அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீட்டுப் பணிகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக மையமானது (என்ஐஇபிஏ) தேசிய அளவிலான பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை வழிநடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மேம்படுத்துவதற்காக இத்திட்டம் 2016-17-ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 6 கல்வியாண்டுகளில் இந்த மதிப்பீட்டுப் பணிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, நிகழாண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயமதிப்பீட்டு ஆய்வு நடத்தப்படவுள்ளது. இந்த சுயமதிப்பீட்டுப் பணிகள் செப். 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, பள்ளிகளில் சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, மதிய உணவுப் பொருள்கள், குடிநீா் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்றவற்றை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படுகிறது.
மேலும், பள்ளி மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. அந்தந்த வட்டாரத்திலுள்ள கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் மூலமாக இந்த ஆய்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.