“நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை” என ஒரு பழமொழி உண்டு.
தன்னிடம் இருந்த கருப்பின அடிமை ஒருவரை விடுவிக்கிறார் ஒரு அமெரிக்கர். அவர் பூர்வகுடி பெண் ஒருவரை மணக்கிறார். இருவருக்கும் பால் கஃபி எனும் ஒரு மகன் பிறக்கிறான். அடிமை முறையும், இனவெறியும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் அவரது தந்தை தன் மனைவியின் பூர்வகுடி நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார்.
பெரும் பணக்காரர் ஆகிறார். பால் கஃபி அடிமையாக இருக்கும் கருப்பின மக்களை காப்பற்ற ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். காசு கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்குகிறார். அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி ஆப்பிரிக்காவுக்கு அனுப்புகிறார். அங்கே சென்ற கப்பலின் கேப்டன் மேற்கு ஆப்பிரிக்காவில் மலிவாக இடம் வாங்கி, வீடுகளை கட்டி அவர்களை அங்கே குடியேற்றுகிறார். லைபிரியா என அதற்கு பெயர் இடப்படுகிறது.
அதன்பின் அடிமை முறையை ஒழிக்க நினைத்த பல பெரும்பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்த புராஜக்டில் ஈடுபடுகிறார்கள். அடுத்த சில பத்தாண்டுகளில் 1848 வரை பல அடிமைகள் விலைக்கு வாங்கபட்டு லைபிரியாவுக்கு கொண்டு செல்லபடுகிறார்கள்.
1848ல் லைபிரியாவுக்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்கிறது. விடுதலை பெற்ற முன்னாள் அடிமை ஒருவர் அதிபர் ஆகிறார். அமெரிக்க அரசியல் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து லைபிரிய சட்டம் எழுதபடுகிறது. அங்கேயும் ஒரு வெள்ளை மாளிகை, அமெரிக்க பாராளுமன்றம், ஜனாதிபதி மாதிரி அமைப்புமுறை. அதன்பின் வசந்தம் பூத்துகுலுங்கியதா? அடிமைகள் வாழ்வு சிறந்ததா? அங்கே நிலம் வாங்கபட்டாலும் அங்கே பூர்வகுடி ஆப்பிரிக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள்.
விடுதலை பெற்ற கருப்பர்கள் தம்மை லைபிரியர்கள் என அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும், அமெரிக்க நாகரீகத்தில் ஊறி இருந்தார்கள். அவர்கள் செய்த முதல்வேலை பூர்வகுடிகளுக்கு ஓட்டுரிமை இல்லை என்றதும், பூர்வகுடிகள் லைபிரியர்களை மணக்க தடை விதித்து சட்டம் இயற்றியதும்தான். தென்னாப்பிரிக்காவில் இருந்தது போல அபார்தீட் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.
லைபிரியர்களுக்கு தனி குடியிருப்பு, பூர்வகுடிகள் உள்ளே நுழையகூடாது. வேலைவாய்ப்புகள் மறுப்பு. தனி, தனி பள்ளிக்கூடங்கள், சர்ச்சுகள். அடுத்த 120 ஆண்டுகளுக்கு அமெரிக்க-லைபிரியர்கள் தான் தொடர்ந்து அதிபர்களாக இருந்தார்கள். 1980 வாக்கில் மிகப்பெரிய பூர்வகுடி புரட்சி நடந்தது. அன்றைய ஜனாதிபதியும், மந்திரிகளும், எம்பிக்களும் ஒட்டுமொத்தமாக பூர்வகுடிகளால் கொல்லப்பட்டார்கள்.
அடுத்த 23 ஆண்டுகள் தொடர்ச்சியான உள்நட்டுபோர். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். 2003ம் ஆண்டுதான் ஒருவழியாக பிரச்சனைகள் ஓய்ந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. "நரகத்தின் பாதைகள் நல்லெண்ணத்தால் நிரம்பியவை" என ஒரு பழமொழி உண்டு. தன் நல்ல எண்ணம் இத்தனை பெரிய தீமைகளுக்கு வழிவகுக்கும் என பால் கஃபி நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்.