பட்டியலின ஊழியர் சமைத்த மாணவர்களுக்கான காலை உணவு: டிசி கேட்ட பெற்றோர்கள்..

Ennum Ezhuthum
2 minute read
0
ads banner
பட்டியலின ஊழியர் சமைத்த மாணவர்களுக்கான காலை உணவு:  டிசி கேட்ட பெற்றோர்கள்..

 

மிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட அனுமதிக்காமல் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் கோரியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன் பாளையத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 47 பேர் படித்து வந்தனர். இப்பள்ளியில், ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார்.

இதற்கு, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் பட்டியலின மக்கள் சமைத்த உணவை உட்கொள்ளுவதில்லை என்பதால் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வசதியாக டிசி-ஐ தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.



சம்பவத்தை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் மாணவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எந்த சூழ்நிலையிலும், சமையல் ஊழியரை மாற்ற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் தெரிவித்ததால் சமாதானம் ஆகாத ஒரு தரப்பினர் உணவை புறக்கணித்து சென்றனர். இன்று மீண்டும், அதே ஊழியர் உணவு சமைத்த நிலையில் 34 பள்ளிக்குழந்தைகள் உணவருந்தியதாகவும், 13 குழந்தைகள் பள்ளிக்கு விடுப்பு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகேசனிடம் கேட்ட போது, காலை உணவு திட்டத்தில் சாதி வேறுபாடையும், தீண்டாமையையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒற்றுமை உணர்ச்சி இல்லாதது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், தொடர் பேச்சுவார்த்தை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இன்று, பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை உட்கொண்டதாகவும், இனி இது போன்று நடைபெறாது எனவும் உறுதியளித்தார்.

எதிர்வரும் நாட்களில், சமையல் ஊழியர் மீது ஏதேனும் அடக்குமுறை நடத்தப்பட்டாலோ, குழந்தைகளுக்கான காலை உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ காவல் துறை மூலம் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

சமையல் ஊழியர் தீபா

இந்த சம்பவம் தொடர்பாக உணவு சமையலர் தீபாவை தொடர்பு கொண்ட போது, "பனியன் நிறுவனத்தில் பணியாற்று வருகிறேன். கூடுதலாக, காலை உணவுத் திட்டத்தின் கீழ் பணி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. நேரடியாக யாரும் பிரச்சினை செய்யவில்லை. மற்றவர்கள் மூலமே தகவல்கள் தெரியவந்தது. பணி செய்ய போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமியிடம் கேட்ட போது, சம்பவம் குறித்து அறிந்த உடனடியாக பள்ளிக்கு சென்றதாகவும், பெருமாநல்லூர் காவல் துறையினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், தீண்டாமை கொடுமை மற்றும் வழக்குகள் குறித்து எடுத்துரைத்து தெளிவு படுத்தியதாகவும் கூறினார். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என உறுதியளித்துள்ளார்

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 28, March 2025