தமிழ்நாடு பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள் | மகளிர் மேம்பாடும் அரசின் திட்டங்களும்

Ennum Ezhuthum
0

 

தமிழ்நாடு பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள் | மகளிர் மேம்பாடும் அரசின் திட்டங்களும்

பொதுவான நிதிநிலை அறிக்கையுடன் தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துவருகிறது.

இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. கூடவே, ஆக்கபூர்வமான இன்னொரு அம்சம் குறித்த எதிர்பார்ப்பையும் அரசு ஏற்படுத்தியிருந்தது.

பாலின நிதிநிலை அறிக்கை அல்லது பெண்களுக்கான தனி நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்கிற கருத்தைக் கடந்த ஆண்டு மாநில சமூக நலத் துறை தனது கொள்கை அறிக்கையில் வெளியிட்டிருந்தது. ஆனால், அது இன்றுவரை செயல்வடிவம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

உண்மையில் அத்தகையதொரு முன்னெடுப்பு மிகவும் அவசியம். மக்கள்தொகையில் 50% பங்குவகிக்கும் பெண்களைத் துறை வாரியாக, வாழ்விட வாரியாக, சாதி வாரியாகப் பிரித்துக் கணக்கெடுப்பு நடத்தி, அவர்களின் நிலைக்கேற்ப நிதிநிலை அறிக்கை தயாரிப்பது அவசியம்.

பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும்விடச் சிறந்ததாக அது அமையும்.

திட்டங்களின் பலன்கள்: 2022இல் தமிழ்நாடு சமூகநலத் துறையால் பெண்களுக்கான கொள்கை அறிக்கை வரைவு வெளியிடப்பட்டது. எனினும், இன்றுவரை அது இறுதிசெய்யப்படவில்லை. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்வடிவம் பெறவிருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பெண்களுக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவி என்பது அவர்களுக்குப் பெரிய அளவில் தன்னம்பிக்கை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, மகளிர் மேம்பாட்டுக்கான அடிப்படைச் செயல்திட்டங்களில் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

சிறுசிறு தேவைகளுக்குக்கூடக் கணவரின் கையை எதிர்பார்க்கும் பெண்களுக்கு மனரீதியாக ஒரு விடுதலையை இத்திட்டம் தரும். மற்றபடி இத்தொகை குடும்பப் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுவிடும். எனவே, சமுதாயத்தில் அவர்களை ஒரு தனிப்பெரும் சக்தியாக வளர்க்கும் என எதிர்பார்க்க முடியாது.

அடுத்த முக்கியத் திட்டமாக, இதற்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்ட 'புதுமைப் பெண்' திட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இத்திட்டம் முற்போக்குப் பார்வையுள்ள அருமையான திட்டம் என்று கூறலாம். அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை படித்த மாணவியருக்கு உயர் கல்வியைத் தொடர மாதம் ரூ.1,000 வழங்க இத்திட்டம் வழிசெய்கிறது.

2022 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை 1.20 லட்சம் மாணவிகள் பலனடைந்துள்ளார்கள். இதில் பல உயரிய ஆக்கபூர்வமான நோக்கங்கள் செயல்வடிவம் பெறுகின்றன. பெண்களின் திருமண வயது நடைமுறையில் 21 ஆக உயர்த்தப்பட இது வழிவகுக்கிறது. பெற்றோர் பெண்களைப் படிக்கவைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். கல்வி தடைசெய்யப்படும் அபாயத்திலிருந்து பெண்கள் மீள்வார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவியரைச் சேர்க்கும் எண்ணிக்கை கூடும். இதனால் அரசுப் பள்ளிகள் வலுப்படும்.

ரொக்கப் பணம் அவசியம்: மகளிர் உரிமைத்தொகை போலல்லாமல், சமுதாயத்தில் பெண்கள் கல்வி உயர்வுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது. தாலிக்குத் தங்கம் என்பதிலிருந்து உயர் கல்விக்கு உதவி என்று மாற்றம் பெற்றுள்ள இத்திட்டத்தை நிச்சயம் வரவேற்கலாம்.

அதேவேளை, இத்தொகைகள் ரொக்கப் பணமாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். ஏனெனில், இத்தகைய உதவிகளைப் பெறும் மக்களுக்கு வங்கிக் கணக்கு இருக்காது. இத்தொகையைப் பெறும் பொருட்டு அவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கினால், குறைந்தபட்ச இருப்பைக் காப்பாற்றத் தவறும் நேரங்களில், வங்கிகள் அபராதம் என்னும் பெயரில் இதில் பாதித் தொகையைச் சுருட்டிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

மாற்றுப் பாலினத்தவருக்கான நீதியை வழங்குவதிலும் இந்த அரசு உரிய அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறது. உண்மையில், இவர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியது. ஆனால், சமுதாயத்தில் இவர்கள் மீதான மதிப்பு மாற்றம் நடைபெறுவது என்பது ஒட்டுமொத்த பாலினச் சமத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் தத்துவார்த்தரீதியாக மிக முக்கியப் பங்குவகிக்கிறது. மாற்றுப்பாலினத்தவர் மிகக் கண்ணியமான, பிறரைச் சாராத வாழ்க்கையை வாழஅனுமதிக்கப்பட வேண்டும்.

அத்தகைய நிலையைஅடைய அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, 40 வயதான, ஆதரவற்ற மாற்றுப் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1,000உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், சுயதொழில்உதவிகளும் வழங்கப்பட்டுவருவது அவர்கள் நிலையை வெகுவாக மாற்றியிருக்கிறது. அதேபோல், அரசுப் பதவிகளிலும் காவல் துறையிலும் மாற்றுப்பாலினத்தவர் பணிவாய்ப்பு பெறுகின்றனர். இது விரிவடைய வேண்டும்.

பெண்கள் விடுதிகள்: கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் பணி நிமித்தமாகவும் கல்வியின் பொருட்டும் வருகின்ற பெண்களுக்கு மிகச் சவாலாக இருப்பது தங்குமிடம். அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் எது பாதுகாப்பான இடம் என்பதைத் தீர்மானிப்பதே முதல் சவால். மிகக் குறைவான, அடிப்படை வசதிகளே முழுமைபெறாத பெண்கள் தங்கும் விடுதிகளே தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன.

தனித் தொடராக எழுத வேண்டிய அளவுக்கு இன்னல்கள் நிரம்பிய கதை இது. இந்த நிலையில், முதலமைச்சருடைய முதல் கவனத்தில் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் அமைக்கும் பணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

பெண்களுக்கான சமுதாயக் கூடங்கள்: வேலை பார்க்கும் பெண்கள், குடும்பச் சிக்கல்களிலிருந்து தனித்து வாழ நேர்கின்ற பெண்கள் தனியே வசித்திடும் பொருட்டு, பெண்களுக்கான சமுதாயக் கூடங்களை அமைத்திட அரசு முன்வர வேண்டும். பெண் விடுதலைக்கான விழிப்புணர்வுப் பயிற்சியோடு பெண்களிடம் பல்வேறு திறன் வளர்ச்சிக்கான மையமாக, நவீன உலகமாக இக்கூடங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பெரியாரின் அறிவுத் தலைமையேற்றிருக்கும் திராவிட இயக்க ஆட்சி இதனைச் செய்து உலகுக்கே வழிகாட்ட வேண்டும்.

குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கைகள்: குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கைகளில் சமூக நலத் துறை தனது அதிகாரிகளை முழுமையாக ஈடுபடுத்திவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமியருக்கான இழப்பீட்டுத் தொகை 2012இலிருந்து வழங்கப்படாமலிருந்தது. தற்போது அந்தத் தொகை பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அப்பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சமூக நீதியாகும்.

இவற்றைத் தாண்டி, சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை வரைவின் மீது நாம் வைத்த கருத்துகள் அப்படியே நிற்கின்றன; அவற்றை மீண்டும் நினைவுபடுத்துவோம். 1. தமிழ்நாடு பெண்கள் கொள்கைளைச் செயல்படுத்த சமூக நலத் துறைக்குப் போதுமான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்; 2. தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் நிதி உதவிகள் அதிகரிக்கப்படுவதுடன் கட்டமைப்பும் விரிவு செய்யப்பட வேண்டும்; 3. பெண்ணை அகவாழ்க்கை நுகத்தடியிலிருந்து விடுவிக்க, சமுதாய உணவுக்கூடங்கள் பரந்துபட்ட அளவில் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் அமைக்கப்பட வேண்டும்; 4. முதியோர், குழந்தைகள் பராமரிப்பு அரசின் பொறுப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்; 5. பணியிடங்களில் கண்டிப்பாக உணவக வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

மேற்கூறிய கடமைகளை அரசு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், பெண்ணின் பொதுவெளிக்கான கதவுகள் திறக்கப்படும். அதுவே பெண்கள் சமுதாயத்தையும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் மேம்படுத்தும்

Post a Comment

0Comments

Post a Comment (0)