விண்வெளியில் ஒரு எரிவாயு நிலையம்?!

Ennum Ezhuthum
0

 

விண்வெளியில் ஒரு எரிவாயு நிலையம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. புவி சுற்றுவட்டப் பாதையில் விண்வெளிக் குப்பைகளில் இருந்து ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளது. ஆபத்தான விண் குப்பைகலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றும் சேர்ந்துள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இருக்கும் பொருட்களை கணினி உருவாக்கிய பிம்பங்களைப் பயன்படுத்தி எளிதில் அடையாளம் காணத் திட்டமிடப்பட்டுள்ளது.

      சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் பழைய பயனற்றுப் போன விண்கலங்கள், மரணமடைந்த செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட் பகுதிப் பொருட்கள் விண்ணில் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் சுற்றி வருகின்றன. இவை வானில் வலம் வரும் தொலைத்தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

      அசுர வேகத்தில் சுற்றும்போது இவற்றில் ஏதேனும் ஒரு திருகு/ஒரு சிறு கோளாறு ஏற்பட்டால் கூட அது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், அதில் பயணம் செய்யும் மனிதர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். சுற்றி வரும் நுண்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தும் உள்ளது. இது கெஸ்லர் விளைவு (Kessler effect) என்று அழைக்கப்படுகிறது. இக்குப்பைகள் அவை சுற்றி வரும் வட்டப் பாதைகளில் இருந்து அகற்றப்பட்டால் மட்டுமே அவை அங்கிருந்து வெளியேறும். அதுவரை இவை அதே பாதையில் தொடர்ந்து சுற்றும்.      தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூமேன் ஸ்பேஸ் (Neumann space) என்ற நிறுவனம் குறைவான உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் விண்கலத் திட்டங்கள், செயற்கைக் கோள்களை நகர்த்துதல், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனம் வேறு மூன்று நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.


      ஜப்பானைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ ஸ்கேல் (Astroscale) என்ற நிறுவனம் செயற்கைக் கோள்களின் உதவியுடன் வான் கழிவுகளை எவ்வாறு வெற்றிகரமாக கைப்பற்றுவது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.

      அமெரிக்காவின் நானோ ராக்ஸ் (Nanorocks) என்ற நிறுவனம் நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவுகளை வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும்போதே வெட்டி எடுப்பதற்குரிய நூதன வழிகளைக் கண்டுபிடித்துள்ளது.

      மற்றொரு அமெரிக்க நிறுவனம் சிஸ்லூனார் (Cislunar) கழிவுகளை கம்பிகளாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்துள்ளது. இவற்றை நியூமேன் ஸ்பேஸ் நிறுவனம் எரிபொருளாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கழிவுகளில் உள்ள இரும்பை அயனியாக்கி இதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி வட்டப்பாதையில் சுற்றி வரும் பொருட்களை நகர்த்த முடியும் என்று நம்புகிறது.

      கழிவுகளில் இருந்து உலோகங்களை உருக்கும் முயற்சிக்காக நாசா நிதியுதவி செய்துள்ளது என்று நியூமேன் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹெர்வ் அஸ்டியர் (Herve Astier) கூறியுள்ளார். சுற்றும் கழிவைப் பிடித்து அதை வெட்டி உருக்கினால் எரி ஆற்றலாக மாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார். பொருட்கள் ஒரு முறை வட்டப்பாதைகளுக்கு ஏவப்பட்டு விட்டால் அவை தானாகவே பாதையை விட்டு விலகிச் சென்றால் மட்டுமே, காற்று மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகலாம் அல்லது பூமியில் அரிதாக விழலாம்.

      நாளுக்கு நாள் விண்வெளியில் குப்பைகளின் அளவு அதிகமாகிறது. இதை சமாளிக்க உதவும் வழிமுறைகளை உருவாக்குவதில் சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சிறிய திருகாணி முதல் பெரிய பொருட்கள் வரை விண்வெளியில் சுழலும் அனைத்துமே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. சேபர் அஸ்ட்ரநாட்டிக்ஸ் (Saber aStronautics) என்ற நிறுவனம் காலாவதியாகும் விண்கலனை பிடித்திழுத்து மீட்கும் திட்டத்திற்காக நாசாவின் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

      சிட்னியைச் சேர்ந்த எலக்டோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (Elecro Optic systems) கேன்பரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதுபோன்ற கழிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதாமல், காற்று மண்டலத்திற்குள் நுழைவதைத் தடுக்க உதவும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் வலம் வரும் குப்பைகளை அடையாளம் கண்டுபிடிக்கும் முறையை மேம்படுத்த ஆஸ்திரேலிய இயந்திரக் கற்றல் ஆய்வுக் கழகம் (Institute of machine learning) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

      விண்வெளிக் குப்பைகளை கைப்பற்றுவதை, அழிப்பதைக் காட்டிலும் அவற்றை மறுசுழற்சி செய்வதே சிறந்தது என்று ஹெர்வ் அஸ்டியர் கூறுகிறார். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு குப்பைகளை கைப்பற்றி அவற்றை மறுபடி பயன்படுத்தினால் அது நாளைய விண்வெளித் திட்டங்களுக்கு ஆகும் செலவைக் குறைக்க பெரிதும் உதவும். மாசுகளாலும், குப்பைகளாலும் ஏற்கனவே பூமி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் விண்வெளிக் குப்பைகள் மனித குலத்திற்கு மேலும் அழிவையே ஏற்படுத்தும். இந்நிலையில் விண்வெளியில் இப்பொருட்களை மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரும் காலம் விரைவில் வரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அப்போது பூமியில் இன்று ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்கள் இருப்பது போல விண்வெளியில் எரிவாயு ஆற்றல் நிலையங்கள் உருவாகும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)