சூரிய குடும்பத்தில் அதிக நிலாக்கள் கொண்டது வியாழன் என்பது தெரிய வந்துள்ளது. அங்கு புதிதாக 12 நிலாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூரிய குடும்பத்தில் இதுவரை அதிக நிலாக்கள் சனி கிரகத்தில் தான் இருந்தன. அங்கு 83 நிலாக்கள் உண்டு.
தற்போது வியாழன் கிரகத்தில் புதிதாக 12 நிலாக்கள் இருப்பதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் 80 நிலாக்கள் கொண்ட வியாழனில் தற்போது 92 நிலாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலாக்கள் கொண்ட கிரகமாக வியாழன் முதல் இடம் பிடித்து உள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த சனி தற்போது 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சர்வதேச வானியல் ஒன்றியத்தின் கார்னகி மையத்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஸ்காட் ஷெப்பர்ட் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
கடந்த 2021 மற்றும் 2022ல் ஹவாய் மற்றும் சிலியில் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்ட போது வியாழன் கிரகத்தில் புதிதாக 12 நிலாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த புதிய நிலாக்கள் 1 கிலோமீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரையிலான அளவில் இருக்கும் என்று தெரிவித்த அவர் எதிர்காலத்தில் இந்த புதிய நிலவுக்களை நெருக்கமாக படம் பிடிக்க முடியும் என்று கூறினார்.
வருகிற ஏப்ரல் மாதம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகம் மற்றும் அதன் மிகப்பெரிய பனிக்கட்டி நிலவுகள் சிலவற்றை ஆய்வு செய்ய ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. அடுத்த ஆண்டு நாசா அதே பெயரில் வியாழனின் நிலவை ஆராய்வதற்காக முடிவு செய்துள்ளன.