பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 16 ஆம் தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 26 மாடுகளை பிடித்து முதலிடம் பிடித்த சின்னப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் தமிழரசு என்பவர் முதல் பரிசான காரை தட்டிச் சென்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காளையை அடக்கும் வீரர்களை மாட்டின் உரிமையாளர்கள் தாக்குவதாகசொல்லியிருந்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.
எல்லா ஜல்லிக்கட்டு போட்டிக்கும் போற மாதிரிதான் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கும் போனேன், ஆனால், அங்குதான் அந்த கொடுமை எனக்கும் அரங்கேறியது என பேச ஆரம்பித்தார் கல்லூரி மாணவர் தமிழரசு.
எங்க அப்பா ஒரு மாடுபிடி வீரர் என்பதால் என்னோட சின்ன வயசுல இருந்தே ஜல்லிக்கட்டு போட்டிக்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. அப்ப எனக்கு 5 வயசு இருக்கும், அப்ப என்னோட மாமாக்கள் வேல்கண்ணன், காமாட்சி, தமிழ்மணி, அஜித், பரந்தான், பெரியசாமி, பிரேமதாஸ் எல்லோரும் (ஊரில் இருக்கும் முறைக்காரர்களை மாமா என்றுதான் அழைப்பேன்) காளை மாடு வளத்தாங்க. அப்படி அவங்க வளத்த காளைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு வண்டியில ஏத்திக்கிட்டு போறத பாத்துக்கிட்டே இருப்பேன். ஏல்லோரும் போயிட்டு வர்றோம்னு டாடா காட்டிட்டு போவாங்க.
அப்படி போனவுங்க திரும்பி எப்ப வருவாங்கன்னு வெச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருப்பேன். வண்டி சத்தம் கேட்ட ஒடனே ஓட்டமா ஒடிப்போயி வண்டிக்கு பின்னாடி நிப்பேன். மாப்ளே இந்தாடா வீட்டுக்கு கொண்டுட்டு போன்னு மாடு ஜெயித்த பரிச ஏங்கிட்ட கொடுப்பாங்க. நானும் அத வாங்கிக்கிட்டு நானே ஜெயிச்சுட்டு வந்த மாதிரி கெத்தா வீட்டுக்கு கொண்டுட்டு போவேன். இப்படியாக காளை வளர்ப்பதிலும், காளையை அடக்குவதில் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே போனது.
அப்பதான் எங்க அப்பா சொன்னார், தம்பி நானும் மாடுபிடி வீரன்தான் நான் போகாத ஜல்லிக்கட்டே இல்ல. அதெல்லாம் நமக்கு ஒத்துவராதுன்னு கல்யாணத்தோட ஜல்லிக்கட்டுக்குப் போறத நிறுத்திட்டேன்னு சொல்லி என்னோட ஆர்வத்தை குறைக்கப் பாத்தாரு. ஆனா, அது ஏங்கிட்ட முடியல என்றவர் சிரித்தபடி தொடர்ந்து... எங்க ஊர்ல இருக்குற சின்ன சின்ன மாட்டை பிடுச்சு பழகிகிட்டு இருந்தேன். அப்ப நான் பத்தாவது படுச்சுக்கிட்டு இருந்தேன். பப்ளிக் எக்ஜாம் முடிஞ்சு ஒருவாரம் இருக்கும்னு நெனக்கிறேன்.
அப்ப ஜல்லிக்கட்டுக்கு போறதுக்கு வண்டியில மாட ஏத்திக்கிட்டு கௌம்புனாங்க. நான் எப்படி வண்டியில ஏறுனேன்னே தெரியல. அவங்களுக்குத் தெரியாம கீழ ஒழிஞ்சு ஒக்காந்து போயிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச தூரம் போன பிறகு என்ன பாத்த மாமா, டேய் இங்க என்னடா பன்றேன்னு கேட்டாங்க. நான் திறுதிறுன்னு முழுச்சேன். நல்லவேல வீட்டுக்கு போன்னு திருப்பி அனுப்பாம சரி வான்னு நரிக்குடி பள்ளபட்டி ஜல்லிக்கட்டுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க.
அங்க போயி அவங்களுக்கு வேண்டிய உதவிய செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்ப மாமாக்கு பனியன் கொடுத்தாங்க. டேய் இந்தாடா பனியன்னு ஏங்கிட்ட கொடுத்துட்டு அவங்க மாட அவுக்கப் போயிட்டாங்க. அப்ப மாடு பிடிக்கிறத வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த நான், ஆர்வம் மிகுதியால கொஞ்சம் கொஞ்சமா களத்துல இறங்கி வாடிவாசல் கிட்ட போயிட்டேன். ஆனா சின்ன பையனா இருந்ததால கட்டை கிட்ட என்னய நிக்கவிடாம தள்ளிக்கிட்டே இருந்தாங்க. அப்பதான ஏய் இந்த மாட்ட பிடிங்கப்பா இது பைக் வாங்குன மாடுப்பா முடுஞ்ச தொட்டுப் பாருங்கன்னு மைக்ல சொன்ன ஒடனே வாடிவாசலே காலியாயிருச்சு.
அந்த மாடு களத்துல இறங்கி 5 பேத்த தூக்கிப்போட்டு விளையாண்டத நான் ஏற்கெனவே வீடியோல பாத்திருக்கேன். வாடிவாசல்ல யாரும் இல்லாததால நான் போயி நின்னிருந்தேன். அப்ப வெளிய வந்த மாட பின்பக்கமா தாவி புடுக்க முயற்சி செஞ்சேன். என்னைய தூக்கி எறிஞ்சிருச்சு. பக்கத்துல இருந்தவங்க என்னைய தூக்கி ஒக்கார வெச்சாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அப்ப எங்க மாமா பனியன கொடுடான்னு கேட்டாங்க.
இருங்க மாமா கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன்ற சொல்லி வாடிவாசல்லேயே இருந்தேன். அப்ப வெளிய வந்த ஒரு மாட்ட எப்படி பிடுச்சேன்னே தெரியல ஒரு ஆர்வத்துல புடுச்சுட்டேன். அதுக்கு ஒரு சில்வர் கொடம் பரிசா கொடுத்தாங்க. இப்ப நான் கார் வாங்குனதவிட முதன் முதலா கொடம் வாங்குனதுலதான் சந்தோஷம் அதிகமாக இருந்துச்சு.
ஜல்லிக்கட்டுல மாட்ட புடுச்சு பரிசு வாங்குனப்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா பரிசோட வீட்டுக்குப் போக ரொம்பவே பயமா இருந்துச்சு. அதனால இந்த பரிச நீயே கொண்டுபோ மாமா வீட்டுல வைவாங்கன்னு சொல்லி அழுதேன். டேய் முதன்முதலா மாடு பிடுச்சு பரிசு வாங்கியிருக்க வீட்டுக்கு கொண்டுட்டு போடா திட்டமாட்டாகன்னு சொன்னாரு. நானும் கொடத்த கொண்டுக்கிட்டு வீட்டுக்கு போனேன். அப்ப வீட்ல யாருமே இல்ல. நல்லதா போச்சுன்னு கொடத்த வீட்ல வெச்சிட்டு வெளிய ஓடிட்டேன். அதுக்கு அப்புறமா வீட்டு வந்த அம்மா அந்த கொடத்த பாத்துட்டு கோவமா இருந்தாங்க.
அப்ப நான் வீட்டுக்கு போனப்ப, சொல்லாம கொள்ளாம எங்கடா போயிட்டு வந்தேன்னு கன்னத்துல சப்புன்னு அடுச்சு வீட்ட விட்டு வெறட்டி விட்டுட்டாங்க. அப்ப நான் போயி எங்க அப்பத்தா வீட்டுல இருந்தேன்.
அப்ப எங்க பக்கத்து வீட்ல ஒரு விசேஷம் நடந்துச்சு. அதுக்கு நான் போனப்ப எங்க அப்பாவ பாத்துட்டு பயந்து ஓடுனேன்.
டேய் வாடா ஒன்னையா அடிக்க மாட்டேன்னு பக்கத்துல கூப்டு, அவரு மாடுபிடி வீரரா இருந்தப்ப பட்ட கஷ்டத்த ஏங்கிட்ட சொன்னாரு. அதுக்கு அப்புறமா ஆறு மாசம் ஜல்லிக்கட்டுக்கு எங்கேயும் போகாம இருந்தேன். அப்புறமா கபடி வெளையாட போறேன்னு வீட்ல சொல்லிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு போனேன். அனுபவம் இல்லாததால அங்க ஏழு மாடு மட்டுமே புடிக்க முடுஞ்சது.
இதுக்கு பரிசா அண்டா, வெள்ளி காசு, பனியனு, பட்டுச்சட்ட, ஸ்வீட் பாக்ஸ் பரிசா வாங்கியிருக்கேன். இதுவரையும் நான் வாங்குன பரிசு 3 லட்சம் இருக்கும். ஆனா, ஏங்க வீட்ல எந்த பரிசையும் வச்சுக்கல. ஜல்லிக்கட்டு போட்டிக்கு போக ஏங்கிட்ட காசு இருக்காது அப்ப எனக்கு காசு கொடுத்து ஒதவுனவுங்களுக்கு போட்டியில ஜெயிச்சு வர்ற பரிச அவங்களுக்கு கொடுப்பேன்.
ஆனா, அவங்க வாங்க மாட்டாங்க. பிடிங்கன்னு அவங்க வீட்லயே வெச்சுட்டு ஓடியாந்துருவேன்.
இப்ப பாலமேட்டுல நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன்ல புக்பண்ணிட்டு காத்திருந்தேன். ஒரு வகையா வந்துருச்சு. சாமியும் உத்தரவு கொடுத்திருச்சு. அந்த போட்டியில களமிறங்கி மொத்தமா 26 மாடு புடுச்சேன். அதுக்கு கார் பரிசாக கொடுப்பதாக சொல்லியிருக்காங்க.
இந்த போட்டியில ரொம்ப காயம்பட்டுருச்சு, இடையில ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துதான் 6 மாட்ட புடுச்சேன். இப்ப வீட்ல எல்லோரும் சந்தோஷமா இருந்தாலும். என் மேல கொஞ்சம் கொவமாதான் இருக்காங்க என்றவரிடம் நீங்கள் மாட்டை பிடித்தபோது மாட்டின் உரிமையாளர்கள் உங்களை அடித்ததாகச் சொன்னீர்களே என்று கேட்டதற்கு...
மாடுபிடி வீரர்கள அடிக்கிறத நான் நெறையா இடத்துல பாத்திருக்கேன். இது கமிட்டி, காவல்துறை எல்லோருக்குமே தெரியும். ஆனா. கண்டுக்க மாட்டாங்க. தடை பட்டிருந்த ஜல்லிக்கட்ட கஷ்டப்பட்டு மீட்டோம். ஓற்றுமையா ஜல்லிக்கட்டு போட்டிய நடத்திக்கிட்டு இருக்காங்க. இதுல போயி இது போன்று நடப்பது மனசுக்கு வருத்தமா இருக்கு அதனாலதான் நான் அதைச் சொன்னேன். இது போன்ற சம்பவம் இனிமேல் எந்த போட்டியிலும் நடக்கக் கூடாது என்பதுதான் என்னோட ஆசை.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசும் விழாக் குழுவினரும் முன்னொடுக்க வேண்டும். அதேபோல், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் மாடுபிடி வீரர்களின் சார்பாக கோரிக்கையும் வைத்தார்.
எது எப்படியோ தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை பாரம்பரியம் சிதையாமல் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.