லால்குடி, செம்மங்குடி, அரியக்குடி, குன்னக்குடி முதலான ஊர்கள் அங்கு பிறந்த இசைக் கலைஞர்களால் புகழ்பெற்றவை.
இதில் குன்னக்குடியின் பெயர் வயலின் இசைக்காக மட்டுமல்ல, சமயத்தையும் சமூகத்தையும் ஒருங்கே நேசித்த அடிகளாருக்காகவும் அறியப்படுகிறது.
இந்த வரிசையில் இனி அரியக்குடியின் பெயரும் இசையைத் தாண்டி அறியப்படும். மிகுதியும் சைவத் திருத்தலங்கள் நிறைந்த சிவகங்கை மாவட்டத்தில் விதிவிலக்காக அமைந்த திருவேங்கடமுடையான் திருக்கோயில் அதற்கு ஒரு காரணமாக இருக்கும்.இன்னொரு காரணம்: அரியக்குடி அரசு மேனிலைப் பள்ளி.
அரிய பணி: அரியக்குடி, எட்டாயிரம் மக்கள் வாழ்கிற ஓர் ஊராட்சி. மாநிலத்தின் மற்ற பல சிற்றூர்களைப் போலவே ஊர் மக்கள் இப்போது வேளாண்மையை மட்டுமே நம்பி வாழ்வதில்லை. இவை ஒற்றுமைகள். சில வேற்றுமைகளும் உண்டு. அதில் முதலாவது அரசு மேனிலைப் பள்ளி; குறிப்பாகப் பள்ளி நூலகம். பல தனியார் பள்ளிகளின் கல்வி, பாடப் புத்தகங்களின் முன்னட்டையில் தொடங்கி பின்னட்டையில் முடிந்துவிடுகிறது.
மாறாக, பாடப் புத்தகங்களில் தொடங்கும் கல்வி நூலகங்களில் நீட்சி பெற வேண்டும். மாணவர்களின் வளர்ச்சி விளையாட்டுத் திடல்களிலும் பண்பாட்டு நிகழ்வுகளிலும் பரிணமிக்க வேண்டும். அப்படியான பள்ளிகளால்தான் அறிவும் பொறுப்பும் மிக்க குடிமக்களை உருவாக்க முடியும். அரியக்குடி பள்ளி அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
புத்துயிர் பெற்ற நூலகம்: கடந்த ஓராண்டு காலத்தில் அரியக்குடி பள்ளியின் நூலகம் அடைந்திருக்கிற வளர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது. மற்ற பல பள்ளி நூலகங்களைப் போல இந்தப் பள்ளி நூலகமும் பெரிய பயன்பாடு இல்லாமல்தான் இருந்தது. புத்தகங்கள் தட்டுமுட்டுச் சாமான்களோடு ஒரு பழைய கட்டிடத்தில் முடங்கிக் கிடந்தன. அந்தக் கட்டிடத்தை இடித்துவிடலாம் என்றுகூடச் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோவுக்கும் அவரது சகாக்களுக்கும் அதைப் புனரமைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. அவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மணிவண்ணனின் ஆதரவும் இருந்தது. அது பள்ளிப் பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தைப் பெற்றுத் தந்தது. சாளரங்கள் மாற்றப்பட்டன. தளம் சீரமைக்கப்பட்டது. தட்டோடுகள் பதிக்கப்பட்டன. சுவர்களில் புதிய பூச்சும் வண்ணமும் ஏற்றப்பட்டது. பழைய அலமாரிகள் பழுதுபார்க்கப்பட்டன.
மின் வடங்களை மாற்றவும் விளக்குகளும் விசிறிகளும் பொருத்தவும் ரூ.1.50 லட்சம் செலவானது. நான்கு பெரிய மேசைகளுக்கும் 40 நாற்காலிகளுக்கும் ரூ.70,000 ஆனது. நூலகத்துக்கு வெளியே நடைபாதைகள் அமைக்கப்பட்டன. உள்ளே திரைச்சீலைகளும், சுவரோவியங்களும் பொன்மொழிகளும் அழகு சேர்த்தன. இதற்கெல்லாம் பல தொண்டு நிறுவனங்கள் உதவிசெய்தன.
ஆர்வலர்கள் பலரும் இணைந்துகொண்டனர். சிலர் தாம் படித்துப் பயன்பெற்ற தரமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். இன்னும் சிலர் புதிய அலமாரிகளையும் வழங்கினர். இப்போது 720 சதுர அடியில் காற்றோட்டமும் வெளிச்சமும் கூடிய சூழலில் 6,000 புத்தகங்களைக் கொண்ட நவீன நூலகம் தயாராகிவிட்டது.
முன்மாதிரி முயற்சிகள்: ஏப்ரல் 2022இல் மாவட்ட ஆட்சியர் நூலகத்தைத் திறந்துவைத்தார். நூலகக் கட்டிடத்தையும் நூல்களையும் கண்டு வியந்து பாராட்டினார். பள்ளியின் 650 மாணவர்களுக்குப் புதிய சாளரங்கள் திறந்திருப்பதை மாவட்டத்தின் அனைத்துத் தலைமை ஆசிரியர்களோடும் பகிர்ந்துகொண்டார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்ற நிகழ்வொன்றில், இந்தச் சிற்றூரின் நூலகத்தைப் பற்றிப் பெருமையுடன் ஆட்சியர் குறிப்பிட்டார். மாவட்டத்தின் பிற பள்ளிகளுக்கு அரியக்குடி பள்ளி நூலகம் முன்மாதிரியாக அமையட்டும் என்று பேசினார் அமைச்சர். அந்த உரை ஊடகங்களில் வெளியானது.
செய்தி பரவியது. அது ஒரு பிரமுகரின் செவிகளை எட்டியது. அவர் 25 ஆண்டுகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர், இப்போது மாநிலங்களவை உறுப்பினர். அவர் - ப.சிதம்பரம். அவர் அரியக்குடி வந்தார். நூலகத்தைக் கண்டார். பாழடைந்த கட்டிடமும் பழைய புத்தகங்களும் ஒரு நவீன நூலகமாக மாறிய கதையைக் கேட்டறிந்தார். அவர் அத்துடன் நிற்கவில்லை.
மாவட்டக் கல்வி அலுவலரிடம், 20 அரசுப் பள்ளிகளைத் தெரிவுசெய்யச் சொன்னார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூ.1 கோடி ஒதுக்கினார். ஒரு பள்ளிக்கு ரூ.5 லட்சம் வீதம் செலவிட்டு, அந்தப் பள்ளிகளின் நூலகங்களையும் நவீனமாக்கச் சொன்னார். அரியக்குடிதான் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றார். இப்போது 20 அரசுப் பள்ளி நூலகங்கள் நவீனமாகி வருகின்றன.
அரியக்குடி பாணி: அரியக்குடி பள்ளியின் சாதனைக் கதை இன்னும் இருக்கிறது. வேலூர் வி.ஐ.டி. கல்வி நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புலமைப் பரிசிலுடன் தனது கல்லூரியில் இடம் வழங்குகிறது. கடந்த நான்காண்டுகளாக சிவகங்கை மாவட்ட இடங்களை அரியக்குடி மாணவர்கள் கையகப்படுத்தி வருகிறார்கள்.
மருத்துவக் கல்லூரியிலும் அரசுப் பள்ளிக்கான இடங்களைக் கைப்பற்றுகிறார்கள். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்கிறார்கள். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியிலும் சேர்கிறார்கள். காரைக்குடியில் அமைந்திருக்கும் மின்வேதியியல் ஆய்வு மையத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவர்கள் கோப்பைகளை அள்ளுகிறார்கள்.
பள்ளியின் வளர்ச்சியை அறிந்த பலர், பள்ளியின் நூலக மேம்பாட்டில் தங்களையும் இணைத்துக்கொள்கின்றனர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் தங்கள் பங்களிப்பாக நூலகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வழங்குகின்றனர். இந்த நன்கொடையில் நான்கு தமிழ் நாளிதழ்கள், ஓர் ஆங்கில நாளிதழ், பதின் பருவத்தினருக்கான நான்கு பருவ இதழ்கள் வாங்கப்படுகின்றன. சில சமூக அமைப்புகள் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை வழங்கின. 'பாரதி புத்தகாலயம்' ரூ.10,000 மதிப்புள்ள 100 சிறுவர் நூல்களை அரசுப் பள்ளிகளுக்கு 40% கழிவில் வழங்குகிறது. ஓர் அன்பர் அந்தப் புத்தகங்களை வாங்கி அரியக்குடி நூலகத்துக்கு வழங்கினார்.
இப்போது நடைபெறும் கர்னாடக இசைக் கச்சேரிகள் பலவும் 'அரியக்குடி பாணி'யைப் பின்பற்றுபவை. கர்னாடக இசை ரசிகர்கள் அறிவார்கள். அரியக்குடி வேங்கடமுடையான் ஆலயத்துக்குத் 'தென் திருப்பதி' என்றொரு பெயருண்டு. சிவகங்கை மாவட்டத்தில் பலரும் அறிவார்கள். விரைவில் மாநிலத்தின் சிறந்த பள்ளி நூலகங்களில் ஒன்றாக அரியக்குடி விளங்கும். அப்போது தமிழ்நாடு முழுதும் இந்தச் சிற்றூரின் பெயரை அறியும்.