கால் மேல் கால் போட்டு அமர்வதால் பாதிப்பு ஏற்படுமா...? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Ennum Ezhuthum
0

 

கால் மேல் கால் போட்டு அமர்வதால் பாதிப்பு ஏற்படுமா...? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பொதுவாகக் கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் அழகின், ஆளுமையின், கம்பீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

பல திரைப்படங்களிலும் இவ்வாறு அமர்வதை அழகுறக் காட்சிப்படுத்தியிருப்பதை நாம் பார்த்திருப்போம்.



பொதுவாக 62 சதவிகிதம் பேர் இடது கால் மீது வலது காலை போட்டு அமரும் பழக்கம் உடையவராகவும், 26 % பேர் வலது கால் மீது இடது காலை போட்டு அமரும் பழக்கம் உடையவராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி பலருக்கும் இவ்வாறு அமரும் பழக்கம் உள்ள நிலையில், தொடர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுவது கவனம் கொள்ள வைத்துள்ளது.



அவ்வப்போது இவ்வாறு அமர்வது பலருக்கும் சௌகரியமாகத் தோன்றினாலும் அமர்ந்த நிலையில் வேலை செய்யும் சூழல் உடையவர்கள் தொடர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்வதனால் மூட்டுப் பகுதியின் பின்புறமுள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.



இதனால் ஆங்காங்கே இரத்தம் உறைந்துபோவதற்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இவ்வாறு அமர்வதனால் இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு முதுகு வலி உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. கால் மேல் கால் போட்டு அமரும்போது நாம் நேராக அமராமல் உடலை வளைத்து சீரற்ற அமைப்பில் அமர்ந்திருப்பதால், முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு உடலமைப்பே மாறிவிடும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.



இதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்றவையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆண்கள் இவ்வாறு அமர்வதனால் விதைப்பைகளின் வெப்பம் அதிகரித்து, அதனால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, அவ்வப்போது இவ்வாறு அமர்வதனால் பாதிப்பு இல்லை என்று கூறும் மருத்துவர்கள், தொடர்ந்து இவ்வாறு அமர்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)