மரணம் வந்தால் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் நடுங்குவார்கள், ஆனால் தெலங்கானாவைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மருத்துவர், தன் மரணத்தை முன்பே அறிந்து அதனால் தன் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரும் வேதனைப்படக்கூடாது என்பதற்காக, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு இறந்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் இந்தச் செய்தி, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மருத்துவர் ஹர்ஷவர்தன்போராட வந்த மாற்றுத்திறனாளி கணவர், வீடியோ காலில் கண்கலங்கிய மனைவி; நெகிழ்ச்சியான சம்பவம்!
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் யெபுரி ஹர்ஷவர்தன். இவர் ஆஸ்திரேலியாவில் பொது மருத்துவராகப் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கும், சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து அதே மாதம் ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, தன் மனைவியும் வெளிநாடு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சிந்துவும் ஆஸ்திரேலியா செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளன. ஆனால் அப்போது கொரோனா பரவல் இருந்ததால் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன; இவரால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியவில்லை.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ரத்த வாந்தி எடுத்த ஹர்ஷவர்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் நடந்த சோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தன் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் இதை மறுத்த அவருடைய பெற்றோர், இந்தியா வந்துவிட்டால் இங்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், இங்கேயே சிகிச்சை செய்துகொள்ளலாம் என வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தான் ஏற்கெனவே புற்றுநோயின் நான்காம் நிலைக்குச் சென்றதை அறிந்த ஹர்ஷவர்தன், ஆஸ்திரேலியாவில் சிகிச்சை சிறப்பாக இருக்கும், விரைவில் குணமடைந்துவிடலாம், அதனால் அங்கேயே தான் இருப்பதாகக் கூறி சமாளித்துள்ளார்.
மருத்துவர் ஹர்ஷவர்தன்
புற்றுநோயால் தான் அனுபவிக்கும் வேதனைகளை தன் பெற்றோர், மனைவி ஆகியோர் பார்க்கக்கூடாது என்பதற்காக, இவர்களையும் ஆஸ்திரேலியாவுக்கு வர வேண்டாம் எனவும் தடுத்துள்ளார். இரண்டு வருட சிகிச்சைக்குப் பின்னர் கடந்த எட்டு மாதங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மார்ச் 27-ம் தேதி அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். மரணம் தன் கண்முன்னே இருப்பதையும் தனக்கான நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதையும் உணர்ந்த அவர், நான் நலமாக விடைபெறுகிறேன் என பெற்றோரை நம்பவைத்து, தான் அனுபவித்த நோயின் இறுதி முடிவுக்கு தன் குடும்பத்தினரை மனரீதியாகத் தயார் செய்துள்ளார்.
``அவர் மிகத் துணிச்சலான மனிதர், இது போன்ற இக்கட்டான காலங்களில் அவருடன் இருக்க விரும்பிய எங்களை, அவர் துன்பப்படுவதைப் பார்க்க வேண்டாம் என நினைத்து நாங்கள் ஆஸ்திரேலியா வருவதையும் தடுத்துவிட்டார். அவரது மரணத்துக்கு பிறகு இளம் வயதிலேயே தன் மனைவி விதவையாவதை விரும்பாமல், குடும்ப உறுப்பினர்களையும் மனைவியையும் சம்மதிக்கவைத்து இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
மேலும் சிந்து பொருளாதார ரீதியாக நலமாக இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார் ஹர்ஷவர்தன். இதுமட்டுமல்லாமல், தான் இறந்தபிறகு சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப உள்ளூர் நண்பர்களுக்கு அதிகாரம் வழங்கினார். தனக்காக ஒரு சவப்பெட்டியையும் வாங்கி அனைத்தையும் தயார் செய்துவிட்டார்" என அவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
மரணம் பெண் குழந்தை பிறந்தால் பிரசவ கட்டணம் இலவசம்! - புனே டாக்டரின் அக்கறை
மார்ச் 24-ம் தேதி காலையில் தன் நண்பர்களுடன் காலை உணவு அருந்திய விரும்பிய ஹர்ஷவர்தன், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தான் உயிரிழக்கவுள்ளதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே அந்த துர்திர்ஷ்டமான நாளில் ஹர்ஷவர்தனின் உயிர் பிரிந்துள்ளது.
பின்னர் அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு கடந்த 5-ம் தேதி, சொந்த ஊரில் இறுதிச் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தனின் வாழ்க்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் விவரிக்கப்பட்ட அவரது இறுதி நேரம் ஆகியவை சமூகவலைதளங்களில் பரவி, படிப்பவர்கள் மனங்களை கனக்கவைத்து வருகிறது.