பூமிக்கு அருகில் வரும் அரிய வால்நட்சத்திரம்

Ennum Ezhuthum
0




இந்த பிரபஞ்சத்தில் சூரியனும், அதை சுற்றியுள்ள கோள்களும் தன்னகத்தே கொண்டுள்ள அதியசங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். சூரியனை சுற்றும் நவீன அறிவியல்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன. அவை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பது தான் சுவாரசியம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன. வால்நட்சத்திரம் என்பது என்ன? சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம். இவை ஒவ்வொன்றும் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் என்பது வேறுபாடானதாகும். சூரியனுக்கு மிகவும் அருகே உள்ள சில வால் நட்சத்திரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். நீண்ட தொலைவில் உள்ள வால் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே சூரியனை வலம் வரும். அதிகபட்சமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி விட்டு செல்லும் என கூறப்படுகிறது.

புதிய நட்சத்திரம் இந்தநிலையில் தான் கடந்த ஆண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால்நட்சத்திரம் ஒன்று மிகவும் பிரகாசமாக பூமிக்கு அருகே வந்து செல்ல உள்ளது. 50 ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த அதிசயத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். வானில் தினமும் ஏராளமான அரிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில் சில நிகழ்வுகளை நாம் கண்களால் பார்க்க முடியும். பல நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடியாது. இந்த வால்நட்சத்திரம் தோராயமாக வரும் பிப்ரவரி 1-ந் தேதி பூமிக்கு அருகில் வரும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இவ்வாறு நீள்வட்டபாதையில் சுற்றி வரும் வால் நட்சத்திரங்கள் அவ்வப்போது பூமிக்கு அருகே வந்து செல்வது உண்டு. பூமி அருகே வால் நட்சத்திரம் கடந்து செல்வதற்கான காரணம் பற்றியும், இதனை மனிதர்களால் பார்க்க முடியுமா? இல்லையா? என்பது பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் ''சி/2022 இ3 (இசட்.டி.எப்)'' என்ற வால் நட்சத்திரம் சுற்றி வருகிறது. இந்த வால் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி கண்டுபிடித்தனர். அதிநவீன கேமரா மூலம் இந்த வால்நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது சிறுகோள் என நம்பப்பட்டது. ஆனால் தொடர் ஆய்வின் மூலம் இது வால்நட்சத்திரம் என உறுதி செய்யப்பட்டது. இதுதான் தற்போது பூமியின் அருகே வந்து செல்ல உள்ளது.

 வெறும் கண்ணால் பார்க்கலாம் இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி பூமிக்கு அருகே அதாவது 4.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் கடந்து செல்ல உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களால் கூட பார்க்கலாம். இருப்பினும் அன்றைய தினம் சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மிகவும் இருட்டாக இருந்தால் மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிக அருகே வந்து செல்லும் இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த அரிய வால்நட்சத்திரம் அடுத்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தெரியும். இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு பூமிக்கு அருகே 'நியோவைஸ்' என்ற வால் நட்சத்திரம் வந்தது. அதற்கு பிறகு தற்போது தான் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய வால்நட்சத்திரம் பூமிக்கு அருகே வர உள்ளது. பச்சை நிறத்தில் இருக்கும் நாசாவின் கூற்றின்படி, ``C/2022 E3 (ZTF)" என்ற வால் நட்சத்திரம் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் ஜனவரி மாதத்தில், காலை நேரத்தில் பார்வைக்கு தென்படும். பின்னர் தெற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி மாதத்தில் பூமியை நெருங்கி வரும்.


வால் நட்சத்திரம் தற்போது சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் பயணித்து வருகிறது. வால் நட்சத்திரத்தின் தற்போதைய நிலை நீடித்தால், பூமியை நெருங்கி வரும்போது நன்கு பிரகாசமாகக் காட்சியளிக்கும். அதை அனைவரும் வெறும் கண்களாலே பார்க்கலாம். அதிக திறனுடைய கேமராக்களால் இந்த அரிய நிகழ்வை துல்லியமாக படம் பிடிக்கவும் முடியும். இனிவரும் நாட்களில் ஏற்படும் மாற்றங்களால், வால்நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கினாலும், தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். சந்திரன் மங்கலாக இருக்கும் பட்சத்தில், வால் நட்சத்திரம் சற்று பிரகாசமாகக் காட்சியளிக்க கூடும். 

சிறந்த தொலைநோக்கியின் மூலம், அந்த வால் நட்சத்திரத்தைப் பார்த்தால், அதன் நகர்வுகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும். இந்த வால் நட்சத்திரம் உருவாகி 50 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம். கடைசியாக வால் நட்சத்திரத்தைப் பார்த்த மனிதர்கள் பனியுகத்தைச் சேர்ந்த ''ஹோமோ ஹேப்பியன்ஸ்'' ஆகவே இருப்பார்கள். அதாவது ''நியண்டர்தால்'' மனிதர்கள், இந்நிகழ்வை பார்த்திருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் பிப்ரவரி மாதம் 1-ம் தேதியில் இருந்து 2-ந் தேதிக்குள், காட்சியளிக்கும்போது மண்டலத்தில் இருக்கும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6,619 வால் நட்சத்திரங்கள் வானில் தோன்றும் நட்சத்திர கூட்டத்தை எண்ண முடியுமா? ஆனால் நமது கண்ணுக்கு தெரியாமல் வான்வெளியில் சுற்றித் திரியும் வால் நட்சத்திரங்களை வானியல் ஆய்வாளர்கள் ஓரளவுக்கு கண்டுபிடித்து விட்டனர். அதிலும் பூமியை கடந்து சென்ற வால்நட்சத்திரங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு ஜூலை மாத கணக்கின்படி 6,619 வால் நட்சத்திரங்கள் பூமியை கடந்து சென்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரங்களில் மிகவும் புகழ் பெற்றது ''ஹாலி'' வால் நட்சத்திரம். சூரியனை சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வந்து கொண்டே இருக்கும். எட்மண்டு ஹாலி என்பவர் இந்த வால் நட்சத்திரம் சரியாக 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்லும் என 1705-ம் ஆண்டிலேயே கணித்தார். 

1986-ம் ஆண்டு ஹாலி வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்த போது ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகள் விண்கலத்தை அனுப்பி புகைப்படம் எடுத்தன. பிரகாசமான நட்சத்திரம் ஜப்பான் அனுப்பிய விண்கலம் ஹாலி வால் நட்சத்திரம் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 52 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது என கண்டறிந்தது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் விண்கலம் கிட்டத்தட்ட வால் நட்சத்திரத்திற்கு 650 கி.மீ பக்கத்தில் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது வால் நட்சத்திரத்தின் தூசித் துகள்கள் கடும் வெப்பத்தால் கருகியது. 

ஆனால் விண்கலம் கருகும் முன்பே வால் நட்சத்திரம் சம்பந்தமான தேவையான புகைப்படங்களை அந்த விண்கலம் எடுத்து அனுப்பியது. கடைசியாக 1986-ம் ஆண்டு பூமியை தாண்டிச் சென்ற ஹாலி வால் நட்சத்திரம் இனிமேல் 2061-ம் ஆண்டு வரும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேபோல் 1997-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பூமிக்கு அருகே ''ஹாலே-பாப்'' என்ற வால் நட்சத்திரம் கடந்து சென்றது. இது மிகவும் பிரகாசமாக இருந்தது. 

இந்த வால்நட்சத்திரத்தை 540 நாட்கள் பூமியில் இருந்து தொடர்ந்து பார்க்க முடிந்தது. இது 20-ம் நூற்றாண்டின் மிக பிரகாசமான நட்சத்திரமாக பெயர் எடுத்தது. வாலின் நீளம் 15 கோடி கி.மீட்டர் வால் நட்சத்திரம் என்பது ஒரு பனிப்பந்து மாதிரி இருக்கும். ஒருங்கிணைக்கப்பட்ட பாறைகள், கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனோக்சைடு, நீர்ப்பனி, மீத்தேன், அம்மோனியா மற்றும் தூசிகளும் கலந்து உருவானது இந்த பனிப் பந்து. இதை அழுக்கு பனித்துளிகள் (Dirty snow balls) என்பார்கள். வால் நட்சத்திரத்தின் தலை அல்லது உட்கரு (Nucleus) பெருவாரியான சிறுசிறு பொருட்களால் உருவானது. தலையைச் சுற்றிலும் புகை போன்ற ஒரு மண்டலம் சூழ்ந்துள்ளது. இதுவே வால் நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. சூரிய வெப்பத்தால் தலையின் பொருள்கள் சில வாயுக்களை வெளியிடுகின்றன. அவையே தலையைச் சுற்றிப் புகைபோல் சூழ்ந்திருக்கின்றன. 

இந்த புகை மண்டலத்தில் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களும், சூரியனுக்கு மிக அருகில் இவை செல்லும்போது சோடியம், இரும்பு, நிக்கல் முதலிய உலோகங்களின் ஆவிகளும் இருப்பதாக நிறமாலைக் காட்டியின் உதவியால் கண்டுபிடித்திருக்கிறார்கள். சூரியனின் ஒளி இந்த வாயுக்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதால், வாயுக்களும் அவற்றுடன் சேர்ந்த துகள்களும் தூசிகளும் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளப்பட்டு நீண்ட வாலாகத் தோற்றம் அளிக்கின்றன. சூரியனுக்கு அருகில் வால் நட்சத்திரம் நெருங்கும்போது ஒளியின் அழுத்தம் அதிகரிப்பதால் வால் நீளமாகிறது. 

இந்த வால் இருக்கும் திசை எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறது. இந்த வால் போன்று நீளும் அமைப்பு 15 கோடி கி.மீட்டர் தூரம் வரை இருக்கும். வானியல் கணக்குப்படி ஒரு வானியல் அலகு என்று சொல்வார்கள். வால் நட்சத்திரத்தின் எடை முழுவதும் அதன் தலையிலேயே உள்ளது. அது ஏறக்குறைய ஒரு சிறு கோளின் எடைக்குச் சமமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 

டைனோசர்கள் அழிய காரணம் வானில் இருக்கும் விண் கற்களால் பூமிக்கு வரும் ஆபத்தை விட வால் நட்சத்திரங்களால்தான் அதிக ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்ணில் சுற்றித் திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் விண்கற்களை விட அதிக தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் தான் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு இந்த தகவலை அறிவித்துள்ளது. சூரிய குடும்பத்தின் தொலைதூர கிரகங்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியுன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையை ஏராளமான வால் நட்சத்திரங்கள் வழிமறிக்கின்றன. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "சென்டார்ஸ்" என்றழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரங்கள் 50 முதல் 100 கி.மீட்டருக்கு மேல் குறுக்களவு கொண்டது.

 இது எப்போதாவது புவிஈர்ப்பு மண்டலத்துக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வால் நட்சத்திரத்தின் எடையும், புவி ஈர்ப்பு மண்டலத்தை கடக்கும் அனைத்து விண்கற்களின் ஒட்டு மொத்த எடைக்கு சமமானதாக இருக்கும். அவை சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே வரும் போது பல துண்டுகளாக பிரிந்து தூசியாக மாறலாம். ஆனால் அவற்றில் இருந்து வெளியேறும் விண்கல் துகள்கள் பூமியை தாக்காமல் இருக்காது. இதனால் விண்கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்மீன் கூட்டத்து வால் நட்சத்திரம் விழுந்ததால் தான் 'டைனோசர்' இனம் அழிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கெட்ட பலன்கள் நடக்குமா? 

அரசர்கள் ஆட்சிக் காலத்தில் வால் நட்சத்திரங்களின் வரவு உலகத்தில் பயத்தை ஏற்படுத்தியது. காரணம், சில வால் நட்சத்திரங்கள் தோன்றியபோது உலகில் முக்கியமான சில துயரச் சம்பவங்கள் நடைபெற்றன என்பதே அதற்கு காரணம். ஆனால் உலகத்தையே புரட்டிப் போட்ட 2 உலகப் போர்களின்போது வால் நட்சத்திரங்கள் எதுவும் தோன்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வால்நட்சத்திரங்களின் மீதான அவநம்பிக்கை இன்னும் மக்களிடையே குறைந்தபாடில்லை. ஆனாலும், நவீன விஞ்ஞானம் அந்த வால் நட்சத்திரத்திலேயே கால் வைத்து ஆராய்ச்சி நடத்தியதுதான் ஆச்சரியம். 2004-ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ''ரோஸெட்டா'' விண் பெட்டகம், 67 பி - கரியுமோ கரசிமங்கோ என்னும் வால் நட்சத்திரத்தை ஆராய ஏவப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோஸெட்டா விண் பெட்டகம் சூரியனைச் சுற்றியுள்ள வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தது. 

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ரோஸெட்டா விண்கலத்திலிருந்து பிரிந்த பிலே லேண்டர் எனும் ஆய்வுக்கலம் 67 பி - கரியுமோ கரசிமங்கோ வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் மூலம் ஒரு வால் நட்சத்திரத்தில் இறங்கும் முதல் விண் ஆய்வுக்கலம் எனப் புகழ் பெற்ற பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் சென்று இறங்கியது. பூமியிலிருந்து 51 கோடி கி.மீட்டர் தொலைவில் மணிக்கு 55 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தில் 1 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட 'அகில்கியா' எனும் இடத்தில்தான் மிகப் பாதுகாப்பாக பிலே லேண்டர் தரை இறங்கியது. பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்தில் இருந்து அனுப்பிய அபூர்வ புகைப்படம் வால் நட்சத்திரத்தின் இரண்டு தோற்றங்களை சித்தரித்தது.


Post a Comment

0Comments

Post a Comment (0)