TN Breakfast Scheme: வரலாற்றை முற்போக்கான திசைக்கு மாற்றும் காலை உணவுத் திட்டம்!

Ennum Ezhuthum
0
TN Breakfast Scheme: வரலாற்றை முற்போக்கான திசைக்கு மாற்றும் காலை உணவுத் திட்டம்!

 

1,545 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தொடங்கி வைக்கவிருக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் 15.75 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

காலை சிற்றுண்டி திட்டமும், கற்றல் திறனும்:

கல்வித் திறனை மேம்படுத்துவது தொடர்பான பார்வைகள் கருத்தியல் ரீதியாக மாறுபடுகின்றன. பள்ளிக்கல்வியில் அரசின் தலையீட்டைக் குறைத்துக் கொண்டு நடைமுறைகளை எளிதாக்குவது, பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்குவது, ஆசிரியர்-மாணவர் எண்ணிக்கை விகிதத்தை அதிகரிப்பது, தரமான கல்வி பாடத் திட்டங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட திட்டங்களை ஒருசாரார் முன்னெடுக்கின்றனர்.

உதாரணமாக, தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கும் 2ம் வகுப்பு புத்தகத்தை வாசிக்கும் திறனில்லை என்று ASER ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதிய உணவுத் திட்டம், இலவசதி திட்டங்கள், இடஒதுக்கீடு மாணவர்களின் கற்றல் திறன்களை அதிகரிக்காது. இதற்கு, நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக பள்ளி நவீனமாயமாக்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மறுபுறம், மாணவர்களின் கல்வியோடு சேர்ந்த வாழ்க்கை சூழலை அடிப்படையாக கொண்ட திட்டங்களை கல்வியாளர்கள் முன்னெடுக்கின்றனர். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், இடஒதுக்கீடு, மிதிவண்டி, மடிக்கணனி போன்ற இலவசத் திட்டங்கள் இதில் அடங்கும்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ் ) 5-ன் 2019-21 ஆண்டின் முடிவுகளின் படி, தமிழகத்தில் 25 சதவீத குழந்தைகள் இயல்பான எடையை விட குறைவாக உள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், வளர்ச்சி குறைபாடுள்ளவர்களின் விகிதம் 25 சதவீதமாகவும் ,நோய்ச் சக்தி குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 14.6 ஆகவும் உள்ளது.

அதேபோன்று, இரத்த சோகையின் பாதிப்பு ஆண்களில் 25.0 சதவீதம் (15-49 வயது) மற்றும் பெண்களில் 57.0 சதவீதம் (15-49 வயது), வளரிளம் ஆண்களில் 31.1 சதவீதம் (15-19 வயது), வளரிளம் இளம்பெண்களில் 59.1 சதவீதம், கர்ப்பிணிப் பெண்களில் (15-49 வயது) 52.2 சதவீதம் மற்றும் குழந்தைகளில் (6-59 மாதங்கள்) 67.1 சதவீதமாக உள்ளது.

ரத்த சோகை - ஊட்டச்சத்து குறைபாடு

எனவே, சராசரியாக அரசுப் பள்ளிகளில் நுழையும் போது நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சி குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக உள்ளார். சுவர் இருந்தால் சித்தரம் என்பதற்கு இணங்க, மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு காலைச் சிற்றூண்டி திட்டம் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக, காலை சிற்றுண்டி மூளையின் அறிவார்ந்த செயல்களை அதிகப்படுத்தும் என்றும் தரவுகள் கூறுகின்றன.


உடல் வளர்ச்சிக்கும், அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக Indian Human Development Survey தெரிவிக்கிறது.



பெண்களின் உண்மையான விடுதலை:

தேசிய மாதிரி கணக்கெடுப்பு (என்.எஸ்.எஸ்) 73-வது சுற்று அறிக்கையின்படி, விவசாயம் சாராத தனியுரிம நிறுவனங்களில் 19.5 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு சொந்தமானவை. மேலும், இந்தியாவில் பெண்களின் பொருளாதார பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 17% ஆகும்.

இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் பால்ரீதியான வேலைப் பிரிவினை (Sexual Division of Labour) அதிகம் வேரூன்றி உள்ளது. இதனால், பெண் உழைப்புச் சந்தையில் (Labour Market) இருந்து பின்வாங்கி வீட்டு வேலைகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண் தனது நேரமெல்லாவற்றையும் சோர்வேற்படுத்தும், ஒடுக்கும், உற்சாகமற்ற வீட்டு வேலைகளில் தான் வீணடிக்கிறார் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் பெறப்பட்ட விபரங்கள் படி, 50 வருட வாழ்க்கைக் காலத்தையுடைய பெண் 8. 33 வருடங்களை அல்லது தனது வாழ்க்கையில் 16.66 வீதத்தைச் சமையலறையில் செலவிடுவதைத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தால் குழந்தைகளுக்கு காலை உணவு செய்யும் நேரம் மிச்சமாகும் என்றும், இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் பணிக்கு செல்லும் (Female Labour Force) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்பத்தில் இருந்து தனித்துவிடப்பட்ட பெண்கள், கைப்பெண்கள் ஆகியோர்க்கு இத்திட்டம் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. இது, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)