 |
|
தமிழக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் ஏதும் உள்ளனவா என, போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் விருது பட்டியல் ஏற்கனவே வெளியாகி விட்டது. தமிழக அரசு சார்பில், 390 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்வதில், பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது.விருது பட்டியல் நேற்று முன்தினம் மாலை தயாரான நிலையில், தேர்வானவர்களின் விபரங்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இரவோடு இரவாக, இயக்குனரகத்தில் இருந்து அனுப்பப்பட்டன. அதில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள் மீது புகார்கள், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளனவா என, ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளனவா என்றும், போலீசார் வழியே விசாரித்து உறுதி செய்து கொள்ள, சி.இ.ஓ.,க்களுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.