பனிக்கட்டியாக மாறிய ஏரி.. குளிரால் உறைந்த மொத்த தண்ணீர்..!

Ennum Ezhuthum
0

 

பனிக்கட்டியாக மாறிய ஏரி.. குளிரால் உறைந்த மொத்த தண்ணீர்..!

ம் ஊர் ஏரிகள் எல்லாம் வறண்டு அதில் வீடு கட்டிதான் பார்த்திருப்போம். இமயமலை அடிவாரங்களில் உள்ள ஏரிகள் மட்டும் தான் ஆண்டு முழுவதும் ஓரளவு தண்ணீருடன் இருப்பதோடு பனிக்காலத்தில் உறைந்து இருக்கும்.
லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி(Pangong lake) எல்லாம் தற்போது உறைந்து இருக்கிறது. ஏரி முழுவதும் உறைவது என்பது சாதாரண நிகழ்வு அல்ல.

பொதுவாக ஏரியின் மேற்பரப்பில் உள்ள நீர் மட்டும் சில இஞ்ச்களுக்கு உறையும் அடியில் ஏரியின் நீர் நீர்ம வடிவில் தான் இருக்கும். ஆனால் தற்போது கலிஃபோர்னியாவில் உள்ள தஹோ ஏரியின்(Lake Tahoe) ஒரு பகுதி முழுவதும் உறைந்து கிடக்கிறது. இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக உறைந்த நிலைக்கு சென்றுள்ளது.

அமெரிக்காவில் அமைந்துள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் பனி காலம் இன்னும் நிறைவடையாத காரணத்தால், வெப்பநிலை ஒற்றை இலக்கத்தில் தொடர்ந்து நிலவி வருகிறது. அதோடு புயலும், பனிப்பொழிவும் அதிகரித்து வருகிறது. இதனால் காலிஃபோனியாவின் அதிகப்படியான பகுதிகள் பல அங்குல பனியால் மூடப்பட்டுள்ளன.

மாகாணத்தின் தெற்கு லேக் தஹோவிலிருந்து வடக்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ள தஹோ ஏரியின் சின்னமான எமரால்டு விரிகுடா சமீபத்தில் முற்றிலும் பனிக்கட்டியாக மாறியது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து போகாததால், இது ஒரு அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த பகுதி, 1993 ஆம் ஆண்டு பனியால் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

எமரால்டு விரிகுடாவின் பகுதியளவு உறைதல் சாதாரணமாக ஆண்டுதோறும் நிகழும். ஆனால், இந்த முறை அது முற்றிலும் உறைந்துள்ளது. தேசிய வானிலை சேவையின் பதிவுகளின்படி , கடந்த வாரம் எமரால்டு விரிகுடா பகுதியில் உறைபனிக்கும் குறைவான வெப்பநிலை மற்றும் குளிர்ந்த காற்று வீசியது. அதுவே ஏரியின் பரப்பு முழுமையாக உறைந்து இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

எமரால்டு விரிகுடாவின் பனிக்கட்டி நிலை, தற்போது கலிபோர்னியாவை தாக்கி வரும் மிகப்பெரிய பனிப்புயலின் சிறிய தாக்கம் மட்டுமே. அதீத குளிர் நிலை மேலும் கலிஃபோர்னியா பகுதியை பாதிக்க இருக்கிறது என்று தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. அதோடு கிரேட்டர் லேக் தஹோ பகுதியில் கடுமையான வானிலை காரணமாக புயல் எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

அதையும் தாண்டி 30 ஆண்டுகளுக்கு பின் உறைந்துள்ள ஏரியை பார்ப்பதற்காக தஹோ ஏரியின் எமரால்டு விரிகுடா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஆனால் இந்த ஏரியை சுற்றி உள்ள மக்கள் வானிலை பாதிப்புகள் காரணமாக வாழ்வாதார பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)