பொதுவாக, இயற்கை எனும் தத்துவக் கோட்பாடு, ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்துகொண்டே தான் இருக்கிறது. உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், பின்பு மீண்டும் பிறப்பதும் நம் கோள்களின் சுழற்சி போல, கெடிகாரத்தின் சுழற்சி போல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல்.
இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும், பின்பு மீண்டும் உறங்க வேண்டும் என்பவை நம் ஜீன்களில் பதிந்துபோன ஒரு விஷயம். ஆதி மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட நேரத்தில் கழிவுகளை கழித்தும் வாழ தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகிறது.
உதாரணமாக, சூரியன் உச்சியில் இருக்கும் போது உணவு உண்கிறார்கள் என்றால், அதை மீண்டும் மீண்டும் செய்ய தொடங்க, மறுநாள் சூரியன் உச்சிக்கு வரும் முன்பே வேட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றும். இந்த சூரியன் உச்சியில் இருக்கும்போது நாம் உணவு உண்டுவிட வேண்டும் என்று அவன் முதன் முதலில் நினைத்தபோதே, அவன் நேரம் என்ற கோட்பாட்டை அவனுக்கு தெரியாமலே உருவாக்கிவிட்டான். பகலானால் வேட்டை, இரவானால் உறக்கம் என்பதும் அதற்கான உதாரணம் தான்.
பின்பு நாகரிகம் வளர வளர, அவன் அன்றாடம் செய்யும் செயல்கள் அதிகமாக, அதிகமாக அவற்றையெல்லாம் எப்போது செய்ய வேண்டும் என்று குறித்துக்கொள்ள அவனுக்கு ஒரு அளவு கோல் தேவைப்பட்டது. அது தான் நேரம் என்ற கோட்பாடு. தற்போது நேரம் என்பது மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக விளங்குகிறது.
நேரம் இல்லாத உலகம் குழப்பங்களின் குவியலாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. நேரம் இல்லாத உலகம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நேரம் என்ற ஒன்று இல்லாத உலகம் வேண்டும் என்றால், அங்கே இருக்கும் உயிர்களின் ஜீன்களுக்குள் சுழற்சி என்ற விஷயமே பதிந்திருக்கக் கூடாது. எப்போது நம் வாழ்வில் சுழற்சி என்ற ஒன்று நுழைந்துவிட்டதோ, அப்போதே நேரம் என்ற ஒரு கோட்பாடு உள்ளே நுழைந்துவிட்டதாகத்தான் அர்த்தம்.
அதை கூறுகளாக பிரித்து கெடிகாரம் கொண்டு அளக்கவில்லை, அவ்வளவு தான். உதாரணமாக ஐந்தறிவு மிருகங்களால் நேரம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால், எப்போது உணவு தேடச் செல்ல வேண்டும், உணவு உண்ண வேண்டும், எப்போது இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் அதற்கு தெரியும். அது மிருகத்துக்கு மிருகம் மாறுபடுமே தவிர, அது சுழற்சியாக நடந்து கொண்டேதான் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, நம் பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளின்படி, சுழற்சி என்ற ஒன்று இயற்கையின் தன்மையாக இருக்கிறது.
இங்கே நாம் நேரம் என்ற ஒன்றை விட்டு விடவே முடியாது. நாம் நாள் முழுவதும் கெடிகாரத்தை பார்க்காமல் தவிர்க்கலாம். ஆனால், பசித்தால் உணவு உண்ண வேண்டும். உறக்கம் வந்தால் உறங்க வேண்டும் என உங்கள் உடலின் தேவைகள் சுழற்சி நிலையில் தான் இருக்கும். அதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா என்ன?