அடக்கம் குறித்த கவிஞர் வாலியின் 4 பதிவுகள்

Ennum Ezhuthum
0

 

அடக்கம் குறித்த கவிஞர் வாலியின் 4 பதிவுகள்

கவிஞர் வாலி பதிவு செய்ததாக முகநூலிலும் புலனத்திலும் வந்த இந்தப் பகிர்வின் பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். மனதைக் கனக்கச் செய்த பகிர்வுப்பதிவு இது. அடிக்கடி நாம் படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டியதுமான பதிவு என்றும் இதனைச் சொல்லலாம்.

"அடக்கமாகும் வரை, அடக்கமாக இரு" என்று தொடங்குகிறது இப்பதிவு. இப்பதிவில் நான்கு நபர்கள் காட்டப்படுகிறார்கள். அதன் பிறகுதான் அந்த நான்கு நபர்களும் யார் என்பது சொல்லப்படுகிறது. முதலில் வாலி குறிப்பிடும் அந்த நான்கு நபர்களைப் பார்த்து விடுவோம்.

1) முதல் நபர் :

 “தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம். இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!” - இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும்போதெல்லாம் வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்! அவருக்கா இப்படியொரு சிரமம்!

2) இரண்டாவது நபர் :

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’ செய்து கொண்டு இருந்தபோது, கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர், "ஹாய் வாலி!" என்று இறங்கி வருகிறார். சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555. அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!'' எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்,

சிவாஜி படங்களில் நடித்த போது அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?!

3) மூன்றாவது நபர் :

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி. பல பெரிய தயாரிப்பாளர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில்  காத்திருந்த காலம் உண்டு. என்னைப்பார்க்க வந்தவர், '"வாலி சார்! எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.

4) நான்காவது நபர் :

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,  "நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன். “ஓ நீங்கதான்  வாலியா?” என்று என் கைகளை பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போனேன். அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில் நிலையத்தில், ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ, அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல், தனியாக  அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது. அந்தப் பழைய நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறேன்.

இப்படி அந்த நான்கு நபர்கள் பற்றியும் எழுதி விட்டு அந்த நான்கு நபர்கள் யார் என்பதை வாலி சொல்கிறார். அந்த நான்கு நபர்கள் யாரென்றால்,

1)  கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு இளங்கோவன்.

2) வாலியிடம் சிகரெட் கேட்டவர் திரு சந்திரபாபு.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்  நடிகையர் திலகம் திருமதி சாவித்திரி.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

“இவர்களை விடவா நான் மேலானவன்? ஆகவே அடக்கமாகும் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று வாலி எழுதுகிறார்.

ஒரு நல்ல பகிர்வுப் பதிவு அல்லவா! மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் இப்பதிவைப் பகிரலாம். படித்துப் பயன் பெறலாம்தானே!

*****

Post a Comment

0Comments

Post a Comment (0)