ஓர் உளவியல் டிப்ஸ்!
எல்லா
பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம்
பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான்
வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும்
மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள்.
இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.
பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள்...
உளவியல் அறிவோம்!
இதுபோல
பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது
சற்று சிரமமான ஒன்று. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கூட பாதிக்கப்படலாம்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கு எவையெல்லாம் காரணமாக
இருக்கலாம், குழந்தைகள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவார்கள், அதை
எப்படிச் சரிசெய்வது எனப் பார்ப்போம்.புதிதாகப் பள்ளியில் சேரும்போது, சில
குழந்தைகள் அந்தப் புதிய சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது
அடம்பிடிப்பார்கள். என்றாலும், தொடர்ச்சியாக 20 நாட்கள் பள்ளி செல்லும்
காலத்தில் அவர்களுக்கு அந்தச் சூழல் பழகிவிடும். அதன் பின்னர் ஏதேனும் ஒரு
சூழலில் பள்ளி செல்ல மீண்டும் அடம்பிடிக்கலாம்.
சமாதானம் செய்து
அனுப்பிவைத்தால் சூழலை ஏற்றுக்கொள்வார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால்,
ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் திடீரென்று பள்ளிக்குச் செல்ல
மறுத்து, சில உடல்நிலைக் காரணங்களைச் சொல்லி, தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க
முயல்வார்கள். ஏதோ உடல்நல பாதிப்பு என நினைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால், எல்லாம் நார்மலாக இருக்கும். இதுவே
குழந்தைகளின் அன்றாட நிகழ்வாகும்போது பெற்றோர் தங்கள் குழந்தையின்
செயல்பாடுகளை அவசியம் ஆராய வேண்டும்.
பள்ளிக்குச் செல்ல மறுப்பதற்கான காரணங்கள்!
பள்ளிக்குச்
செல்வதால் அம்மாவைப் பிரிய வேண்டியிருக்கும், இதனால் தனக்கோ, தன்
அம்மாவுக்கோ ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என குழந்தை பயத்துக்கு ஆளாகலாம்.
அதை அவர்களுக்கு வெளிப்படுத்தத் தெரியாது. அதனால் பள்ளிக்குச் செல்ல
மறுத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எனவே, இது 'ஸ்கூல் போபியா'
கிடையாது; பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கான பயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சில
நேரங்களில் தொலைக்காட்சிகளில் பார்க்கும் சில சம்பவங்கள்கூடக்
குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். உதாரணமாக, தொலைக்காட்சியில் ஒரு
விபத்தைக் காண்கிறார்கள் எனில், தன் குடும்பத்துக்கும் இதுபோல ஏதாவது
நடந்துவிடும் என்ற பயத்தில், பெற்றோரைப் பிரிந்து பள்ளி செல்ல
மறுப்பார்கள். இதுவும் ஸ்கூல் போபியா கிடையாது; பெற்றோரைப் பிரிந்து
செல்வதற்கான பயம். சில குழந்தைகள் மென்மையான மனம்கொண்டவர்களாக
இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் பிற குழந்தைகளின், ஆசிரியர்களின், ஸ்கூல்
வேன் டிரைவர், ஆயா ஆகியோரின் கேலி, கிண்டல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ
ஆளாகியிருக்கலாம். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுக்கலாம்.
உடல்ரீதியான
பாலியல் சீண்டலுக்கும் ஆளாகியிருக்கலாம். தான் பள்ளி சென்றவுடன் தன் தம்பி
அல்லது தங்கை மட்டும் அம்மாவுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல், தானும்
வீட்டிலேயே இருக்கிறேன் என அடம்பிடிப்பார்கள் சிலர். சில குழந்தைகளுக்குக்
குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் கற்றல் குறைபாடு ஏற்படலாம். இதனால்
அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. பள்ளியில் ஆசிரியர்களும்,
வீட்டில் பெற்றோர்களும் இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளைக்
கண்டிக்கும்போது பள்ளிக்குச் செல்ல அவர்கள் நிச்சயம் மறுப்பார்கள்.
உடல்நிலை
பிரச்னை அல்லது அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் நீண்ட நாட்கள்
விடுமுறையில் இருந்த குழந்தைகளுக்கு, மீண்டும் பள்ளிச் சூழலை
ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்ல மறுத்து
அடம்பிடிப்பார்கள்.
நடவடிக்கை வெளிப்பாடு!
குழந்தைகள்,
தங்களுக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்பதை நேரடியாக
ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மாறாக, பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில்
`வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிறது, தலை வலிக்கிறது' போன்ற உடல்ரீதியான
காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்க முயல்வார்கள். 'சரி லீவ் எடுத்துக்கோ'
என பெற்றோர் சொன்ன சில மணி நேரத்தில் இயல்பான சூழலுக்கு வந்துவிடுவார்கள்.
மனரீதியான
பாதிப்பு ஏதேனும் அடைந்திருந்தால், தூக்கத்தில் அது அலறல்களாக
வெளிப்படும். ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களைப் பற்றி வீட்டில்
அடிக்கடி குறை கூறலாம். பள்ளி சார்ந்த செயல்பாடுகளான வீட்டுப்பாடம்
எழுதுவது, பாடம் படிப்பது போன்றவற்றை வீட்டிலிருந்தே தான் செய்துகொள்வதாகச்
சொல்வார்கள்; கெஞ்சுவார்கள்.
குழந்தைகள் இதுபோன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் உடனே இதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
தீர்வுகள்!
பள்ளி
செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'நீ ஸ்கூலுக்கு கண்டிப்பாகப் போகணும்'
என வற்புறுத்தாமல், அவர்கள் ஏன் அடம்பிடிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள்
யோசிக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் அடிக்கடி பள்ளி செல்ல மறுக்கிறார்கள்
என்றால், முதலில் உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா எனக் குழந்தைகள்நல
மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். அப்படி பாதிப்பு இருந்தால் உரிய
சிகிச்சை வழங்கி, முழுமையாகக் குணப்படுத்தி, அதன் பிறகு பள்ளிக்கு
அனுப்பலாம்.
சில குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாலியாக
விளையாடலாம்; டி.வி பார்க்கலாம் என்றும்கூட பள்ளி செல்ல மறுப்பது உண்டு.
எனவே, அவர்கள் விடுப்பு எடுக்கும் நாட்களில் டி.வி பார்க்கவும்,
விளையாடவும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தான் நினைத்தது நடக்கவில்லை
எனும் பட்சத்தில் மறுநாள் அவர்களே ஸ்கூலுக்குக் கிளம்பிவிடுவார்கள்.
`ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டாலே மிரட்சியுடன் இருக்கிறார்கள் என்றால்,
அவர்களின் வகுப்பு ஆசிரியரை அணுகி உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளின் கேலி,
கிண்டல், மிரட்டல்களுக்கு ஆளாகிறதா என்பதை விசாரித்துத் தீர்வு காணுங்கள்.
பெற்றோரைப்
பிரிய இயலாமல் பள்ளி செல்ல மறுக்கிறார்கள் எனில், பெற்றோரிடமிருந்து
குழந்தை விலகியிருக்கச் சிறிது சிறிதாக எப்படிப் பழக்கப்படுத்தலாம் என
ஆசிரியர்களுடன் கலந்து பேசலாம். பள்ளி ஒத்துழைக்கும் பட்சத்தில்
குழந்தையுடன் பெற்றோரும் சில தினங்கள் வகுப்பறையில் அமரலாம். அதன் பின்னர்
சில தினங்கள் குழந்தையை வகுப்பறையில் அமரச் சொல்லி, 'அம்மா ஸ்கூல்லதான்
இருப்பேன், லஞ்ச் டைம்ல பார்க்கலாம்' எனச் சொல்லி பள்ளியில்
காத்திருக்கலாம்.
இப்படிப் படிப்படியாக பள்ளியின் சூழலையும்
பெற்றோரின் பிரிவையும் குழந்தையை மனதளவில் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம்.பள்ளி
செல்ல குழந்தை மறுப்பதற்கு என்ன காரணம் என்றே பெற்றோரால் கண்டுபிடிக்க
முடியாத சூழலில், குழந்தைகள் உளவியல் அல்லது மனநல மருத்துவரை அணுகித்
தீர்வு காண வேண்டும்.