மொழியும் இந்தியாவும்

Ennum Ezhuthum
0

 

மொழியும் இந்தியாவும்

தாய்மொழிக்கும் மொழிக்கும் வேறுபாடு உண்டு. தாய்மொழி என்பது வரையறுக்கப்பட்ட இலக்கணங்களுக்குள் அடங்காதது.

பேச்சுமொழியாகவும் மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே பேசுபவையாகவும் இருக்கிறவைகூடத் தாய்மொழியில் அடங்கும். வரிவடிவம் உள்ளவற்றையும் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவற்றையும் மொழியாக அங்கீகரிக்கிறார்கள். 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,652 தாய்மொழிகள் இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

103 வெளிநாட்டு மொழிகளும் இவற்றுள் அடங்கும். மொழியியல் வல்லுநரான ஜார்ஜ் கிரியர்சன் எழுதிய 12 தொகுதிகள் கொண்ட 'Linguistic Survey of India (1903-1923)' என்கிற நூலின் தரவுகளின்படி, இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் 179 மொழிகளும் 544 பேச்சுவழக்கு அல்லது வட்டாரமொழிகளும் இருந்திருக்கின்றன. 1921 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 188 மொழிகளும் 49 வட்டார மொழிகளும் இருந்துள்ளன. 1990களின் தொடக்கத்தில் இந்தியாவில் 32 மொழிகள் மட்டுமே 10 லட்சத்துக்கும் அதிகமானோரால் பேசப்பட்டன.

 

வரிவடிவமும் இலக்கணப் பிடிப்பும் கொண்ட மொழிகள் மட்டுமே காலத்தைக் கடந்து நிற்கின்றன. இந்தியாவில் எழுத்து முறை 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகிவிட்டது. சிந்து சமவெளி மக்கள் பிராமி, கரோஷ்டி எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தியிருப்பதாக (பொது ஆண்டு 500க்கு முன்) ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை மையமாகக் கொண்ட சர்வதேச மொழிகள் அமைப்பான 'எத்னலாக்' ஆய்வின்படி இந்தியாவில் 120 மொழிகளுக்கு மட்டுமே எழுத்து வடிவம் இருக்கிறது. 

 

இதன்படி பார்த்தால் இந்தியாவில் எழுத்து வடிவமற்ற, அருகிவரும் மொழிகளே அதிகம். இவற்றில் பெரும்பாலான பேச்சுவழக்கு மொழிகள் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பேசப்படுபவை. தொன்மையான 'கிரேட் அந்த மானீஸ்' மொழியை 2015 நிலவரப்படி ஐவர் மட்டுமே பேசிவந்தனர். அகில இந்திய வானொலியில் 146 மொழிகள் - வட்டாரமொழிகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் அவை மிகக் குறைவான மக்களையே சென்றடைகின்றன என்பது சில மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை குறுகிக்கொண்டே போகிறது என்பதை உணர்த்துகிறது.

 

ஆரம்பத்தில் சித்திர எழுத்துக்களாக இருந்தவை பிற்காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நிலைத்த வரிவடிவம் பெற்றன. இந்தியாவில் 25 வகையான ஆதார எழுத்து வடிவங்கள் உள்ளன. இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணைப்படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் 69 முதல் 72 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

Post a Comment

0Comments

Post a Comment (0)