தனியார் மருத்துவர்களை அலறவிட்ட ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமைச் சட்டம்: எதிர்ப்புப் போராட்டம் வலுப்பது ஏன்?

Ennum Ezhuthum
0

 

தனியார் மருத்துவர்களை அலறவிட்ட ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமைச் சட்டம்: எதிர்ப்புப் போராட்டம் வலுப்பது ஏன்?

ராஜஸ்தான் அரசு, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சுகாதார உரிமை சட்ட மசோதாவுக்கு அம்மாநில தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மையில் இந்தச் சட்டம் யாருக்கானது? இந்தச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்னென்ன? - இவை குறித்து சற்றே விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

நமது நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் அமலில் இருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்கிறது இந்தச் சட்டம். வசதி இல்லை என்பதற்காக எந்த ஒரு குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதே இதன் நோக்கம். இதற்காக ஒவ்வொரு தனியார் பள்ளியும் மாணவர் சேர்க்கையில் 25 சதவீதத்தை வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும்; அவர்களுக்கான கல்விச் செலவை அரசே பள்ளிகளுக்கு வழங்கும் என்கிறது இந்தச் சட்டம்.

இதேபோல், அவசர காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சுகாதார உரிமைச் சட்டத்தை இயற்றி இருக்கிறது ராஜஸ்தான் மாநில அரசு. இதுபோன்ற ஒரு சட்டம் இயற்றப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. முதல்வர் அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இதற்கான மசோதாவை கடந்த 21-ம் தேதி (மார்ச் 21) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

அவசர சிகிச்சை இலவசம்: இந்தச் சட்டத்தின்படி, ராஜஸ்தானில் வாழும் மக்கள் எந்த ஓர் அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் அவசர சிகிச்சையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக முன்பணம் என்று ஏதும் செலுத்தத் தேவை இல்லை. வெளிநோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அவசர கால சிகிச்சை, மருத்துவ ஆலோசனை, மருந்துகள், பரிசோதனைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நோயாளிகள் செல்வதற்கான போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும். சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டம் உண்டு.

தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள நோயாளிகளுக்கான உரிமைகள் அனைத்தையும் இந்தச் சட்டம் ஏற்கிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாநில சுகாதார ஆணையம் மற்றும் மாவட்ட சுகாதார ஆணையம் ஆகியவை அமைக்கப்படும். இந்த ஆணையங்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவைாக இருக்கும். மாநில சுகாதார ஆணையத்தின் தலைவராக இணை செயலர் அந்தஸ்துக்குக் குறையாத ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பார். மாவட்ட சுகாதார ஆணையத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இருப்பார்கள்.

சட்டத்தை மீறினால்..? - நோயாளிகள் தங்கள் குறைகளை இலவச தொலைபேசி எண் மூலமும், இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரி 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் அதன் மீது மாவட்ட சுகாதார ஆணையம் உரிய நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுத்து தீர்வு காண வேண்டும். புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். புகார் மீது மாவட்ட சுகாதார ஆணையம் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார ஆணையம் உத்தரவிட வேண்டும். முதல் முறையாக சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து மீறுபவர்களுக்கு ஒவ்வொரு புகாரின் மீதும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது.

தனியார் எதிர்ப்பு ஏன்? - இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் நன்மதிப்பைப் பெறும் நோக்கில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசு. ஆனால், இந்தச் சட்டம் ஒரு கொடூரமான சட்டம் என்றும், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி அம்மாநில தனியார் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு போராட்டக்காரர்கள் கூறும் காரணங்கள்:

1. இலவச சிகிச்சையை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய தொகையை அரசு வழங்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தில் அது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள தொழில் நடத்துவதற்கான உரிமையை மீறுவதாகும்.

2. அவசர சிகிச்சைக்கான பட்டியலில் பிரசவம் இடம்பெற்றுள்ளது. இதனை நீக்க வேண்டும்.

3. அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள 50 படுக்கை வசதிகளுக்குக் குறையாத மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

4. நோயாளிகளுக்கான உரிமை தொடர்பாக மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த விதிகள் ஏற்கப்படுவது போன்றே, சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் விஷயத்தில் நோயாளிகளுக்கு உள்ள கடமைகள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள விதிகளும் ஏற்கப்பட வேண்டும்.

5. இந்தச் சட்டப்படி அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை அரசும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள். இது விஷயத்தில் மக்களை அரசு தவறாக வழிநடத்தக் கூடாது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்களும், மருத்துவமனைகளுமே எதிர்கொள்ள நேரிடும்.

6. சுகாதார ஆணையத்தின் கீழ் இந்தச் சட்டம் கண்காணிக்கப்படுவதால் அரசு நிர்வாகத்தின் தலையீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

7. புகார் மீதான நடவடிக்கைகள் மாவட்ட சுகாதார ஆணையத்தால் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவேற்றப்படும் தகவல்களை யார் யார் அணுக முடியும் என்பது குறித்து வரையறுக்கப்படவில்லை.

அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தில் இத்தனை குளறுபடிகள் இருப்பதால், இதனை ஏற்க முடியாது என தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும், சட்டத்தை அரசு திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சுமார் 55 ஆயிரம் மருத்துவர்கள் ஆதரவாக உள்ளனர். இதனால், ராஜஸ்தானில் தற்போது மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் முதல்வர்?: மருத்துவர்களின் போராட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அஷோக் கெலாட், ''மக்களின் நலன் கருதியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் குறித்த தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். மருத்துவர்களின் கோரிக்கைளும் ஏற்கப்படும். அரசும் தனியாரும் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். எனவே, மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளின் எதிர்ப்பு சரியா? - இந்தப் போராட்டம் குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்துள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ''தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் தவறானது. அவர்கள் தங்களுக்கு உள்ள சமூக கடமைகளை புறக்கணிக்க முடியாது. சுகாதார உரிமையை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. 1936-ம் ஆண்டிலேயே சோவியத் யூனியனில் சுகாதார உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது உலகிற்கே முன்னோடியான நடவடிக்கையாக இருந்தது. இதன் அடிப்படையே மனித நலன்தான்.

சுகாதார உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வராத நிலையில், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், இதுவே போதுமானது அல்ல. ராஜஸ்தானில் அரசு மருத்துவக் கட்டமைப்புகள் வலிமையாக இல்லை. எனவே, அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக தனியார் மருத்துவமனைகளும் தனியார் மருத்துவர்களும் கருதினால் அது குறித்து அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மாறாக, இந்தச் சட்டத்தை கொடூரச் சட்டம் என்று வர்ணிப்பதும், சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதும் தவறானது. ராஜஸ்தானில் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நடத்தி வரும் இந்தப் போராட்டம் மக்களுக்கு எதிரானது.

ஒரு வகையில் இந்தச் சட்டம் தனியாருக்குச் சாதகமானது என்பதே எங்கள் பார்வை. ஏனெனில், மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதற்கான செலவை அரசு நிச்சயம் ஏற்கும். இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிதி அதிக அளவில் செல்லும். எனவே, அரசு மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதேநேரத்தில், இந்தச் சட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களும் உரிய சுகாதார வசதிகளை பெற முடியும் என்பதால், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கவே செய்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

சுகாதார உரிமைச் மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்ற இதற்கான பேச்சுவார்த்தைகளின்போது, மசோதாவில் உள்ள பல்வேறு குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டியதாகக் கூறுகிறார் இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் சுனில் சவுக்.

மசோதா இறுதி வடிவம் பெறும்போது இந்த குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இந்த மசோதா தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்துபூர்வமாக கடந்த 17-ம் தேதி மாநில தலைமைச் செயலரிடம் வழங்கியதாகவும், இருந்தும் அவை பரிசீலிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் சுனில் சவுக் தெரிவித்துள்ளார்.

இது ஏன் முக்கியம்?: அஷோக் கெலாட் அரசைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான ஒரு நடவடிக்கை. தேர்தலை மனதில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்கூட இது ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கானது என்பதால் இதன் வெற்றி ராஜஸ்தானுக்கு மட்டுமல்ல; நாட்டிற்கே மிகவும் முக்கியமானது. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் பல மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ராஜஸ்தானை பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது. இதில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தால் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதை பல மாநிலங்கள் தவிர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு போதைய கவனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவர்கள் தரப்பில் முறையீடுகளை தெரிவிக்கும்போதே அரசு அதன்மீது உரிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டு தற்போது பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மருத்துவர்களோ சட்டத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதுபோன்ற ஒரு நிலை அரசுக்கு ஏற்பட்டிருப்பது, அதன் பலவீனத்தையே காட்டுவதாகக் கருத இடமிருக்கிறது. அதோடு, மருத்துவத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல தனியார் மருத்துவமனைகள் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

Post a Comment

0Comments

Post a Comment (0)