வரலாற்றுத் தடங்களைப் பின்தொடர்வது மிகுந்த சவாலானது. ஒரே நிகழ்வு குறித்து வெவ்வேறு தரவுகள் கிடைக்கும்.
முறையான ஒப்பீடு, நுட்பமான சரிபார்த்தலுக்குப் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். தென்னிந்தியாவில் சுதந்திரப் போரை வழிநடத்திய சிவகங்கைப் பிரதானி சின்ன மருதுவின் மகனான துரைசாமி குறித்த தகவல்கள் அப்படியானவைதான்.
1802இல் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட 73 பேரில் ஒருவர் துரைசாமி. நாடுகடத்தப்பட்டவர்களின் நிலைகுறித்து உறுதியான தரவுகள் கிடைக்காத நிலையில், 11 பேர் மட்டும் நாடு திரும்பி திருநெல்வேலி பகுதிக்கு வரவிருந்ததைப் பற்றி பிரிட்டிஷ் ஆவணம் ஒன்று இருக்கிறது. துரைசாமி பினாங்கிலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினாரா இல்லையா என்ற கேள்விக்குப் பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டன.
தென்னிந்திய விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல்களை முதன்முதலில் வெளிக்கொண்டுவந்த பேராசிரியர் டாக்டர் கே.ராஜய்யன், தன் ஆய்வில் துரைசாமி மதுரைக்குத் திரும்பும் வழியில் வண்டியூரில் இறந்ததாகச் சொல்கிறார்; சிவகங்கையில் இறந்ததாக டாக்டர் எஸ்.எம்.கமால் குறிப்பிட்டுள்ளார்; பினாங்கிலேயே இறந்துவிட்டார் என்கிறார் ஆய்வாளர் ஜெயசீலன் ஸ்டீபன்.
காளையார்கோயில் போருக்கு முந்தைய காலம் பற்றியும், போர் முடிந்த காலம் பற்றியும் இரண்டு நாவல்களை எழுதியுள்ள நானும், கிடைத்த ஆதாரங்களை வைத்து, இரு நாவல்களிலும் இரு வேறு நிலைகளை எடுத்திருக்கிறேன். முதலாவது, துரைசாமி நாடு திரும்பும் வழியில் இறந்துவிட்டார்; இரண்டாவது, தீவாந்திரத்திலேயே அவர் இறந்துவிட்டார்.
வயதில் குழப்பம்: மருது பாண்டியர்களுடன் நட்பாக இருந்த மேஜர் வெல்ஷ் தன் நினைவுக்குறிப்புகளில், 'சின்ன மருதுவின் இளம் வயது மகன் துரைசாமியும் நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவர்' என்று எழுதியிருக்கிறார். மற்றோரிடத்தில், 'இருபது ஆண்டுகள் கழித்து, நான் பினாங்கு தீவிலிருந்தபோது வயதான தோற்றத்திலிருந்தவர் என்னிடம் மனு கொடுக்க வந்திருந்தார். அவரின் முகம் எங்கோ பார்த்த நினைவைத் தந்தது. விசாரித்ததில், அவர் சின்ன மருதுவின் மகன் துரைசாமி என்று தெரிந்தது. தன்னுடைய விடுதலைக்கு உதவ முடியுமா என்று என்னிடம் கேட்டார்' என்று குறிப்பிடுகிறார். மேஜர் வெல்ஷ் இளம் வயது என்று எழுதியிருக்கும் விதத்தைப் படித்து, துரைசாமியைச் சிறுவனாகத்தான் வரலாற்றாசிரியர்கள் ஊகித்தார்கள்.
மருது பாண்டியர், ஊமைத்துரை, விருப்பாட்சி கோபால் நாயக்கர் முதலான 500 போராளிகளைத் தூக்கிலிட்ட கர்னல் அக்கினியூ, சிலருக்குக் கருணை காண்பிப்பதாக நினைத்து நாடுகடத்த, கவர்னர் எட்வர்ட் கிளைவிடம் அனுமதி வாங்குகிறார். 'இளம் வயது' காரணமாகத் தூக்கிலிடப்படாமல் நாடுகடத்தப்பட்டவர்கள் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரரும், சின்ன மருதுவின் மகன் துரைசாமியும் என்று கர்னல் அக்கினியூ பதிவுசெய்துள்ளார். காளையார்கோயில் போரை நடத்திய கர்னல் அக்கினியூ, துரைசாமியை நாடுகடத்தியபோது இளம் வயது என்று குறிப்பிட்டதால், துரைசாமிக்கு 10, 11 வயதிருக்கும் என்று நம்பப்பட்டது.
1802இல் தீவாந்திரத் தண்டனையாக நாடுகடத்தப்பட்டபோது துரைசாமிக்கு என்னதான் வயது என்ற கேள்வி, வரலாற்றில் இவ்வளவு நாள் தெளிவு பெறாமல் இருந்தது. 1802ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் 73 போராளிகள் பினாங்கு தீவுக்குப் பயணப்பட்டனர். இவர்களுக்குப் பாதுகாப்பாக லெப்டினென்ட் ராக்கெட் என்ற ராணுவ அதிகாரி 22 வீரர்களுடன் சென்றார்.
72 நாள் பயணத்தில் பினாங்கு சென்று சேர்ந்தது கப்பல். சாதாரணமாக 45 நாட்களில் பினாங்கு வர வேண்டிய கப்பல் ஏன் தாமதமானது? கடல் பயணத்தின்போது மூன்று போராளிகள் மரணமடைந்தனர். அதற்கு யார் காரணம் என்று ராக்கெட் மீது விசாரணை நடைபெற்று அவரிடம் எழுத்து மூலமான விளக்கமும் பெறப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தின்படி, இறந்த மூவரில் துரைசாமி இல்லையென்று உறுதியாகிறது.
சிறுவன் அல்ல: மதுரை மாவட்டத்தில் 17 ஆண்டுகள் கலெக்டராக இருந்தவர் ரௌஸ் பீட்டர். அவர் அரசுச் செயலருக்கு எழுதிய கடிதத்தைப் படிக்கும் வாய்ப்பு சென்னை ஆவணக் காப்பகத்தில் எனக்குக் கிடைத்தது. அனுப்பானடி கிராமத்தில், 1821 மே 19 அன்று துரைசாமியின் மகன் முத்துவடுகு என்ற மருதுபாண்டியன் ரௌஸ் பீட்டரிடம் ஒரு மனுவைத் தருகிறார். அதில், '1801ஆம் ஆண்டு (1801 அக்டோபர் முதல் 1802 பிப்ரவரி வரை போராளிகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தீவாந்திரம் அனுப்பப்பட்ட காலத்தை முத்துவடுகு அறிந்திருக்கவில்லைபோலும்) எனது தகப்பனார் துரைசாமியைப் பினாங்கு தீவுக்கு ஹானரபிள் கம்பெனி நாடுகடத்தியது.
பின்பு அவர் நாட்டுக்குத் திரும்பவர ஹானரபிள் கம்பெனி அனுமதி வழங்கியது. நாடு திரும்பியவரிடம் செங்கல்பட்டு போலீஸ் சூப்பரிண்டென்ட் எம்.எம்.கெரல் அவரது தேவைகள் குறித்து விசாரித்தார். அவரிடம் என் தந்தை கொடுத்த மனுவில், 'கம்பெனியின் ஆதரவும், மதுரையில் தங்கிக்கொள்ள அனுமதியும்' கோரினார். மதுரை கலெக்டரைச் சந்தித்து சூழ்நிலையை விளக்கும்படி எனது தகப்பனாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி மெட்ராஸிலிருந்து கிளம்பி மதுரைக்கு அருகிலுள்ள வண்டியூர் வந்தபோது எனது தகப்பனாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சிவகங்கை வந்த எனது தகப்பனார் தனது வறுமை நிலையைக் களைய சிவகங்கை ஜமீன்தாரைக் கவர்னருக்குக் கடிதம் எழுதவைத்தார். இந்தக் கடிதத்துக்குப் பதில் வருவதற்கு முன்பு, எனது தகப்பனாரின் உடல்நிலை மோசமானது. வைகாசி 11 அன்று சிவகங்கையில் அவர் இறந்துவிட்டார். அவரது பிரேதம் காளையார்கோயில் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது' என்று குறிப்பிட்டு, கம்பெனி தங்கள் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் முத்துவடுகு வைக்கிறார்.
இந்த மனுவின் அடிப்படையில் பார்க்கும்போது, இதுவரை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டதைப் போல் துரைசாமி பாலகனோ, சிறுவனோ அல்ல; பதின்பருவத்தினனாய் இருக்கவே வாய்ப்பிருக்கிறது. நாடுகடத்தப்படுவதற்கு முன் அக்கால வழக்கப்படி இளம்வயதிலேயே திருமணமாகியிருக்கலாம். தந்தையின் நாடுகடத்தலுக்குப் பின் முத்துவடுகு பிறந்திருக்கலாம்.
விடை கிடைத்தது: ஊமைத்துரை இறந்தபோது அவரது மகன் துரை சூடாமணி கட்டபொம்மு மூன்று மாதக் கரு. ஊமைத்துரையின் கர்ப்பிணி மனைவியைப் பூந்தமல்லி சிறைச்சாலையில் அடைத்துவைத்திருந்தனர் பிரிட்டிஷார். ஊமைத்துரை இறந்த ஏழாவது மாதம் பிறந்த துரை சூடாமணி கட்டபொம்மு, 1820 ஜனவரி 25இல் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு 1819இல் திருமணம் நடந்துள்ளது. திருமணச் செலவுக்காக கம்பெனி 150 பகோடாக்கள் அறிவிக்கிறது. இளம்வயது திருமணம் என்பது அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததற்கு இது ஓர் உதாரணம்.
முத்துவடுகு கலெக்டருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் துரைசாமி இறந்த தேதி வைகாசி 11 (22.05.1820), இறந்த இடம் சிவகங்கை, அடக்கம் செய்யப்பட்ட இடம் காளையார்கோயில் எனவும் நிரூபணமாகிறது. இப்படியாக, வரலாற்றில் விடைதெரியாத கேள்வி ஒன்றுக்கு விடை கிடைத்திருக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையனத் தேவருடன் நாடுகடத்தப்பட்ட சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் மரணம் நிகழ்ந்தவிதம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. போராளிகளின் மரணத்துக்குப் பின், அவர்கள் குடும்பத்தினரின் நிலையையும் புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறது ஒரு பிரிட்டிஷ் ஆவணம்.