பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.
கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்.
சுற்றிலும் நீலவண்ணத்தில் வானமும், தண்ணீரும் போட்டி போட, அழகிய கடல் அலைகள் வந்து, வந்து செல்லும் அழகை காண இயற்கை பிரியர்களுக்கு எப்போதுமே சலிக்காது.
இப்படி இந்தியாவில் உள்ள அழகிய மற்றும் அமைதியான இடங்களில் ஒன்று லட்சத்தீவு. இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ஒன்றாகும். மொத்தம் 36 தீவுகள், 12 பவளப்பாறைகள் மற்றும் மூன்று திட்டுகள் உள்ளன. ஆனால், இவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மினிகாய் தீவு, கல்பேனி தீவுகள், கத்மத் தீவுகள், பங்காரம் தீவு மற்றும் தின்னகர தீவு உள்ளிட்டவை மிகவும் பிரபலமான இடங்களாகும்.
எப்படி அடைவது? கேரள மாநிலத்தின் கொச்சி வழியாகத்தான் லட்சத்தீவுக்கு செல்ல முடியும். கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு விமானம் மற்றும் கப்பல் வசதி உள்ளது. லட்சத்தீவுக்குள் நேரடியாக நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள லட்சத்தீவு நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
இதற்கு முதலில் அனுமதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து, உங்களின் அடையாள ஆவணங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் உரிய அனுமதி பெற வேண்டும். பின்னர், நுழைவு அனுமதியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அல்லது கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவில் அமைந்துள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகத்தில் நேரிலும் பெறலாம். லட்சத்தீவை அடைந்ததும், இந்த நுழைவு அனுமதிப்பத்திரத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் விமானத்தில் செல்வதாக இருந்தால் முடிந்தளவு உங்களின் பேக்கிங்கை குறைவாக இருக்க திட்டமிடுங்கள்; இங்குள்ள விமானங்கள் சிறியவை மற்றும் குறைந்த திறன் கொண்டவை. எனவே, இதற்கேற்ப உங்களின் லக்கேஜ் இருக்க வேண்டும்.
கொச்சியில் இருந்து அகத்தி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள். கப்பல்களில்... எம்.வி. கவரட்டி, எம்.வி. மினிகாய், எம்.வி. அமிண்டிவி, எம்.வி. கோரல்ஸ், எம்.வி. லகூன், எம்.வி.லட்சத்தீவு கடல் மற்றும் எம்.வி. அரபிக்கடல் உள்ளிட்ட ஏழு கப்பல்கள் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்குச் செல்கின்றன.
அவரவர் பட்ஜெட்டுக்கேற்ப ஏசி, டீலக்ஸ் என தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். கொச்சியில் இருந்து 14 முதல் 20 மணி நேர பயணத்தில் இலக்கை அடையலாம்