மாணவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்குள் செல்வதால் பல டென்ஷன்களை தவிர்க்கலாம். அப்போது கிடைக்கும் நேரத்தில் கடின பாடங்களை சற்று திருப்பி பார்க்கலாம்.
அப்போது புதிதாக படிப்பதை தவிர்க்க வேண்டும்.பிளஸ் 2 தேர்வை நன்றாக எழுதி முடிக்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க கூடாது. விதிப்படி ஷூ, செருப்பு, கைக்குட்டை உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை முன்கூட்டியே மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.காலை 9:45 மணிக்கு முதல்
'பெல்' அடித்த பின் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். சென்ற பின் தங்கள் பதிவு எண் குறிப்பிட்டுள்ள இடத்தில் அமர வேண்டும்.
'நண்பர்கள் எழுதும் இடங்களுக்கு சென்று போய் பார்த்துவிட்டு வரலாம்' என்ற எண்ணம் கூடாது. 9:55 மணிக்கு இரண்டு 'பெல்' அடிக்கப்படும். அப்போது தேர்வு அறைக்குள் சீலிடப்பட்ட கவரில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாளை அறைக் கண்காணிப்பாளர் மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பார். அதை உறுதி செய்ய இரண்டு மாணவர்களை அழைத்து கையெழுத்தும் பெறுவார்.காலை 10:00 மணிக்கு மூன்று 'பெல்' அடிக்கப்படும்.
அப்போது வினாத்தாள் மாணவர் இருக்கைக்கே வந்து வினியோகிக்கப்படும். காலை 10:00 முதல் 10:10 மணி வரை வினாத்தாளை மாணவர்கள் படிக்கும் நேரம். அப்போது மிக கவனமாக படித்து, எந்த தெரிந்த வினாக்களை முதலில் எழுதலாம் என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும். காலை 10:10க்கு மேல் 'ஆன்சர் ஸ்கிரிப்', 'டாப் ஷீட்' வழங்கப்படும்.
அதில் தேதி, பதிவு எண், பிறந்த நாள் தேதி, பள்ளி பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக நிரப்ப வேண்டும். 10:15 மணிக்கு ஐந்து 'பெல்' அடிக்கப்படும். அப்போது தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பெல் அடிக்கப்படும். அதை கவனித்து மாணவர்கள் தங்கள் நேரத்தை மேலாண்மை செய்துகொள்ளலாம்.
மதியம் 1:10 மணிக்கு வார்னிங் பெல் அடிக்கப்படும். அப்போது கூடுதலாக வாங்கிய விடைத்தாள்கள் அனைத்தையும் மெயின் தாளுடன் கட்டிவிட வேண்டும்.கவனச்சிதறல் வேண்டாம்வினா எண்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து, எழுதாத பக்கங்கள் இருந்தால் 'ஸ்கேல்' வைத்து அந்த இடத்தை நீண்ட கோடு போட்டு அடித்துவிட வேண்டும். மதியம் 1:15 மணிக்கு 'லாங் பெல்' அடிக்கப்படும். அப்போது விடைத்தாளை வழங்கி விட வேண்டும்.அறைக்குள் தேர்வு எழுதும்போது பல கவனச்சிதறல் எழுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
உதாரணமாக அதிகாரிகள் பார்வையிட வருவது, பறக்கும் படை பிரிவு வருகை என அறைக்குள் யார் வந்தாலும் அவர்களை மாணவர்கள் கண்டுகொள்ளாமல் தேர்வு எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வினாத்தாளில் பதிவு எண் தவிர, வினாக்களை 'டிக்','ரவுண்ட்' செய்வது என வேறு எதுவும் எழுதிவிட வேண்டாம்.நன்றாக தெரிந்த வினாக்களை முதலில் எழுதினால் மனரீதியாக நல்ல தொடக்கம் அமையும். ஒரு நாள் தேர்வு எழுதிவிட்டு வெளியேறி விட்டால் அதுபற்றி நினைக்காமல், அடுத்து எழுதவுள்ள தேர்வுக்கு தயாராக வேண்டும். இவற்றை கடைபிடித்தால் தேர்வு அறையை தன்னம்பிக்கை தவழும் இடமாக மாற்றிக்கொள்ள முடியும். நம்பிக்கையுடன் செல்லுங்கள்; தேர்வில் வெல்லுங்கள்.-நிர்மலா குமாரி, தலைமையாசிரியை, சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை. 63835 43206