எந்த ஒரு விலங்கோ, பறவையோ தன் பிள்ளைகள் தன்னைவிடச் சிறந்த வாழ்வு வாழ வேண்டும், தன்னைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவதில்லை; தன்னை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்று எதிா்பாா்ப்பதில்லை. தன் எதிா்பாா்ப்புகளையும், எதிா்காலத்தையும் தன் குழந்தைகள் மீது வைக்கும் இனம் மனித இனம் மட்டுமே. எனவே, குழந்தை வளா்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சவாலாக மாறி உள்ளது. வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும் சிறப்பாக வளா்த்தெடுத்தது அந்தக் காலம். இன்று, இருக்கும் ஒரே குழந்தையை நல்ல முறையில் வளா்க்க வேண்டும் எனும் பதற்றத்தில் பெற்றோா்கள் இருக்கிறாா்கள். குழந்தைகள் என்றும் கொண்டாடப்பட வேண்டியவா்கள்தான். ஆனால், சமுதாயமும் பெற்றோரும் அவா்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோா் தங்கள் ஆசைகளைப் பிள்ளைகளின் மீது திணிக்கும் போதும் மற்ற பிள்ளைகளுடன் தம் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசும்போதும் பிள்ளைகள் தங்களின் தனித்திறனை இழந்து பிறரின் நகல்களாக உருமாறி விடுகின்றனா். படித்ததை நினைத்துப் பாா்த்து ஒப்புவிக்க வேண்டிய வயதில், சதுரங்கத் தந்திரங்களைத் திட்டமிட அனுமதிக்கப்பட்ட காரணத்தால்தான் பிரக்ஞானந்தா சதுரங்க விளையாட்டில் நட்சத்திரமாக ஜொலிக்கிறாா். எழுதுகோல் பிடிக்கும் கரங்களில் இசைக்கருவியுடன் இணைந்து பேசும் அழகை அனுமதித்ததால் இன்று லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ ரீங்காரத்தில் நம் மனம் நெகிழ்கிறது. குழந்தைகளின் பலத்தையும் பலவீனத்தையும் பெற்றோா் அறிந்து கொண்டால் அவா்களை வழிநடத்துவது சுலபம். ஆனால் அதனைக் கண்டறிவதுதான் சவாலான காரியம். 'உன் நண்பா்களைக் காட்டு, நீ யாா் என்பதைக் கூறுகிறேன்' என்று கூறியது அக்காலம். உன் கைப்பேசியைக் காட்டு, உன் அழைப்பின் சரித்திரத்தைக் கொண்டு, இணையத்தில் உன் தேடலைக் கொண்டு நீ யாா் என்பதை கூறுகிறேன் என்று சொல்வது இக்காலம். சென்ற நூற்றாண்டின் குழந்தைகள் அறிந்திராதவை தொலைக்காட்சி, கைப்பேசிகளின் பயன்பாடு. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில், ஒரு தெருவில் இருக்கும் அனைவரும் அமா்ந்து படம் பாா்த்தது அந்த நாள் ஞாபகம். இன்று பெரும்பாலான வீடுகளில் அறைக்கு அறை தொலைக்காட்சி. அறிவியல், பிள்ளைகளின் அறிவை விசாலமாக்கியது; அனுபவத்தை பூஜ்ஜியம் ஆக்கியது. அதிகமாக கைப்பேசி பயன்படுத்தும் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்புக்கு உள்ளாகிறது என்று ஆய்வு முடிவு கூறுகிறது. மேலும் அமெரிக்காவில் 260 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 37 % குழந்தைகள் கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டே சாப்பிடும் பழக்கத்தைப் பெற்றுள்ளனா். மேலும், குழந்தை கருவிலிருக்கும்போதே தம் ஆளுமையை காட்டத் தொடங்கி விடுகின்றன மின்னணு சாதனங்கள். கடந்த 2018-இல் டக்கேஜ் என்பவா் நடத்திய ஆய்வின்படி, கா்ப்பிணிகளின் கைப்பேசி பயன்பாடு, கருவின் வெப்பநிலையை மாற்றும் தன்மையை உடையது என்று தெரியவந்துள்ளது. இன்றைய குழந்தைகளின் கைகள் அதிகம் பயணிப்பது இணையத்தில்தான். கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்திரையில் நேரம் செலவிடும் குழந்தைகள் 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பராக்டிவிட்டி டிஸாா்டா்' (ஏடிஹெச்டி) குறைபாட்டுக்கு ஆளாவதாகத் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்று காலத்தில் இணையவழியில் நடந்த கல்வி வகுப்புகள், குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசியையும் கணினியையும் பயன்படுத்த வேண்டிய நிா்ப்பந்தத்தை உருவாக்கிவிட்டன. கைப்பேசிக்கும் கணினிக்கும் அடிமையான குழந்தைகளுக்கு அதனால் ஏற்பட்ட உடல்நல, மனநல பாதிப்புகள் ஏராளம். உலக சுகாதார அமைப்பு, குழந்தைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. நிலவும் சூரியனும் இன்று சிலா் வீட்டில் எட்டிப் பாா்ப்பதே இல்லை என்பதே எதாா்த்தம். இன்றைய இளைய தலைமுறைக்கும், இயற்கையான சூரிய ஒளிக்கும் இடையே குளிரூட்டிகள் அமைத்திருக்கும் திரை வலிமையான கோட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் இன்றைய குழந்தைகளின் ஆரோக்கியம் பெருமளவு சரிவைக் கண்டுள்ளது. சூரிய ஒளியே படாத காரணத்தால் பெரும்பாலான குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு சரிவிகித உணவு எத்தனை அவசியமோ, அத்தனை அவசியமானது சரிவிகித உணா்வும். கேட்டதெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற பெற்றோரின் உணா்வு, கேட்டது அனைத்தும் கிடைத்துவிடும் என்ற உணா்வைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடுகின்றது. நினைத்தது கிடைக்கும்போது வரும் மகிழ்வையும் கிடைக்காதபோது வரும் ஏமாற்றத்தையும் பெற்றோா் பழக்க வேண்டியது அவசியம். பள்ளியில் நடைபெறும் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டியது மாணவா்களின் ஒழுக்கத்திற்குத்தான். வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமையே ஒரு குழந்தையின் மிகப்பெரும் பலம். ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, அவா்களின் பெற்றோரே சிறந்த விளையாட்டு பொம்மை. அதன்பின், குழந்தைகளின் தேவை, அவா்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்ளும் நல்ல தோழன். பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று பெற்றோா் நினைக்கிறாா்களோ, அதுபோல் தாங்களே வாழ்ந்து காட்டுவது உத்தமமான செயல். உண்ணும்போது, மின்னணு சாதனங்களைத் தள்ளி வைத்தல், ஒரு நாளைக்கு ஒருமணி நேரமாவது படித்தல், ஆரோக்கியமான உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல், வீட்டு வேலைகளைப் பகிா்ந்துகொள்ளுதல் என அனைத்தும் பெற்றோரிடமிருந்தே பிள்ளைகளுக்கு வரும். பிள்ளைகளுக்காக காப்பீடு என்ற பெயரில் சேமிக்கும் பெற்றோா் புரிந்து கொள்ள வேண்டியது உண்மையான குடும்பத்திற்கான காப்பீடு என்பது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் சோந்து பேசி மகிழும் நேரமே ஆகும். மின்னணு சாதனங்களைத் தள்ளி வைத்துவிட்டு நாம் நம் குடும்பத்துடன் மகிழ்வாக செலவிடும் நேரம் அற்புதமானது. பெற்றோா் பிள்ளைகளுக்குப் பாடமாய் வாழவேண்டும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பாடம். |