TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி: விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

Ennum Ezhuthum
0




 பத்து ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க கோரிய வழக்கில், அரசு தரப்பு விரிவான பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த மனு:கடந்த, 2014க்கு பின், ஆசிரியர்கள் பணிக்கு நேரடி தேர்வு நடத்தப்படவில்லை.

முதுநிலை பட்டம் மற்றும் எம்.எட்., படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நான் தகுதி பெற்றுள்ளேன். 2013ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்.

என்னுடன், 16,910 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதன்பின், தேர்ச்சி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் தொடர்பாக, அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.சான்றிதழ் சரிபார்ப்பு முடித்ததால், எனக்கு பணி நியமனம் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்நிலையில், 2018ல் பள்ளி கல்வித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், தகுதியானவர்கள் மத்தியில் இருந்து போட்டி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையை கைவிட்டு, புதிதாக போட்டி தேர்வு என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இதற்கு, 'கட் - ஆப்' தேதி நிர்ணயிக்கப்படவில்லை.இந்த உத்தரவால், 2014ல் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பணி நியமனத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம். 2014 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தகுதி மற்றும் போட்டி தேர்வை உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.நாங்கள், 10 ஆண்டுகளுக்கு முன் பட்டப்படிப்பு, தகுதி தேர்வு முடித்துள்ளோம்.

சமீபத்தில் படிப்பை முடித்தவர்களுடன், நாங்கள் போட்டியிட வேண்டும் என்பது, சரி சமமான போட்டியாக இருக்காது. எனவே, எங்களுக்கு முன்னுரிமை அளித்து, பணியில் நியமிக்க வேண்டும். 2018ல் பிறப்பித்த உத்தரவை, எங்களுக்கு அமல்படுத்தக் கூடாது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுதாரரைப் போன்று பலரும், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் என்.கவிதா ராமேஷ்வர் ஆஜராகி, ''அரசின் மாறுபட்ட நிலைப்பாடுகளால், மனுதாரர்களுக்கு இன்னும் பணி நியமனம் நடக்கவில்லை. ஏற்கனவே தகுதி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்தவர்களை, போட்டி தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பது சரியல்ல,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் வாதாடினார். பள்ளி கல்வித்துறை செயலர் காக்கர்லா உஷாவும், நீதிபதிகள் முன் ஆஜராகி கருத்து தெரிவித்தார்.இதையடுத்து, விசாரணையை, செப்டம்பர் 12க்கு தள்ளி வைத்து, விரிவான பதிலை அரசு தரப்பு அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)