உலகத்துக்கே மருந்தகமாகச் செயல்படும் நாடு எனப் போற்றத்தக்க வகையில், கடந்த 10 ஆண்டுகளில் மருந்து உற்பத்தியில் சிறப்பான வளர்ச்சியை இந்தியா கண்டிருக்கிறது.
2013-2014 ஆம் ஆண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த மருந்துகளின் மதிப்பு ரூ.90,415 கோடி; 2021-2022 இல் அது இரண்டு மடங்காகி ரூ.1,83,422 கோடியைத் தொட்டது.
உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 60% இந்தியாவில் தயாரானவை. மருந்து ஏற்றுமதி மொத்த அளவில் மூன்றாவது இடத்திலும், ஏற்றுமதி மதிப்பில் 14 ஆவது இடத்திலும் இந்தியா இருக்கிறது.
வல்லரசுகள் முதல் வளரும் நாடுகள்வரை உலகின் பல பகுதிகளுக்கு இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெருமிதத்துக்குரிய இந்தச் சூழலில், இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் சமீபகாலமாக வெளியாகின்றன.
உலுக்கிய உயிரிழப்புகள்: டெல்லி அருகே உள்ள மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகளை அருந்தியதால், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நொய்டாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துகளைப் பருகியதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்தது செய்தியானது. இரண்டு நிகழ்வுகளிலும், இருமல் மருந்துகளில் விஷத்தன்மை கொண்ட டைஎத்திலின் கிளைகால் (Diethylene glycol) இருந்ததாக அந்நாடுகளின் சுகாதாரத் துறைகள் தெரிவித்தன.
காம்பியாவில் கொடுக்கப்பட்ட இருமல் மருந்துகளில் இந்தப் பொருள் இருந்ததை உலக சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியது. இதன் தாக்கத்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
எனினும், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO), காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அதே இருமல் மருந்துகளின் மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றில் விஷத்தன்மை கொண்ட பொருள் இல்லை என்றும், தர விதிமுறைகளின்படி மருந்து இருந்ததாகவும் உலக சுகாதார நிறுவனத்திடம் இந்தியா தெரிவித்தது.
ஆனால், காம்பியா அரசு நியமித்த நாடாளுமன்ற ஆய்வுக் குழு இதை ஏற்க மறுத்ததுடன், இந்திய மருந்து நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடும் பக்கவிளைவுகள்: சமீபத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை உபயோகித்த 55 பேருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் ஒருவர் மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து ஆய்வுசெய்த அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (FDA), சொட்டு மருந்தில் கலக்கப்பட்ட - ஆன்ட்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத - பாக்டீரியாதான் இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அந்த மருந்து நிறுவனத்தில் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, அதே பிரிவு மருந்தின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், இந்த நிறுவனத்தின் கண் மருந்துகளை அந்நாட்டில் தடைசெய்துள்ளது.
இந்திய நடைமுறைகள்: இந்திய மருந்துகள் உற்பத்தியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமும் உலக சுகாதார நிறுவனத்தின் 'நல்ல உற்பத்தி நடைமுறைகள்' (World Health Organisation - Good Manufacturing Practices) எனும் வழிகாட்டுதலைப் பின்பற்றி உற்பத்தி செய்து வருகின்றன.
இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியும் கண்காணிக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன மருத்துவ மருந்துகள் மற்றும் மாற்று மருத்துவ முறைகளின் மருந்துகள் அனைத்தும் இந்தத் தரக்கட்டுப்பாட்டின் கீழ்தான் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்பது சட்டம்.
இதன்படி மருந்து உற்பத்தியின் ஒவ்வொரு படிநிலையிலும் தரம் உறுதிப்படுத்தப்படும், மருந்து உற்பத்தி செய்யப்படும் இடம் முதல் அங்கு பணிபுரியும் அலுவலர்களின் திறன்வரை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மருந்து உற்பத்தியின் படிநிலைகளை எழுத்துபூர்வமாக உடனுக்குடன் ஆவணப்படுத்த வேண்டும். நோயாளிகள், மருத்துவர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களுக்கு ஏற்றவாறு மருந்து உற்பத்தியின் தரத்தை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெரும்பாலான நாடுகள் மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டு, அதில் தேர்ச்சி அடையும் மருந்துகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.
மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடு தன்னிடம் உள்ள ஆய்வகங்களில் பரிசோதனை செய்த பின்பே மக்களின் பயன்பாட்டுக்கு அவற்றை அனுப்பும். இதில் தரக்குறைபாடு இருப்பதாகத் தெரியவந்தால், உற்பத்தி செய்த நிறுவனத்துக்கே மருந்து மீண்டும் அனுப்பப்பட்டுவிடும். இதுவே மருந்து உற்பத்தி மற்றும் இறக்குமதி நடைமுறையில் உள்ள வழக்கங்கள்.
போலி மருந்துகள்: அதேவேளையில், இத்தகைய நடைமுறைகளையும் சட்டங்களையும் மீறுகின்ற அல்லது முறையாகக் கடைப்பிடிக்காத கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முக்கிய மருந்து நிறுவனங்களின் மருந்துகளுக்கு நிகராக அதே பெயர்களில் அல்லது சற்று மாறுபட்ட - ஆனால் பார்ப்பதற்கு அதே பெயர்போல் தோன்றும் - போலி மருந்துகள் சந்தையில் நிறைய இருக்கின்றன.
இதில் நவீன மருத்துவ மருந்துகளும் மாற்று மருத்துவ மருந்துகளும் அடக்கம். பெரும்பாலானோருக்கு இது ஆபத்து என்று தெரியாது. மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்துக்கடைகளில் பலரும் மருந்துகளை வாங்குகிறார்கள். சந்தையில் போலி மருந்துகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
தடுக்கும் வழிகள்: இந்தியாவில், மருந்துகளின் தரத்தையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த, மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை கண்காணிக்கும் திட்டம் (Pharmaco Vigilance Programme of India) செயல்பட்டுவருகிறது. இதன்படி ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தரவுகள், காஸியாபாதில் இயங்கும் இத்திட்டத்தின் தலைமையகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளைச் சந்தையிலிருந்து திரும்பப்பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒரு மருந்தின் மூலம் ஏற்படும் பக்கவிளைவை, ஒரு சாமானியர் எளிதாகப் பதிவுசெய்ய இந்தியா முழுவதற்குமான இலவச எண் 1800 180 3024 இயங்கிவருகிறது.
நாம் செய்ய வேண்டியவை: மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் மருந்துகளை வாங்க வேண்டும். மருத்துவர்கள் குறைந்த விலையில் அதே நேரம் தரத்தில் குறையில்லாத மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும். தரமான மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் மட்டுமே மருந்துகளைத் தருவித்து மக்களுக்கு வழங்குவதை மருந்து விற்பனையகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும். மருந்துகள் பத்திரமாக அனுப்பப்பட்டு, உரிய வெப்பநிலையில் பக்குவமாகப் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
உயிர்களைக் காப்பதற்குத்தான் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே அதில் முறைகேடுகளுக்கோ, விதிமீறல்களுக்கோ சிறிதளவு இடம்கூட இருக்கவே கூடாது!
- ஃபரூக் அப்துல்லா |மருத்துவர்; தொடர்புக்கு: drfarookab@gmail.com