எலும்புதான் நம் உடலின் ஆதாரம். காயம்பட்டாலோ, விபத்துகளில் சிக்கினாலோ `ஃப்ராக்சர் எதுவும் இருக்கக் கூடாது' என்பதுதான் எல்லோரின் வேண்டுதலாக இருக்கும்.
காரணம், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படலாம். உச்சந்தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்துப் பகுதிகளையும் உறுதியாக வைத்திருக்கக்கூடியவை எலும்புகள் என்பதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சில நேரங்களில்,
மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ
ஆர்த்ரைட்டிஸ், எலும்புப்புரை போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள்
பாதிப்படையலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கும் முக்கியப்
பங்குண்டு. என்ன மாதிரியான உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது
என்று பார்ப்போம்.
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும்,
குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும்
கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ்,
ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம்,
வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை
எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கால்சியம்: பால்,
தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளில் கால்சியம் நிறைந்திருக்கும்.
`லாக்டோஸ் இன்டாலரன்ஸ்' (Lactose Intolerance) எனப்படும் பால் உணவுகள்
சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சைநிறக்
காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம்
போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.
வைட்டமின் டி:
சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9
மணிவரையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி
அதிகம் இருக்கும். எனவே, அந்த நேரங்களில் உடலில் சூரிய ஒளி படுமாறு
பார்த்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன் எண்ணெய்,
காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும்
முறையாகவும் உட்கிரகிக்க வைட்டமின் டி அவசியம். எலும்பு ஆரோக்கியம்
மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.
மக்னீசியம்: கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு உட்கொள்வதைவிட, `கம்பைண்டு' உணவுகளாகச் (Combined Foods) சாப்பிடுவது நல்லது.
கம்பைண்டு உணவுப் பட்டியலுக்கு ஓர் உதாரணம்:
எள் + அடை - உடன் ஒரு பழம் (ஆரஞ்சு)
குறிப்பு: எள்ளைப் பொடியாக்கி அடைமீது தூவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. கால்சியம் அதிகம் கிடைக்கும்.
சிறுதானியம் + கீரை
குறிப்பு: இதை, மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.
அவகேடா பழம் (ஒன்று) உலர் பழங்கள் + மில்க்ஷேக்
குறிப்பு: மாலை வேளையில் ஸ்நாக்ஸாக இவற்றைச் சாப்பிடலாம். அவகேடோவில், தாதுச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.
புரொக்கோலி + பச்சைநிறக் காய்கறிகள் சேர்த்த சூப்
குறிப்பு:
மாலைநேர ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம். புரொக்கோலி, கால்சியம் மற்றும்
வைட்டமின் சி நிறைந்தது. பச்சைநிறக் காய்கறிகள் அனைத்திலும் வைட்டமின் ஏ,
கே, ஃபோலேட் சத்துகள் நிறைந்திருக்கும்.
எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி வறுத்த மீன்
குறிப்பு: மதிய உணவுடன் இதைச் சாப்பிடலாம். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும். வைட்டமின் டி மற்றும் பி2, இரும்புச்சத்து, பொட்டாசியம் எனப் பல தாதுக்களும் இதில் ஒருசேர நிறைந்திருக்கின்றன.
தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊறவைத்த சியா விதைகள் + பால் / பாதாம் பால் + ஏதேனும் ஒரு பழம் + நட்ஸ்குறிப்பு: புட்டிங் (Pudding) வகை ரெசிபிபோலச் செய்து இதை உட்கொள்ளலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
ஆம்லெட் + வெங்காயம் + குடமிளகாய், கீரை, காளான், புரொக்கோலி
குறிப்பு: முட்டையிலிருந்து புரதச்சத்தும், கீரை, காளான் போன்றவற்றிலிருந்து தாதுச்சத்துகளும் கிடைக்கும்.
கீரை + காய்கறிகள் + முட்டைப பொடிமாஸ்
குறிப்பு: முட்டையில் கலோரி குறைவாக இருக்கும். பொடிமாஸாகச் செய்து சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.
முட்டைப் பொடிமாஸ் + டோஃபு (Tofu) / பனீர் புர்ஜி
குறிப்பு: புரதம், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இன்னும் சில தாதுச்சத்துகள் கிடைக்கும்.