இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு 2020 முதல் 2022ஆம் ஆண்டுவரை 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது.
ஆனால், இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், எல்லா மாநிலங்களிலும் பொது விநியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified rice) வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 5.51 லட்சம் 'அந்தியோதயா அன்ன யோஜனா', முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கெனவே வழங்கப்பட்டுவருகிறது. ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நீட்டிக்கத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 18.64 லட்சம் 'அந்தியோதயா அன்ன யோஜனா' பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டுதல்: 'நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே' செறிவூட்டல் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) வரையறை செய்துள்ளது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும்.
வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.
அறிவியல் உண்மைகள்: ரத்தசோகை பிரச்சினைக்கான தீர்வு என்கிற அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைச் சென்றடையும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கட்டாயமாக வழங்குவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தானியங்களில் இரும்புச் சத்தைச் செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்கும்.
அது மட்டுமல்லாமல், ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரியத் தொற்று எளிதில் ஏற்படவும் இரும்புச்சத்து வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் சாத்தியமுள்ளது.
உலக அளவில் தலசீமியா நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல் ரத்த சோகையின் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றான, அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உணவால் ஏற்கெனவே உள்ள பாதிப்புகள் இவர்களுக்கு அதிகரிக்கும்.
இத்தகைய பிரச்சினைகளை ஒப்புக்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு வகை சார்ந்த பைகளில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்துவிட்டால், தீய விளைவுகளைத் தவிர்த்து விடலாம் என்கின்றனர். போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாதவர்கள் நிறைந்த நாட்டில், இந்த எச்சரிக்கை வாசகங்களால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மை.
பொது விநியோகத் திட்டம் மூலம் இந்த அரிசியை ஏற்கெனவே பெற்றுள்ள மக்கள், இந்த அரிசியை வேகவைக்கும் முன் தண்ணீர் ஊற்றிக் களைந்தால், அரிசி தண்ணீரில் மிதப்பதாகவும், வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகை, பிளாஸ்டிக் அரிசி என்று குற்றஞ்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியும் அந்த வகையில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்.
யாருக்கு லாபம்? செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படவில்லை. ரத்தசோகை, பசி, ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான தீர்வுகளை, தானியங்களைச் செறிவூட்டுவதன் மூலமாக மட்டும் சரிசெய்துவிட முடியாது.
பல தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், மீன், அசைவ உணவு போன்ற சத்தான பல்வேறு உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் பூர்த்திசெய்ய முடியும். பன்முகத்தன்மை மிகுந்த சத்தான உணவு வகைகளைக் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருத்துவ, ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே பல்வேறு நோய்களால் வாடும் ஏழை எளியோர், தரமான தானிய உணவு-காய்கறி, பழங்கள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சிக்கல்களால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகிவருகின்றனர். உடல் சிறப்பாகக் கிரகித்துக்கொள்ளக்கூடிய காய்கறி, பழங்கள், தானியங்களைக் குறைந்த விலையிலும், எளிதாகக் கிடைக்கும் வகையிலும் சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதே அரசு செய்ய வேண்டியது. அதற்குப் பதிலாகச் செயற்கையாக ஊட்டமேற்றப்பட்ட அரிசியைத் தருவதால் என்ன உத்தரவாதமான பலன் கிடைக்கப்போகிறது?
ஆக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு திட்டத்தை அவசர அவசரமாக நாடு முழுவதும் அமல்படுத்துவது தனியார், பெருநிறுவனங்களுக்கு லாபம் சம்பாதிக்க உருவாக்கப்பட்ட திட்டமோ எனும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஏனெனில், செறிவூட்டப்பட்ட அரிசியையும் அதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துகளையும் பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்திசெய்து வருகின்றன.
முதலில் பொது விநியோகத் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, படிப்படியாக வெளி அரிசி விநியோகக் கட்டமைப்பையும் பெரிய அளவில் மாற்றும். பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் பல கோடி டாலர் புழங்கும் தொழில் இது. இதன்மூலம் நமது உணவுச் சங்கிலியானது அரசு-பொது நிறுவனங்களின் கைகளிலிருந்து வெளியேறி பெருநிறுவனக் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
விழிப்புணர்வுப் பிரச்சாரம்: செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் குறித்து மக்களிடையே அரசாங்கம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. எந்த அறிவியல்பூர்வத் தொடர் ஆய்வுகளும் இல்லாமல், பொது விநியோக முறையில், செறிவூட்டப்பட்ட அரிசியைக் கண்மூடித்தனமாக வழங்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மூன்று வருட கால மாதிரி ஆய்வுகளில் கிடைத்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
அப்போதுதான் இந்தத் திட்டத்தின் சாதக, பாதக அம்சங்களைத் துறைசார் நிபுணர்களும் மக்களும் முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதேபோல் இதுதொடர்பாக, மக்கள் மத்தியில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகு மருத்துவ, ஊட்டச்சத்து நிபுணர்களின் முறையான ஆய்வுத் தரவுகள் அடிப்படையில் இந்தத் திட்டத்தை மாற்றியமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும்.