கீசா
பிரமிடு நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள,
பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில்
பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும்.
இந்த பிரமிடுக்குள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்ட படியே இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் கீசா பிரமிடும் எத்தனையோ அதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தான் அந்த கிரேட் பிரமிடுக்குள் இருக்கும் இன்னொரு ஆச்சரியம் வெளிப்பட்டுள்ளது. ஆம் அந்த பிரமிடுக்குள் மறைந்து கிடந்த சுமார் 30 மீட்டர் நீளமுள்ள தாழ்வாரத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த தகவலை எகிப்தின் சுற்றுலா மற்றும் கலைப்பொருட்கள் துறை அமைச்சர் மொகமது ஈஸ்ஸாவும்உறுதிப்படுத்தியுள்ளார். கீசா, கூஃபு, சியோப்ஸ் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பிரமிடுக்குள் 30 மீட்டர் நிளமும், 6 அடி அகலமும் கொண்டு முக்கோண வடிவ மேற்கூரையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள தாழ்வாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அமைச்சர் மொகமது ஈஸ்ஸா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த தாழ்வாரம் கீசா பிரமிடுவின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் எகிப்தின் புதை பொருள் வல்லுநர்களும் சேர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்கேன் பிரமிடு என்ற பெயரில் நுட்பமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். எகிப்தின் முன்னாள் கலைப்பொருட்கள் துறை அமைச்சரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜாஹி ஹவாஸ் தலைமையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்த ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்ஃபிரா ரெட் தெர்மோகிராஃபி, முயோன் ரோடியோகிராபி என அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, பிரமிடுக்குள் மறைந்திருக்கும் பல்வேறு அதிசயங்களை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தாழ்வாரம் வெளிப்பட்டுள்ளது. இந்த தாழ்வாரம் ஏதோ மிக முக்கியமான ஒன்றை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது அநேகமாக மாமன்னர் கூஃபு புதைக்கப்பட்டிருக்கும் கல்லறையாகக் கூட இருக்கலாம் என்று தான் நினைப்பதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதே பிரமிடுக்குள் கிட்டத்தட்ட ஒரு பயணிகள் விமானத்தின் அளவில் பெரிய குழி ஒன்று இருந்ததை கடந்த 2017 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.