உடலை இயக்கும் பெட்ரோல். ஹார்மோன் மேஜிக்!

Ennum Ezhuthum
0

 

உடலை இயக்கும் பெட்ரோல். ஹார்மோன் மேஜிக்!

மானுட உடல் மகத்தான அற்புதம். அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது இன்று மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாய் உள்ளது.

நம் உடலை இயக்கும் முக்கிய உறுப்பு மூளைதான். அதாவது மூளை என்ற உயிர்ப்பொருளின் வாகனமே நம் மனித உடல். மூளை செயல்படவும். அது நினைக்கும் விஷயங்களை சாதிக்கவும் உதவும் துணை உறுப்புகளே மற்ற உறுப்புகள் யாவும்.

இப்படி நம் உடலை ஒரு வாகனமாக்கி தன்னை ஒரு சாரதியாக்கி இயங்கும் மூளைக்கு நம் உடலை இயக்கும் பெட்ரோல் எது தெரியுமா அது ஹார்மோன்கள். இவை நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் உற்பத்தியாகின்றன. நம் உடலில் கீழிருந்து மேல் வரை ஆறு நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் பலவிதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதைத் தவிர நம் மூளையும் சில ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள்தான் நம் உடலை மொத்தமாக இயக்குகின்றன. இவை தம்மோடு ஒன்றுக்கு ஒன்று ஒத்திசைவு கொண்டு செயல்படுவதால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். எந்த ஒரு செயலையும் செய்கிறோம்.

உதாரணமாக, உடல் வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியும், உடலின் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கணையச் சுரப்பியும், பாலுணர்வைத் தூண்ட அண்டம் மற்றும் விந்தகச் சுரப்பிகளும் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்தையும் நம் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் ஹார்மோன் சுரப்பு மிக அவசியம். அதே நேரத்தில் அது தேவையான அளவுதான் சுரக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் அதுவும் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

ஹார்மோன்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன, நம் உடலில் ஹார்மோன்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்.
நம் உடலில் ஆறு வகையான நாளமில்லா சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் இங்கு காண்போம்.

பிட்யூட்டரி சுரப்பி


நம் மூளைக்கு அருகே, பட்டாணி போன்ற வடிவத்தில் இருப்பது பிட்யூட்டரி சுரப்பி. நாளமில்லா சுரப்பிகளில் இது முதன்மையானது. அதனால்தான் இது `மாஸ்டர் கிளாண்ட்' என்று அழைக்கப்படுகிறது. மற்ற சுரப்பிகளைக் கட்டுப்படுத்துவது, பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். பிட்யூட்டரி சுரப்பியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், மற்ற ஹார்மோன் சுரப்பிகளும் பாதிக்கப்படும். பெண்களின் பிரசவத்தை எளிமையாக்க உதவும் `ஆக்ஸிடோசின்' (Oxytocin) என்னும் ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில்தான் சுரக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் சுரப்புக்குத் தேவையான `புரோலாக்டின்' (Prolactin) எனப்படும் மிக முக்கியமான ஹார்மோனும் பிட்யூட்டரி சுரப்பியில்தான் சுரக்கிறது. பிட்யூட்டரியில் சில பாதிப்புகள் ஏற்படும். பிரசவ காலத்தில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்களுக்கு இந்தச் சுரப்பி சுருங்கிப்போய்விடும். இதற்கு 'ஷீஹேன்ஸ் சிண்ட்ரோம்' (Sheehan's Syndrome) என்று பெயர். இந்த பாதிப்பு தங்களுக்கு இருப்பதே பலருக்குத் தெரியாது. சில பெண்களுக்கு இரண்டு, மூன்று குழந்தைகள் பிறந்த பின்னர் மாதவிடாய் நின்றுவிடும். வயது மூப்பின் காரணமாக மாதவிடாய் நின்றுவிட்டது என அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

வலிப்பு, உடலில் சோடியத்தின் அளவு குறைவது போன்ற பாதிப்புகளால் உடல்நலமில்லாமல் மருத்துவமனைக்கு வரும்போதுதான் பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும். 45 வயதுக்கு முன்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது இயல்பானதல்ல. அப்படி நேர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு சுரப்பி

கழுத்தின் முன்பாகத்தில், வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் இருப்பது தைராய்டு சுரப்பி. இதிலிருந்து தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. டி3 (T3), டி4 (T4) என இரண்டு வகையாக தைராய்டு ஹார்மோன்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் டி3 ஹார்மோன் நம் உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இந்த ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்க வேண்டும். தேவையைவிட அதிகமாகச் சுரந்தால், இதயத்துடிப்பு அதிகரித்தல், உடல் எடை இழப்பு, அடிக்கடி மலம் கழித்தல், எலும்புத் தேய்மானம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதற்கு 'ஹைப்பர்தைராய்டிசம்' (Hyperthyroidism) என்று பெயர். அதேபோல தேவைக்குக் குறைவாகவும் சுரக்கக்கூடாது. அப்படிச் சுரப்பது `ஹைப்போதைராய்டிசம்' (Hypothyroidism) என்று அழைக்கப்படுகிறது.

ஹைப்போதைராய்டிசம் பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒரு பாதிப்பு. இந்த பாதிப்பு ஆண்களைவிட, பெண்களுக்கே அதிகமாக ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், தலை முதல் பாதம்வரை உடலில் ஒவ்வொரு செல்லிலும் பாதிப்பு ஏற்படும். சரும வறட்சி, முடி உதிர்தல், கழுத்து வீக்கம், இதயத்துடிப்பு குறைதல், நுரையீரலைச் சுற்றி நீர் கோத்துக்கொள்ளுதல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள், கருத்தரித்தலில் சிக்கல், கால் வீக்கம், சோர்வு, உடல்வலி, மூட்டுவலி போன்ற பல வகையான பிரச்னைகள் உண்டாகும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில், பத்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. எதனால் இந்த பாதிப்பு உண்டாகிறது என்பதற்குச் சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. `மரபணுக்கள் மூலமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது' என்ற ஒரு கருத்து மருத்துவர்களால் முன்வைக்கப்படுகிறது. தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை 'தைராய்டு செயற்பாட்டுச் சோதனை' (Thyroid Function Test) மூலமாகக் கண்டறியலாம். இந்தப் பரிசோதனையின் மூலம் தைராய்டு ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கின்றனவா, அதிகமாகச் சுரக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை பெறலாம். குறைவாகவோ, அதிகமாகவோ சுரந்தால், மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இந்த பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.

பொதுவாக, தைராய்டு பிரச்னைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். விதிவிலக்காக, சிலருக்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்னை ஏற்படும். பிரசவத்துக்குப் பின்னர் அது சரியாகிவிடும். அவர்கள் அந்தக் காலங்களில் மட்டும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் போதும். தைராய்டு பிரச்னைகளில் முக்கியமானது வலியுடன்கூடிய கழுத்து வீக்கம். அயோடின் குறைபாட்டால் ஏற்படும் இந்த பாதிப்பு, முந்தைய காலங்களில் அதிகமாக இருந்தது. தற்போது நாம் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலந்திருப்பதால், பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.

அதே நேரம், சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தும்போது நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. சமையலில் தொடக்கத்திலேயே உப்பைச் சேர்க்கக் கூடாது. அதிகச் சூட்டில் உப்பில் இருக்கிற சத்துகள் அனைத்தும் அழிந்துவிடும். சமைத்து இறக்கும்நிலையிலோ, இறக்கிய பிறகோதான் சேர்க்க வேண்டும். இது, தைராய்டு பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கழுத்தில் சிலருக்குக் கட்டிகள் ஏற்படலாம். அதை, 'தைராய்டு உருண்டை' (Thyroid Nodule) என்று மருத்துவ மொழியில் குறிப்பிடுவார்கள். சிலர், `இது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ' என அஞ்சுவார்கள். பயப்படத் தேவையில்லை. தைராய்டு பாதித்த நூற்றில் ஒருவருக்கு, தைராய்டு உருண்டைகள் ஏற்படும். ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் மேல் இருந்தால் மட்டும் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில சோதனைகள் செய்து, ஏதேனும் பாதிப்பு இருந்தால் மட்டும் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்வார்கள்.

கருவிலிருக்கும் குழந்தைக்கு முதல் மூன்று மாதங்களில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கவே ஆரம்பித்திருக்காது. தாயின் ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவிபுரியும். அதனால், பெண்கள் கருவுற்றவுடனே தைராய்டு உற்பத்தி சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பின்னரும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

'தைராய்டு பிரச்னை இருந்தால், கருவுறுதலில் பிரச்னை உண்டாகும். பிறக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்' என்றெல்லாம் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அவையெல்லாம் உண்மையல்ல. தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தைராய்டு ஹார்மோன்களின் அளவைச் சரியாகப் பராமரித்துவந்தால் பிரசவத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. குழந்தைக்கும் பிரச்னை இருக்காது.

கணையச் சுரப்பி

கணையச் சுரப்பியிலுள்ள பீட்டா செல்களில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் மிக முக்கியமானது. நம் உடலில், செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கு இந்த ஹார்மோன்கள்தான் உதவிபுரிகின்றன. இவை சரியான அளவில் சுரக்காவிட்டாலும், சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலும் சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படும்.

இன்சுலின் உற்பத்தியே இல்லையென்றால் அது, 'டைப் 1 சர்க்கரைநோய்' என்று அழைக்கப்படுகிறது. இன்சுலினை உற்பத்தி செய்யக்கூடிய பீட்டா செல்கள் அழிந்து போவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏன் அழிந்து போகின்றன என்பதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 15-16 வயதிலேயே இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

திடீரென எடை இழப்பு, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்ற பாதிப்புகள் இருந்தால், டைப் 1 சர்க்கரைநோய் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் உற்பத்தியாகி, அது சரியாக வேலை செய்யாமலிருந்தால் அதை, `டைப் 2 சர்க்கரைநோய்' என்கிறோம். நம் நாட்டில் டைப் 2 சர்க்கரைநோய் பாதிப்புதான் அதிகம் பேருக்கு இருக்கிறது. அதற்கு உடல் பருமன் ஒரு முக்கியக் காரணம்.

இந்த பாதிப்பு உடல்சோர்வு, உடல் வலுவிழப்பு போன்றவற்றுக்கும் காரணமாகலாம். மருத்துவர் பரிசோதனை செய்து, எந்த வகை சர்க்கரைநோய் எனக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிப்பார். டைப் 1 சர்க்கரைநோய் என்றால், கண்டிப்பாக ஊசி மூலம் இன்சுலின் செலுத்தியாக வேண்டும். டைப் 2 வகை என்றால், மாத்திரைகளின் மூலமாகவே கட்டுப்படுத்தலாம். தேவைப்படும் நேரங்களில் மட்டும் இன்சுலின் செலுத்தினால் போதுமானது.

டயாபட்டீஸ் இன்சிபிடிஸ் (Diabetes Insipidus)


மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதாலமஸில் சுரக்கும் 'வேசோப்ரெஸின்' (Vasopressin) என்னும் ஹார்மோன் சரியாகச் சுரக்காவிட்டால், சிறுநீர் நீர்த்துப்போகும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உண்டாகும். நாளொன்றுக்கு ஏழு முதல் பத்து லிட்டர்வரை சிறுநீர் வெளியாகும். மூளைப்பகுதியில் கட்டிகளோ, காயங்களோ ஏற்பட்டால் இந்த ஹார்மோன் சுரப்பியில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். 'வேசோப்ரெஸின்' ஹார்மோன்களை மருந்து, மாத்திரைகளின் மூலம் சீராகச் சுரக்கச் செய்யமுடியும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)