
நவநாகரிக வாழ்வு மானுட மனதுக்குப் பல நெருக்கடிகளைக் கொடுக்கிறது.
குடும்பம், பணியிடம், சமூகச் சூழல் என எங்கும் கொதிக்கும் நெருக்கடிகள்
புழங்கி வெளியேறும் ஒரு சூழலில்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், எல்லோராலும் இந்தக் கொதிநிலைகளுக்குள் தடுமாறாமல் உள்ளே சென்று
வெளியே வர இயலுவதில்லை. 'வர வர என்னால என்னையே கட்டுப்படுத்த முடியல' என்று
சொல்லும் நண்பர்களைப் பார்த்திருப்பீர்கள். 'என்ன காரணம்னே தெரியல, கொஞ்ச
நாளாவே மனசு இறுக்கமா இருக்கு' என்று புலம்புபவர்களையும் பார்க்கலாம். உடல்
சார்ந்து எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு மனம் சார்ந்த
பிரச்னைகளும் மனிதர்களைப் படுத்தி எடுக்கின்றன. அந்தவகையில், `மூட்
ஸ்விங்ஸ்(Mood swings)' எனப்படும் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலை
பெரும்பாலானவர்களை இன்று படுத்தி எடுக்கும் பிரச்சனையாய் இருக்கிறது.
''அதென்ன மூட் ஸ்விங்ஸ்'?
''மாறிக்கொண்டே இருக்கும் மனநிலைதான் மூட் ஸ்விங்ஸ். இயல்பாக இருக்கும் தன்னிலையிலிருந்து திடீரென கோபமாகிக் கத்துவது, எமோசனாகி அழுவது போன்றவை இதன் இயல்பு. குறிப்பிட்ட நேரத்தில் காரணமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதே `மூட் ஸ்விங்ஸ்'. `எண்ணம் போல வாழ்க்கை' என்பார்கள். அந்த எண்ணங்களை கையாளச் சிரமப்படுபவர்கள்தான் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்''.''ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் போன்ற உணர்ச்சிகள் நம் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றே. ஆனால், சிலர் மட்டும் காரணமே இல்லாமல் தன் இயல்பை மீறி பல்வேறு மனநிலையில் செயல்படுவர். அது `மூட் ஸ்விங்' எனப்படும்.
பெரும்பாலும் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயமோ அல்லது அதிகம் எதிர்பார்த்த விஷயமோ நடக்காமல் போகும்பட்சத்தில் ஏற்படும் ஏமாற்றம், உணவு முறை மாற்றங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன் குறைபாடு போன்றவற்றால் `மூட் ஸ்விங்' ஏற்படுகிறது.
'தனக்கு அதிகமாக 'மூட் ஸ்விங்ஸ்' ஏற்படுகிறது, எப்படியாவது இதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் இருந்து, அதை செயல்படுத்த முடியாமல் சிரமப்படுபவர்கள்; தற்கொலை எண்ணம் அதிகம் ஏற்படுபவர்கள்; இரவு முழுக்க இதனால் தூங்க முடியாமல் தவிப்பவர்கள்; வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் இதற்காக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் போதும். மற்றவர்கள், உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் போதுமானது.
இதேபோல `மூட் டிஸார்டர்' (Mood disorder) என்ற ஒன்று இருக்கிறது. ஏதோ ஒரு இழப்பு அல்லது பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட சில காலம் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பதை `மூட் டிஸார்டர்' என்கிறார்கள். மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள், குறைபாடுகளால் நிகழக்கூடிய இந்தப் பிரச்னைக்கு உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
`மூட் ஸ்விங்ஸ்' ஏற்படுபவர்களால், அவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இவர்கள், தங்களைச் சுற்றி இருப்பவர்களை மனரீதியாகவும் சில நேரங்களில் உடல்ரீதியாகவும்கூட சிரமப்படுத்துவார்கள். இப்படி, உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், அதைத் தவிர்க்க கீழ்க்காணும் விஷயங்களை முயற்சி செய்யலாம்.
* தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அந்த இடத்திலிருந்து விலகிச்சென்று 10 முதல் 20 முறை
மூச்சுப்பயிற்சி செய்யலாம்.
* உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் காலைவேளையில், உடற்பயிற்சிக்கும் தியானத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
* சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் சரியான நேரத்துக்குப் படுக்கைக்குச் செல்வதும் அவசியம். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருநாளைக்கு இரண்டு கப் வரை காபி குடிக்கலாம். தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
உணவு முறை மாற்றங்கள்
தவிர்க்க வேண்டியவை: கஃபைன் சத்து நிறைந்த உணவுகள், கெட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருள்கள், `பேக்' செய்த உணவுகள், மதுப்பழக்கம் முதலியவை.
சேர்த்துக்கொள்ள வேண்டியவை: காரம் குறைவான உணவுகள், ஹெல்த்தி கார்போஹைட்ரேட்ஸ், காய்கறிகள், புரதங்கள், பழங்கள், மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகள், தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய், கால்சியம் அதிகம் உள்ள பால் உணவுகள் முதலியவை. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள நட்ஸ், கீரை, திராட்சை, பழவகைகளை
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
`மூட் ஸ்விங்ஸ்' பிரச்னையால்தான் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரியும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். `மூட் ஸ்விங்ஸ்'கால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், வன்முறையில் அதிகம் ஈடுபடுவர். அப்படிப்பட்டவர்கள், மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவதே சிறந்தது.