வங்கியில் சும்மா இருக்கும் பணம் - இதை நீங்கள் எப்படி பெறலாம்?

Ennum Ezhuthum
0

 

வங்கியில் சும்மா இருக்கும் பணம் - இதை நீங்கள் எப்படி பெறலாம்?

ந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் வைப்புத்தொகைகளை நிர்வகிக்க புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் 6ஆம் தேதி அறிவித்தது.

கடந்த காலங்களில், நாட்டில் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்தது.

 

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி பிப்ரவரி 2023 வரை, ரிசர்வ் வங்கியிடம் பொதுத்துறை வங்கிகள் ஒப்படைத்துள்ள உரிமை கோரப்படாத டெபாசிட் தொகை 35 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டுடன் (மார்ச் 2022) ஒப்பிடும் போது இந்த தொகை குறைந்துள்ளது என்றும் இதற்கு வங்கிகள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே காரணம் என்றும் இந்திய நிதித்துறையின் இணையமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 48 ஆயிரத்து 262 கோடி ரூபாய் உரிமைக் கோரப்படாமல் இருந்ததாக கூறி பொதுத்துறை வங்கிகள் அந்த பணத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுத்திருந்தது.

 

உரிமை கோரப்படாத டெபாசிட்டுகள் என்றால் என்ன? அவை ஏன் வங்கிகளில் இருக்கின்றன? உரிமை கோரப்படாமல் இருக்கும் கணக்குகள் எப்போது செயலிழக்கும்?

 

அந்த பணத்தை வங்கிகள் என்ன செய்யும்? சில ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படாத கணக்குகளை மீண்டும் திறக்க முடியுமா? இவற்றுக்கான விடைகளை அறிந்து கொள்வோம்.

 

உரிமை கோரப்படாத வைப்புத்தொகை என்றால் என்ன?

ஐதராபாத்தில் படித்து வந்த சிரிஷா, பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அவர் பணி நிமித்தமாக டெல்லி சென்ற பிறகு, அவரின் கணக்கு மாற்றப்படவில்லை.

 

சம்பளத்திற்காக டெல்லியில் உள்ள வேறு வங்கியில் புதிய கணக்கை அவர் தொடங்கினார். நாளடைவில் ஐதராபாத் கணக்கு பற்றிய நினைப்பு அவருக்கு முற்றிலும் மறந்து போனது. இதனால், அந்த கணக்கு செயலிழந்துள்ளது.

அந்த வங்கிக் கணக்கை திறக்க செலுத்திய டெபாசிட் தொகையான ஐந்து ஆயிரம் ரூபாய் என்ன ஆனது என்று அவருக்கு தெரியவில்லை. இது போல பலருக்கும் நடந்திருக்கும்.

 

சிலர் வெவ்வேறு வங்கிகளில் கணக்கு தொடங்குகிறார்கள். ஆனால், எல்லா கணக்குகளிலிருந்தும் பரிவர்த்தனைகளை செய்யாமல், சில கணக்குகள் குறித்து மறந்து விடுகிறார்கள்.

 

இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு கணக்கிலிருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், அந்த கணக்கு செயலற்றதாகிவிடும் (Inactive). அதாவது வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, செலுத்தாமலோ இருந்தால் அந்த கணக்கை செயல்பாடு இல்லாத கணக்கு என வங்கி கருதுகிறது.

 

அதிலுள்ள பணத்தை திரும்பப் பெற ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற சரிபார்ப்பு ஆவணங்களை வங்கியில் சமர்பித்தால் கணக்கு 'ஆக்டிவேட்' ஆகி உங்கள் கைக்கு பணம் திரும்ப வந்துவிடும்.

 

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது உரிமை கோரப்படாத வைப்புத்தொகையாக (unclaimed deposit) மாறும். வங்கிகளில் சேமிப்பு கணக்கு, வைப்புத்தொகை, ஆர்.டி ஆகியவை பயன்படுத்தப்படாவிட்டால் உரிமை கோரப்படாமல் போகும்.

 

அத்தகைய கோரப்படாத டெபாசிட்களின் விவரங்களையும் அவற்றில் உள்ள மொத்தத் தொகையையும் நிதியாண்டின் இறுதியில் வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அளிக்க வேண்டும்.

 

அதன் பிறகு, இந்த வைப்புத்தொகை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் 'டிபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு' (DEAF) செல்லும்.

பின்னர், இந்த உரிமை கோரப்படாத டெபாசிட்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

 

என்ன காரணத்தால் கணக்குகள் உரிமை கோரப்படாமல் போகின்றன?

கணக்குகள் செயல்படாமல் இருப்பதற்கும் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையாக இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்.

வங்கிக் கணக்குகள் பற்றிய சரியான கேள்விஞானம் இல்லாமை, கணக்கு வைத்திருப்பவர்கள் இறக்கும் போது அவர்களது கணக்கு விவரங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் போவது அல்லது உரிமை கோர குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் இருப்பது போன்றவை உரிமை கோரப்படாத கணக்குகளுக்குக் காரணமாகும்.

 

"பல சமயங்களில், குடும்பத் தலைவர் வங்கிக் கணக்குகளின் விவரங்களை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை. ஒருவர் கணக்கு தொடங்கும், அதன் விவரம் மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ தெரியாது. சில சமயங்களில் வைப்பு நிதி கணக்கு(FD) திறக்கப்பட்ட விவரம், அந்த நபர் இறந்த பிறகு தெரியவரும். அதன்பிறகு கணக்கு தொடர்பான சான்றிதழை வீட்டில் தேடி எடுத்து வங்கிக்கு வருவார்கள். எங்கள் வங்கிக்கு வரும் பெரும்பாலான வழக்குகள் இப்படித்தான் இருக்கும். சில நேரங்களில் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சரியான புரிதல் இருக்காது. அவர்கள் வங்கிக்கு வரும்போது அந்த கனக்குகள் செயல் இழந்துவிடும்," என்று ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் சரளா கூறினார்.

 

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், நாடு முழுவதும் உரிமை கோரப்படாத டெபாசிட்டுகளுக்கான புதிய தளத்தை தொடங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

தற்போதைய நடைமுறையின்படி, ஒவ்வொரு வங்கியின் இணையதளங்களுக்குச் சென்று உரிமை கோரப்படாத டெபாசிட்களைத் தனித்தனியாக தேட வேண்டும். இந்த புது முயற்சி வாடிக்கையாளர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

முன்னதாக 2014ஆம் ஆண்டு, வாடிக்கையாளர் சேவை குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, ஓராண்டுக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படாத கணக்குகளை, வங்கிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 

பின்பு, அவற்றைப் பற்றி நுகர்வோருக்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்களையோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களையோ கண்டறிந்து விவரங்களை தெரிவிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

 

இவை அனைத்தையும் செய்த பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளின் விவரங்களை வங்கிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

 

இந்திய ஸ்டேட் வங்கியில் மட்டும் 2.17 கோடி உரிமை கோராத கணக்குகள் உள்ளன. இந்த கணக்கின் கீழ் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 1.5 கோடி கணக்குகள் உரிமைக் கோரப்படாமல் இருக்கிறது.

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்குகளை மீண்டும் திறக்க முடியுமா?

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் வங்கிக் கணக்குகளை மீண்டும் திறக்க முடியும். அதற்கு கணக்கு தொடர்பான சரிபார்ப்பு ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இப்போது பல வங்கிகள் KYC விவரங்களை கேட்கின்றன. எனவே, இந்த செயல்முறை எளிதாகிறது.

 

"செயல்படாத கணக்குகளில் உள்ள பணம் அனைத்தும் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் உரிய சரிபார்ப்பு ஆவணங்களை கொடுத்த பின்பு, கணக்கு உங்களுடையது என்பதை நிரூபித்தால், பணம் உங்களை வந்தடையும். இந்த நடைமுறை முடிவதற்கு சில காலம் ஆகும். ஆனால், உங்கள் பணம் வங்கியிடம் பாதுகாப்பாக இருக்கும்," என்றார் வங்கிப் பணியாளர் சரளா.

 

ஆனால் சில நேரங்களில், செயலற்ற அல்லது உரிமை கோரப்படாத கணக்கை மீண்டும் திறக்க வங்கியில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

"வங்கி கணக்குகளில் சில வகையான சேவைக் கட்டணங்கள் உள்ளன. உதாரணமாக, டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், சில சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் செயல்படாத உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பிடித்தம் செய்யப்பட்டு, சில ஆண்டுகளில் பூஜ்ஜியம் ரூபாயாக குறையும். சில நேரங்களில் அது நெகடிவ் எண்ணிக்கையில் சென்று விடும். அதாவது பற்றாக்குறையில் இருக்கும் தொகையை நீங்கள் செலுத்தினால் மட்டுமே உங்கள் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்," என்றார் சரளா.

மீண்டும் கணக்கைத் திறக்காமல் இருந்தால், உங்கள் CIBIL புள்ளிகளை அது பாதிக்கும். அது வருங்காலத்தில் வங்கி மூலமாக கடன் பெறும் போது சில தாக்கத்தை உண்டாக்கக்கூடும் என்று சரளா தெரிவித்தார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)