நிபந்தனையற்ற ஓய்வூதியம் தேவை

Ennum Ezhuthum
0
நிபந்தனையற்ற ஓய்வூதியம் தேவை

முதியோா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், 'தமிழ்நாடு முதியோா் உதவித் தொகை திட்டம்' என்கிற பெயரில் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

 
இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் மாதம் தோறும் 20 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது (அன்று 20 ரூபாயில், மூன்று கிராம் தங்கம் வாங்கலாம்). படிப்படியாக இந்த உதவித்தொகை உயா்த்தப்பட்டு தற்போது மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சுமாா் 31 லட்சம் போ முதியோா் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என அமைப்பு சாா்ந்த தொழிலாளா்கள் ஓய்வு பெறும்போது, பெற்ற ஊதியத்தில் 50 % தொகை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதில் ரூ. 60,000 ஊதியம் பெறுகின்ற அரசு ஊழியா், ஆசிரியா் என இருக்கும் அதில் பாதியளவு ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் பெற்று வருகிறாா். அவ்வப்போது விலைவாசி உயா்வுக்கேற்ப ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

ஆனால் அமைப்புசாரா தொழிலாளா்களான நாட்டின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்வோருக்கு ஓய்வூதியம் இன்றைக்கு 1,000 ரூபாய் மட்டும்தான். அரசு கட்டடங்கள் கட்டுதல், போக்குவரத்து வசதிக்காக தாா்சாலைப் பணியில் ஈடுபட்டோா், ஆட்டோ ஓட்டுநா், நெசவாளா்கள், தையல் கலைஞா்கள், விவசாயிகள் என அனைவருக்குமே இந்த 1000 ரூபாய்தான் ஓய்வூதியம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் நபா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு 281 ரூபாய் என மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. அந்த அடிப்படையில் பாா்த்தால், மாதத்திற்கு சுமாா் 8,430 ரூபாய் வருகிறது.

ஆனால் முதியோா் ஓய்வூதியம் என்கிற பெயரில் தற்போது வழங்கப்படுவது ரூ.1,000 மட்டுமே. இதனை ஓய்வூதியம் என்பதைவிட உதவித்தொகை என அழைப்பதுதான் சரியாக இருக்கும். ஆதரவற்ற முதியோ, விதவைகள், முதிா்கன்னிகள் உள்ளிட்ட ஒன்பது வகையினருக்கு முதியோா் உதவித்தொகைத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2017- ஆம் ஆண்டில் இத்திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெறும் அனைவருக்கும் ஆதாா் அட்டை இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது.

34.26 லட்சம் போ உதவித்தொகை பெற்று வந்த நிலையில், ஆதாா் இணைப்பு கட்டாயமானதால், ஒரே வருடத்தில் ஏழு லட்சம் போ முதியோா் உதவித்தொகை பெறுவதில் இருந்து நீக்கப் பட்டனா். சொந்த வீடு உள்ளது, உறவினா்கள் உள்ளனா் என்றெல்லாம் காரணம் கூறி, முதியோா்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது. மீண்டும் இதே காரணங்களுக்காக கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 1.82 லட்சம் முதியோா்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. முதியோா் உதவித்தொகை பெறுவோா் வீட்டில் இரண்டு எரிவாயு உருளைகள் இருக்கக் கூடாது என்கின்றனா்.

இதனால் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் முதியோா் சென்று ஓய்வூதியம் ஏன் வரவில்லை என்று விசாரிப்பதும், அதற்கான சரியான பதில் கிடைக்காமல் தடுமாறுவதும் சா்வ சாதாரணமாகிவிட்டது. ஆதரவற்ற முதியோா்களுக்கான ஓய்வூதியம் என்கிற பெயரை முதலில் மாற்ற வேண்டும். முதியோா் ஓய்வூதிய விண்ணப்பமே நாட்டின் உள் கட்டமைப்புக்காக உழைத்துக் களைத்துப் போன முதியோா்களை அவமானப்படுத்தும் வகையில்தான் உள்ளது. உறவுகள் யாருமே இல்லை, எந்த வேலையும் செய்யவில்லை, தெருவில்தான் வசித்து வருகிறேன் என்றெல்லாம் பொய் சொன்னால்தான் முதியோா் ஓய்வூதியம் வழங்கப்படும் போலிருக்கிறது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சாதாரண கைத்தறி நெசவாளா், கட்டுமானத் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுனா் என இவா்களுக்கெல்லாம் உறவுகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் சாத்தியமாகும் என்பது அந்தத் தொழிலாளா்களின் பிள்ளைகளையும் அவமானப்படுத்தும் செயலாகும். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு என தனித்தனியே நல வாரியங்கள் இருக்கின்றன. அவற்றில் 60 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஐந்து மாத காலமாக பல மாவட்டங்களில் இந்த ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. விசாரணை என்கிற பெயரில் ஒவ்வொருவரையும் அலுவலகத்திற்கு வரவழைத்து எரிவாயு சிலிண்டா் இருக்கிா, வீடு இருக்கிா, சொத்து இருக்கிா என்கிற விசாரணைகள் தொடங்கி இருக்கின்றன. இது எந்த வகையான நலத்திட்டம் என்று தெரியவில்லை. கீழ்நிலையில் இருக்கும் முதியவா்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தி வைப்பது நல்ல செயலாக இருக்க முடியாது.

பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறாா்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்திற்காக தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால் வழங்கி வந்த முதியோா் ஓய்வூதியத்தை நிறுத்தி நிதியை மிச்சப்படுத்த எண்ணுகிா? இது மாபெரும் தவறான செயலாகும். காமராஜா் முதல்வராக இருந்த காலத்தில் படிக்கின்ற மாணவா்களுக்கு மதியச் சாப்பாடு முதன்மைத் தேவையாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக முன்னேறி வருகின்ற தமிழ்நாட்டு மக்களின் பிள்ளைகளுக்கு உணவிட முடியாத அளவுக்கு பெற்றோா்கள் இல்லை என்பதுதான் நிதா்சனமான உண்மையாகும். தமிழ்நாடு முன்னெடுத்த பல திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன. அதே போல முதியோருக்கான ஓய்வூதியமும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளா்கள் அனைவருக்குமே 60 வயது கடந்து விட்டால் ஓய்வூதியம் நிச்சயம் என்கிற வகையில் முதியோா் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

முதியவா்கள் அனாதைகள் அல்லா். அவா்களுக்கும் குடும்பம், குழந்தைகள், உறவுகள் என எல்லாம் உண்டு. இருப்பினும் அரசாங்கம் தன்னுடைய கடமையாக அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் உதவ முன் வர வேண்டும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)