இட்லி, தோசைக்கு சைடிஷ்ஷாக சுவையான இந்த கத்திரிக்காய் கடையலை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. சட்னி சாம்பார் வைக்கும் நேரத்தை விடவே ரொம்ப சீக்கிரம் செஞ்சிடலாம்.

Ennum Ezhuthum
0



 இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார், குருமா, வடகறி என வகை வகையாக செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். கத்திரிக்காய் வைத்து செய்யப்படும் இந்த கடையலை கொஞ்சம் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் நல்ல சுவையாகவும் இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காது என்பவர்கள் கூட இது போல செய்து கொடுத்தால் நிச்சயமாக சாப்பிடுவார்கள். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள். வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

 கத்திரிக்காய் கடையல் செய்ய தேவையான பொருட்கள்: 

கத்திரிக்காய் – 1/4 கிலோ, 

சின்ன வெங்காயம் -10,

 தக்காளி -2, 

பச்சை மிளகாய் – 2,

 பூண்டு – 5 பல், 

பாசிப் பருப்பு – 2 

டேபிள் ஸ்பூன், 

குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், 

மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்,

 கடுகு – 1/4 டீஸ்பூன்,

 சீரகம் – 1/4 டீஸ்பூன்,

 உப்பு -1/4 டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் – 4, 

பெருங்காயம் -1/4 டீஸ்பூன், 

கருவேப்பிலை -1 கொத்து, 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி.

 கத்திரிக்காய் கடையல் செய்முறை விளக்கம்: கத்திரிக்காய் கடையல் செய்ய கத்திரிக்காயை மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

 இப்போது குக்கரில் நறுக்கி வைத்த கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, பாசிப் பருப்பு , பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் என அனைத்தையும் சேர்த்த பிறகு இவையெல்லாம் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

 சிறிது நேரம் கழித்து வேக வைத்த பொருட்களை எல்லாம் மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் கலந்து அடுப்பை பற்ற வைத்து லேசாக கொதிக்க விடுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து சின்ன தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, சீரகம் போட்டு பொரிந்த பிறகு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையும் சேர்த்தவுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் கடையலில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

 சுட சுட இட்லியுடன் இந்த கத்திரிக்காய் கடைகளை சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இது இட்லி, தோசை இரண்டுக்குமே நல்ல ஒரு காம்பினேஷன். சாதத்திற்கும் கூட இதையே ஊற்றி சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

Post a Comment

0Comments

Post a Comment (0)