பயிற்சியால் வசமாகும் மொழி

Ennum Ezhuthum
0

 

பயிற்சியால் வசமாகும் மொழி
புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவு மாணவனாக நான் படித்தபோது எங்கள் வகுப்பில் தமிழ்ச்செய்யுள் நடத்தும் ஆசிரியராக இருந்தார் ம.இலெ.
தங்கப்பா. வகுப்பில் ஏராளமான புதுச்செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பது அவர் வழக்கம். பிறகு அது மெல்ல மெல்ல உரையாடலாக வடிவெடுக்கும். நீண்டுபோகும் அந்த உரையாடல்கள் ஒரு தருணத்தில் அன்றைய பாடத்தோடு தொடர்புடையதாக மாறி முடிவடையும்.

என் பள்ளியாசிரியர்களின் வழிகாட்டலால் நான் அடைந்த யாப்பிலக்கணப்பயிற்சியின் விளைவாக அக்காலத்தில் அறுசீர் விருத்தங்களையும் எண்சீர் விருத்தங்களையும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். மனம் கவர்ந்த காட்சிகளையும் நினைவில் பதிந்துவிடும் தருணங்களையும் ஏராளமான விருத்தப்பாடல்களாக எழுதிவைப்பது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. ஒரு விடுமுறைக்காலத்தில் எழுதிவைத்த பாடல்குவியலிலிருந்து ஒரு நூறு பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வெள்ளைத்தாள்களில் தெளிவான கையெழுத்தில் படியெடுத்தேன். பிறகு கடையில் கொடுத்து ஒரு புத்தகத்தைப்போல தைத்து வைத்துக்கொண்டேன்.

கையெழுத்துப் பத்திரிகை போல கையெழுத்துப் புத்தகம். அதற்கு "பூங்கொத்து' என்று பெயர்சூட்டி வகுப்பு நண்பர்களிடம் படிக்கக் கொடுத்தேன். அவர்கள் தம் கருத்துகளை பதிவு செய்வதற்காக புத்தகத்தின் பிற்பகுதியில் வெள்ளைத்தாள்களை இணைத்தேன். மாணவர்களிடையே சுற்றிச்சுற்றி வந்த பூங்கொத்து ஒருநாள் வகுப்பெடுக்க வந்த தங்கப்பாவின் கண்களில் அகப்பட்டுவிட்டது.

அங்கங்கே சில பக்கங்களைப் புரட்டிப் படித்த தங்கப்பா, அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். நாலைந்து நாட்களுக்குப் பிறகு என்னிடம் ஆசிரியர் அறைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு தெரிவித்தார். சற்றே கூச்சத்தோடும் அச்சத்தோடும் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். தங்கப்பாவின் மேசை மீது "பூங்கொத்து' இருந்தது.

பல பக்கங்களுக்கு இடையில் அடையாளமாக சின்னச்சின்ன காகித நறுக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்னுடைய ஆர்வம், நான் படித்த புத்தகங்கள், என் குடும்பப்பின்னணி பற்றியெல்லாம் தங்கப்பா சில கேள்விகள் கேட்டார். நான் எல்லாக் கேள்விகளுக்கும் சுருக்கமாக விடையளித்தேன். "கவிதை சார்ந்த வடிவ ஒழுங்கு உன் பாடல்களில் தெரிகிறது.

ஆனால் சொற்கள் கூடிவராமல் துண்டுதுண்டாக நிற்கின்றன. மரபுப்பாடலில் சொல்லிணைவுகள் மிகமிக முக்கியமான கூறு. சொல்லிணைவு அமைந்தால்தான் தாளக்கட்டு அமையும். தாளக்கட்டு என்பது ஒரு பாட்டுக்கு உயிர்நாடி போன்றது.

தாளக்கட்டு இல்லாத பாடல் உயிரற்ற சடலம்' என்றார். நான் அமைதியாக அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். "ஓர் உழவனின் கை கலப்பைக்கு பழகுவதுபோல ஒரு பாவலனின் மனம் அந்தக் கண்ணாடிக்கோணத்துக்குப் பழகவேண்டும். பயிற்சி செய்துகொண்டே இரு.

ஒருநாள் மொழி உனக்கு வசமாகும்' என்று கூறி, தொகுப்பை என்னிடம் கொடுத்தார். பிறகு தன் மேசையின் இழுப்பறைக்குள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார். மனம்போன போக்கில் ஒரு பக்கத்தைத் திருப்பினார். புத்தகத்தை என் பக்கமாகத் திருப்பி "இந்தப் பாடலைப் படி' என்றார்.

நான் அவர் குறிப்பிட்ட பாடலை அவருக்குக் கேட்கும் அளவுக்கு மெல்லிய குரலில் படித்தேன். அது பாரதியாரின் 'காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே' பாடல். நான் படித்துமுடிக்கும் வரை அமைதியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் தங்கப்பா. "சொல்லிணைவும் தாளக்கட்டும் எப்படி இருக்கிறது பார்.

ஒரு பாட்டு என்றால் இப்படி இருக்கவேண்டும். இப்பாட்டில் இத்தனை வரிகள் இருந்தாலும் பாரதியார் முன்வைக்க விரும்பும் கருத்து ஒன்றே ஒன்றுதான். எல்லாவற்றிலும் சாரமாக நீ இருக்கிறாய் என்பதுதான் அக்கருத்து. அதை மையமாக்கிவிட்டு, தன்னால் முடிந்த அளவுக்கு அடுக்கிக்கொண்டே போகிறார்.

ஒரு பாடல் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றார். ஒருமுறை கல்லூரி ஆண்டுமலரைத் தயாரிக்கும் பொறுப்பை தங்கப்பா ஏற்றிருந்தார். நான் எழுதிய பாடலொன்றை வாங்கி அதை "பாற்கரன்; என்னும் பெயரில் வெளியிட்டார். நீண்ட கதைகளைப் பாடல்களாக எழுதுவதில் அப்போது நான் ஆர்வமாக இருந்தேன்.

எல்லாமே ஆயிரம் வரிகளைக் கொண்ட பாடல்கள். அவர் எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து ஆலோசனைகளை வழங்கினார். அவற்றுக்கு "குறும்பாவியம்' என்று பெயர் சூட்டினார் அவர். தொலைபேசித் துறையில் பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன்.

ஒரு நள்ளிரவில் என் மனச்சுமையைக் கரைத்துக்கொள்ளும் விதமாக, ஒரு பழைய அனுபவத்தை முதன்முறையாக பாவியமாக இல்லாமல் உரைநடையில் எழுதினேன். அக்கணத்தில் பாவியத்திலிருந்து என்னையறியாமல் சிறுகதையுலகத்துக்குள் நுழைந்துவிட்டேன். பாடல்வழியை நான் தொடரவில்லை என்பதில் தங்கப்பாவுக்கு சற்றே வருத்தமுண்டு. ஆயினும் அவர் ஒருநாளும் என் முயற்சியைத் தடுக்கவில்லை.

கதைகளையே நான் இன்றுவரை தொடர்ந்தாலும் பாடல்மொழிக்கு அவர் வகுத்துரைத்த இலக்கணமே கதைமொழியிலும் படிந்திருக்கிறது. சாரத்தை நெருங்கித் தொடும் நுட்பத்தை எனக்கு அளித்த மாபெரும் கலைஞர் அவர். நேற்று (மார்ச் 8) ம.இலெ. தங்கப்பாவின் 90-ஆவது பிறந்தநாள்.

மரபுப்பாடல் தலைமுறையைச் சேர்ந்த தலையாய பாவலர். இருபதுக்கும் மேற்பட்ட பாடல் தொகுதிகளை எழுதியவர். குழந்தை இலக்கியத்திற்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் என இருமுறை இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் இவர். வாழ்வியல் சிந்தனைகளை முன்வைக்கும் வகையில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்.

அவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்தொகைப்பாடகளும் முத்தொள்ளாயிரப்பாடல்களும் பென்குவின் வெளியீடாக வந்துள்ளன. எழுத்தாலும் பேச்சாலும் தன் வாழ்வாலும் பலருக்கு ஆதர்சமாக விளங்கியவர் தங்கப்பா. அவர் முன்வைத்த தன்முனைப்பில்லாத அன்பும் அறமும் நிலைத்திருக்கும் வரை அவருடைய பெயரும் நிலைத்திருக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)