தரமற்ற தண்ணீரால் அதிகரிக்கும் உடல் உபாதைகள்: கேன் வாட்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள்

Ennum Ezhuthum
5 minute read
0
ads banner

 

தரமற்ற தண்ணீரால் அதிகரிக்கும் உடல் உபாதைகள்: கேன் வாட்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள்: மெட்ரோ வாட்டரே சிறந்தது என மருத்துவர்கள் சான்று

நீரின்றி அமையாது உலகு என்னும் கூற்றுக்கு ஏற்ப, ஒவ்வொரு நிகழ்விலும் தண்ணீர் மனிதனுக்கு அவசியமான ஒன்றாக விளங்குகிறது.

 

அவ்வாறு உள்ள தண்ணீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறியாமல் விளம்பரங்களை நம்பி மனிதன் போலியான ஒரு வாழ்க்கைக்குள் பயணம் செய்து கொண்டு இருக்கிறான். 

சாதாரணமாக, ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு உள்ள தண்ணீரை பருகாமல், சுத்தமானது என கருதி மினரல் வாட்டர் வேண்டும் என கேட்டு கடைகளில் வாங்கி குடிக்கும் நபர்கள், அந்த தண்ணீரில் என்ன மினரல் உள்ளது என்று எண்ணிப் பார்ப்பதில்லை. தண்ணீரின் சுவையை அறிந்த மனிதர்கள் தண்ணீரின் தரம் அறியாமல் அதனை பயன்படுத்தி வருவது வேதனையின் உச்சம்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது சென்னைவாசிகள். காரணம், நகரமயமாதல், அதிவேக வளர்ச்சி போன்றவை. அந்த வகையில், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிகளவில் தண்ணீர் கேன் விற்பனை நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் வேலை செய்யும் இடங்களில் மட்டுமே அதிகமாக தண்ணீர் கேன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சென்னையில் தண்ணீர் கேன் பயன்பாடு இல்லாத வீடே இல்லை. கடந்த பல ஆண்டுகளாக சென்னை மக்கள் பயன்படுத்தி வரும் கேன் தண்ணீரால் அவர்களின் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமலேயே தொடர்ந்து கேன் தண்ணீரை பயன்படுத்தி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கேன் தண்ணீர் என்றாலே மினரல் வாட்டர் என்று நினைத்துக் கொள்ளும் சென்னைவாசிகள், அந்த தேன் தண்ணீரில் எத்தனை விதமான ராசாயனங்கள் கலக்கப்படுகிறது, அதன்மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள். கார்பரேஷன் வாட்டர் என்றால் ஏளனமாக பார்க்கும் சென்னைவாசிகள், காசு கொடுத்து நோயை வாங்கும் நிலையில்தான் தற்போது இருந்து வருகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. 

 தண்ணீரில் உள்ள கரைசல்களின் உப்புத்தன்மை குறைந்தபட்சம் 100க்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு கீழ் இருந்தால் அந்த தண்ணீரில் எந்தவிதமான மினரல்களும் இருக்க வாய்ப்பில்லை. மனிதனின் உடலுக்கு கண்டிப்பாக மினரல்கள் தேவை. எனவேதான் தண்ணீரை அதிகமாக மனிதன் பருகி வருகிறான். தற்போது விற்கப்படும் கேன் தண்ணீரில் மினரல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. மேலும், இந்த கேன் தண்ணீரில் சுவைக்காக கலக்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணருவதில்லை.

இதுகுறித்து சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுகாதாரமான குடிநீர் என நினைத்து மக்கள் பணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கும்போது அதன் தரம் நன்றாக உள்ளது என தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர். இலவசமாக வரும் மெட்ரோ வாட்டர் குடிநீரை அவர்கள் பருக பயப்படுகிறார்கள். ஆனால் கேன் தண்ணீரில் உள்ள மினரல்களை விட மெட்ரோ வாட்டர் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் அதிக மினரல்கள் இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறையில் 500 டிடிஎஸ் வரை உள்ள தண்ணீரை மனிதர்கள் பருகலாம். தவிர்க்க முடியாத இடங்களில் 2000 டிடிஎஸ் வரை உள்ள தண்ணீரை மனிதர்கள் பருகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்பரேஷன் மூலம் வழங்கப்படும் மெட்ரோ வாட்டரில் 300 முதல் 350 வரை டிடிஎஸ் உள்ளது. சென்னையில் வந்து தங்கும் கிராமவாசிகள் இங்குள்ள கார்பரேஷன் தண்ணீரை குடித்துவிட்டு ஊருக்கு சென்று வேறு தண்ணீர் குடிக்கும் போது அதன் வித்தியாசம் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் சென்னையில் அந்த அளவிற்கு தண்ணீரில் சுவை மாறுபடும். தற்போது சென்னைவாசிகள் கேன் தண்ணீரை குடித்து பழகி விட்டதால் மெட்ரோ வாட்டரை குடிக்கும் போது அது அவர்களுக்கு பிடிப்பதில்லை.

தற்போது சென்னையில் விற்கப்படும் பல நிறுவனங்களின் கேன் தண்ணீரில் 100 டிடிஎஸ் அளவிற்கு குறைவாகவே உள்ளன. இதனால், அதில் மினரல்கள் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. மினரல் வாட்டர் என்பது தண்ணீரில் உள்ள அனைத்து தாது சத்துக்களையும் எடுத்துவிட்டு மனிதனுக்கு தேவையான மினரல்களை அதில் உட்புகுத்துவார்கள். அதன் பெயர் தான் ஒரிஜினல் மினரல் வாட்டர். அந்த தண்ணீர் ஒரு லிட்டர் குறைந்தபட்சம் ரூ.200 வரை விற்கப்படும். அதுதான் ஒரிஜினல் மினரல் வாட்டர். ஆனால் நமது ஊரில் கேன் தண்ணீரையும், பாட்டில்களில் ரூ.20க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களையும் மினரல் வாட்டர் என்று நம்பி மக்கள் குடித்து வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். சென்னை மாநகராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை காய்ச்சி குடித்தாலே நோயில்லாமல் வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* 30 ரூபாய்க்கு தரமான குடிநீர் தர முடியாது
சென்னையில் தற்போது ரூ.30க்கு கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. 20 லிட்டர் கொண்ட இந்த தண்ணீரை மினரல் வாட்டர் என்று கூறி பலரும் விற்று வருகின்றனர். ஆனால் முறையாக 5 பில்டர்களை பயன்படுத்தி 20 லிட்டர் கேன் தண்ணீரை தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.80லிருந்து ரூ.85 வரை செலவு ஆகும். இதில் 20 சதவீதம் அவர்களது கமிஷன் அடங்கும். ஆக ரூ.65 முதலீடு இல்லாமல் ஓரளவிற்கு தரமான குடிநீரை கேன் வியாபாரிகள் பொதுமக்களுக்கு தர முடியாது.

* தர பரிசோதனை செய்வதில்லை
தண்ணீர் கேன் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்கும் போது மீண்டும் அவர்கள் உரிமம் பெறுவதற்கு 3 மாத காலம் ஆகிவிடுகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தொழில் செய்து தான் வருகிறார்கள். அவ்வாறு இவர்களுக்கு சான்று அளிக்கும் நபர்கள் குறிப்பிட்ட தண்ணீர் கேன் இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது கிடையாது என்றும், சில இடங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழந்துள்ளது. எனவே தண்ணீர் கேன் வியாபாரத்திற்கு சான்றளிக்கும்போது அதிகாரிகள் நேரில் சென்று எத்தனை பில்டர்கள் பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு தண்ணீர் எடுக்கப்படுகிறது மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவற்றை ஆராய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

* மறுசுழற்சி கூடாது
தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் நபர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, பூமியில் இருந்து தண்ணீரை எடுத்து அதனை சுத்தம் செய்து பில்டர்களால் வடிகட்டி தண்ணீரை எடுத்து செல்கின்றனர். அவ்வாறு தண்ணீரை சுத்தம் செய்யும்போது 100 லிட்டர் தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது என்றால் குறைந்தது 40 சதவீத தண்ணீர் அவர்களுக்கு தேவையில்லாமல் போய்விடுகிறது. அந்த தண்ணீரை மீண்டும் பூமிக்குள் அனுப்பி விடுகிறார்கள். அவ்வாறு அனுப்பாமல் அந்த தண்ணீரை வேறு ஏதாவது செயலுக்கு பயன்படுத்த வேண்டும். மினரல்கள் எடுக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பூமிக்குள் விட்டால் மீண்டும் அது மறுசுழற்சி ஆகிவிடும் என தண்ணீர் கேன் வியாபாரிகள் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. இவ்வாறு தண்ணீரை மீண்டும் மீண்டும் மறு சுழற்சி செய்வதன் மூலம் தண்ணீரின் தரம் வெகுவாக குறைந்து எந்தவித மினரல்களும் இல்லாமல் தண்ணீர் பொதுமக்களை சென்றடைகிறது என்பதே உண்மை.

* மூட்டு வலி, கிட்னியில் கல் பிரச்னை வரும்
கேன் தண்ணீர் பயன்பாடு குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேஷ் கூறியதாவது: மனிதனின் உடலுக்கு மினரல் இன்றியமையாதது. மனிதனின் குடல் பகுதியை சிங்க் எனும் மினரல் பாதுகாக்கிறது. குரோமியம் எனும் மினரல் மூட்டுகளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. இதுபோன்று கால்சியம் உள்ளிட்ட பலவகையான சத்துக்களும் மனிதனுக்கு இன்றியமையாதது. இவை அனைத்தும் தண்ணீரில் உள்ளது.
ஒருகாலக்கட்டத்தில் மனிதர்கள் கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர்.

மேலும் ஆறு, குளங்களில் உள்ள நீரையும் பயன்படுத்தி வந்தனர். இவை அனைத்திலும் மனிதனுக்கு தேவையான மினரல்கள் நிறைந்து இருந்தன. ஆர்ஓ வாட்டர் முறை தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்த ஆர்ஓ முறையை பயன்படுத்துவதற்கு 5 பில்டர்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எந்த ஒரு தண்ணீரையும் இந்த 5 பில்டர்களின் வழியாக மினரல் வாட்டராக கொண்டுவர முடியும். முறையாக 5 பில்டர்களையும் பயன்படுத்தி 5வது பில்டரில் இருந்து வரப்படும் தண்ணீரில் தான் முழுமையான மினரல்கள் உள்ளன. இவைதான் ஒரிஜினல் மினரல் வாட்டர். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான நபர்கள் 2 பில்டர்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

அதில் மினரல் வாட்டர் சுவை வந்துவிடுகிறது. அதனால் மற்ற 3 பில்டர்களை பயன்படுத்தாமல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் தண்ணீரில் சுவை இருக்கும், ஆனால் இருக்க வேண்டிய மினரல்களின் எண்ணிக்கை இருக்காது. ஒரு பில்டரை பயன்படுத்தி ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வடிகட்டி எடுக்க முடியும். 

 

அதற்கு மேல் அந்த பில்டரை பயன்படுத்தினால் அது எதற்கும் உதவாது. ஆனால் இதை பலரும் முறையாக பயன்படுத்தாமல் பில்டர் கிழியும் வரை அதனை பயன்படுத்துகின்றனர். முதல் 2 பில்டர்களுக்கு சாதாரணமாக செலவு ஆகும். ஆனால் 3, 4, 5 ஆகிய பில்டர்களை பயன்படுத்தும் போது அதற்கு கூடுதல் செலவு ஆகும். இதனால் கேன் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் 5 பில்டர்களை முறையாக பயன்படுத்துவது கிடையாது.

இதுபோன்ற தரம் இல்லாத தண்ணீரை பருகும்போது காலப்போக்கில் கிட்னியில் கற்கள் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் மனித உடலில் எங்கெங்கு மூட்டு பகுதி உள்ளதோ அங்கு உப்பு நீர் படிவம் அதிகரித்து நாள்பட்ட வலி ஏற்படுகிறது. இதனால் 40, 45 வயது உடையவர்கள் கூட தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். கிட்னியில் கல் உள்ளது என்ற பிரச்னையுடன் வரும் 90% மக்கள் கேன் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். எனவே தரம் இல்லாத கேன் தண்ணீரை தவிர்த்து மெட்ரோ வாட்டர் மூலம் வழங்கப்படும் தண்ணீரை காய்ச்சி குடித்தாலே உடலுக்கு தேவையான மினரல்கள் கிடைக்கும், என்றார்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 30, March 2025