கடந்த மூன்று மாதங்களாகவே இந்தியா முழுவதும் குளிர் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. தற்போது இந்தக் குளிர் காய்ச்சல் பற்றிய தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல நோயாளிகளின் மாதிரிகளை ஆராய்ந்ததில், மூன்று மாதங்களாகவே பரவலாக பலரிடம் காணப்படும் இந்தக் காய்ச்சல் A (H3N2) வகைத் தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் பற்றிய கூடுதல் தகவல்களை மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டோம்...
டாக்டர் சிவராம கண்ணன்``இந்த A(H3N2) வைரஸ் ஃப்ளு வகை வைரஸ் ஆகும். இன்ஃப்ளுயென்ஸா (Influenza) என்பதைச் சுருக்கமாக ஃப்ளு எனக் கூறுவோம். இதில் A,B,C,D என நான்கு வகைகள் உள்ளன. A வகையில் உள்ள இரண்டு முக்கிய வைரஸ்கள் H1N1 மற்றும் H3N2 ஆகும். ஒவ்வொரு காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் ஏதாவது ஒரு ஃப்ளு வைரஸின் பரவல் அதிகமாகக் காணப்படும். 2009-ம் ஆண்டு H1N1 பரவல் அதிகமாக இருந்தது. தற்போது இந்த H3N2 வகை வைரஸ் பரவலைப் பார்க்க முடிகிறது.
அறிகுறிகள் என்ன?
இந்த வைரஸால் ஏற்படும் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் வறண்ட தொண்டை, உடல்வலி, வறட்டு இருமல், தலைவலி ஆகியன ஆகும். வைரஸ் தாக்கிய ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும்போது நான்கைந்து தினங்களில் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்.
உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் காய்ச்சலை முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம். ஆனால், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், சுவாசப் பிரச்னை போன்றோருக்கு கூடுதல் கவனம் தேவை.
இது போன்றவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்ட பிறகு, கூடவே சேர்ந்து வேறு பாக்டீரியா நோய்த்தொற்றும் ஏற்படும் வாய்ப்பை அதிகமாக்கும். நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகூட ஏற்படலாம். இது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை கடினமாக்கும். வறட்டு இருமலாக இருக்கும்வரை அது வைரஸ் தொற்றுதான், இருமலுடன் சேர்ந்து சளி வரத் தொடங்கும்போது அதை பாக்டீரியா நோய்த்தொற்று எனப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த நோயின் பரவலை எல்லா வயதினரிடமும் பார்க்க முடியும். குறிப்பிட்டு குழந்தைகளிடம் அதிகம் பரவும் எனச் சொல்ல முடியாது. ஆனால், குழந்தைகள் பள்ளியில் அருகருகே அதிக நேரம் செலவிடுவதால் ஒரு குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதுமே உடன் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.
முகக்கவசம் அவசியம்
இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பின், முதல் இரண்டு நாள்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், மருத்துவ அறிவுரையோடு பாராசிட்டமால், ஆன்டி - வைரல் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிப்பது, தொண்டைக்கு இதமாக வெந்நீரால் வாய் கொப்பளிப்பது போன்ற சிறிய விஷயங்களால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். எதிர்ப்பாற்றல் குறைவானவர்கள், வயதானவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் தேவை.
முகக்கவசம்திடீரெனப் பரவும் காய்ச்சல்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!இந்த வைரஸும் காற்றின் வழி பரவும் வைரஸ் என்பதால், கோவிட் 19 தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். முகக்கவசம் அணிவது, இருமல் வரும்போதும், தும்மும் போதும் முகத்தை மூடுவது, கைகளைக் கழுவுவது போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுதவிர ஃப்ளு வைரஸ்களுக்கென தடுப்பூசி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம், அப்போது வீரியமாக உள்ள ஃப்ளு வைரஸ்களுக்கு ஏற்றபடியான தடுப்பூசி வெளியாகும். இந்தத் தடுப்பூசி `Tetravalent' எனச் சொல்லப்படும், நான்கு வகையான ஃப்ளு வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாப்பு தருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும். தடுப்பூசி செலுத்தி 15 நாள்களில் நம் உடலில் ஏற்படும் இந்த எதிர்ப்பாற்றல் ஒரு வருடம்வரை இருக்கும். அது போன்ற தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ளலாம்'' எனக் கூறினார்.