பள்ளிகளில் ஜாதி பிரச்னை தொடர்பான மோதல்களை தவிர்க்க, உறுதிமொழி கடிதம் பெற கல்வித்துறை முடிவு

Ennum Ezhuthum
0

 

தமிழகத்தில் இரண்டு மாதங்களாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையில், ஜாதி ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக சில மாணவர்கள், ஆசிரியர்களை ஜாதி ரீதியாக பேசுவதும்; சில இடங்களில், ஆசிரியர்களில் சிலர், மாணவர்களை ஜாதி ரீதியாக நடத்துவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.நாங்குநேரியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் மாணவர் மற்றும் மாணவியை, ஜாதி ரீதியான பிரச்னையில், இன்னொரு தரப்பு மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சித்த சம்பவம், மாநிலம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், ஜாதி பிரச்னைகள் உள்ளதா என, ஆசிரியர்கள், அதிகாரிகள், சமூக நலத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பில், நாங்குநேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின் கழிப்பறையில், சில மாணவர்கள் ஜாதி ரீதியான பிரிவினையை துாண்டும் வாசகங்கள் எழுதியதை, கல்வி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி, நான்கு மாணவர்களை கைது செய்து, சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிஉள்ளனர்.இந்த பிரச்னையை தொடர்ந்து, ஜாதி ரீதியான பிரச்னைகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம், உறுதிமொழி கடிதம் பெற கல்வித்துறை முடிவு செய்துள்ளது.'பள்ளி வளாகத்திலோ, வெளியிலோ, ஜாதி பிரச்னைகளை ஏற்படுத்த மாட்டேன். அவ்வாறு புகார் எழுந்தால், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு சம்மதிக்கிறேன்' என, கடிதம் எழுதி வாங்க, ஆலோசிக்கப்பட்டு உள்ளது.- பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தகவல்

Post a Comment

0Comments

Post a Comment (0)