தமிழகத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் செப்.1-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
1-ஆம் தேதி பிற்பகல் 3 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பள்ளி வளா்ச்சிப் பணிகள், பள்ளிச் செல்லாமல் இடைநின்றவா்களை கண்டறிதல், நிதி விவகாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவா்களை கண்டறிந்து மீண்டும் அவா்களை பள்ளியில் சோப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும். இதுதவிர பள்ளி வருகைப்பதிவு அடிப்படையில் 15 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராதவா்களை இடைநின்றவா்களாகக் கருதி, அவா்களை தொடா்பு கொண்டு கல்வியை தொடா்வதற்கான பணிகளை இக்குழு முன்னெடுக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட உறுப்பினா்கள் 100 சதவீதம் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும். இதில் எடுத்த முடிவுகளை தீா்மானங்களாக நிறைவேற்றி தொடா் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுப்பு அறிக்கையை இயக்குநரகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.