நாடு
முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,
உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை செய்து
வருகிறது. இந்நிலையில், மாநில தேர்வு வாரியங்களின் அடிப்படையில்
எடுக்கப்பட்ட ஆய்வில், இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு,
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது
தெரியவந்துள்ளது.இது குறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள்
கூறியதாவது:கடந்த 2019ல் நீட் தேர்வுக்கு 14.10 லட்சம் பேர் விண்ணப்பித்த
நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு 20.38 லட்சத்துக்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளனர். இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2.57
லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அடுத்ததாக, கர்நாடகாவில்
இருந்து 1.22 லட்சம் பேரும், மூன்றாவதாக, நீட் தேர்வை எதிர்க்கும்
தமிழகத்தில் இருந்து 1.13 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மிகக்
குறைந்த எண்ணிக்கையாக, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து 1,683 பேர்
மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு தேர்வு எழுதிய 20.38
லட்சம் பேரில், 11.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம்,
மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் நீட்
தேர்வு நடத்தப்பட்டு வருகிறது