சிவப்பு எறும்பை சட்னி செய்து சுவைத்து சாப்பிடும் மக்கள்? எங்கு தெரியுமா.!

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner

 

சிவப்பு எறும்பை சட்னி செய்து சுவைத்து சாப்பிடும் மக்கள்? எங்கு தெரியுமா.!
செய்தியின் தலைப்பை பார்த்ததுமே நிச்சயமாக இது சீனா அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வு என்று நீங்கள் எண்ணியிருக்க கூடும்.
ஏனென்றால், அவர்களின் உணவுப் பழக்கம் எத்தகையது என்பதை யூடியூப் சென்று பார்த்தால் தெரியும். சாதாரண வண்டு, தேள் முதல் பாம்பு வரையில் பலவற்றையும் சாப்பிடுவார்கள்.

ஆனால், இந்த சிவப்பு எறும்பை சட்னி வைத்து சாப்பிடும் பழக்கம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. இதுவும் கூட உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இருப்பினும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ள மக்கள் ஈசலை விளக்கு வைத்து சேகரித்து, அதைக் கொண்டு புட்டு செய்து சாப்பிடுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

குறிப்பாக இதுபோன்ற விநோதமான உணவுப் பழக்கங்கள் எல்லாமே பாரம்பரியம் என்ற பெயரில் நடக்கும். அவை நம் உடல் நலனுக்கு மிக நல்லது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். அந்த வகையில் கர்நாடகாவில் தான் சிவப்பு எறும்பை சட்னி வைத்து சாப்பிடுகின்றனர். வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தவிர்த்து, யூடியூபில் மாங்காய் சட்னி, கீரை சட்னி, அன்னாசி சட்னி என்று வெவ்வேறு சமையல்களை கேள்விப்பட்டிருக்கும் நமக்கு இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான்.



சித்திஸ் இன மக்கள்:

உத்தார கன்னடா பகுதியில் வாழுகின்ற சித்திஸ் இன மக்கள் எறும்பை சட்னி செய்து சாப்பிடுகின்றனர். கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்து வந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். 17-ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் நடத்திய அடிமை வர்த்தகத்தின்போது அவர்களை அழைத்து வந்ததாகவும், பின்னர் போர்ச்சுகீசியர்கள், பிரிட்டிஷார்களும் அந்த மக்களை அடிமையாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் வரலாறு கூறுகிறது.



வன வாழ்க்கை:


கர்நாடகத்தில் பெரும்பாலும் வனப் பகுதிகளிலும், அதையொட்டிய இடங்களில் சித்திஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் மிகுதியாக வளருகின்ற சிவப்பு எறும்புகள் இவர்களின் உணவு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் காடுகளில் கிடைக்கின்ற கிழங்கு, பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் இவர்களின் உணவாக இருக்கிறது.



எப்படி சட்னி தயாராகிறது:


மரங்களில் பெரிய அளவில் கூடு கட்டி வாழும் எறும்புகள் மீது, அவற்றை கொல்வதற்காக உப்பு தூவப்படுகிறது. பின்னர் எறும்பு மற்றும் அதன் முட்டையோடு சேகரிக்கின்றனர். இதைத் தொடர்ந்து அதை ஒரு கடாயில் கொட்டி இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு, சீரகம், மஞ்சள் போன்றவற்றை சேர்த்து வறுக்கின்றனர். வனப் பகுதிக்குள் மிக்ஸிக்கு வேலை கிடையாது. வறுத்த எறும்பு மசாலாவை கற்கள் மீது வைத்து அரைக்கின்றனர். இப்போது எறும்பு சட்னி தயாராகிவிட்டது. அதன் சுவை சித்திஸ் மக்களுக்கு மட்டுமே தெரியும்.

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 2, April 2025