health Insurance Scheme Company - Consumer Court orders)...


அரசுப் பள்ளி ஆசிரியை தான் எடுத்திருந்த புதிய உடல்நலக் காப்பீட்டில் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்குக் கிளெய்ம் தரப்படாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு பிடிவாரண்ட் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் பாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் யுனைட்டட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கான செலவை தன்னுடைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் கிளெய்ம் செய்துள்ளார் பாரதி.


ஆனால் இவருடைய புதிய உடல்நலக் காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசிக்கு டிபிஏ-வாக இருந்த எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளைத் தர மறுத்துள்ளது. இதனால் கடந்த 2020ல் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தனர்.


அதன்படி பாரதிக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டால் பாரதிக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


ஆனால் உத்தரவின்படி எம்டி இந்தியா ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பாரதிக்கு தரவேண்டிய தொகையைத் தராததால் மீண்டும் நுகர்வோர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகததால் அந்நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை நுகர்வோர் நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்பதை பாரதி நிரூபித்திருக்கிறார்.



ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 28, March 2025