Chandrayaan 3 Next Steps: பொழியும் மணல் மழை; 4 மணிநேரத்தில் முக்கிய நிகழ்வு; சந்திரயான் 3 வெற்றி- அடுத்தது என்ன?

Ennum Ezhuthum
1 minute read
0
ads banner
Chandrayaan 3 Next Steps: பொழியும் மணல் மழை; 4 மணிநேரத்தில் முக்கிய நிகழ்வு; சந்திரயான் 3 வெற்றி- அடுத்தது என்ன?

 

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து, இந்தியா சரித்திர சாதனையைப் படைத்துள்ள நிலையில், நிலவில் அடுத்தது என்ன நடக்கும் என்பதுதான் எல்லோரின் கேள்வியாக உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயணத் திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது.

இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. குறிப்பாக 25 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்களில் விக்ரம் லேண்டர் நிலவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவில் அடுத்தது என்ன நடக்கும் என்பதுதான் எல்லோரின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் விளக்கமாகக் கூறியதாவது:

’’நிலவில் ஆபத்து இருக்கிறது என்று இடர் உணர், ஆபத்து தவிர் திறன் கேமரா மூலம் தெரிந்துகொண்ட சந்திரயான், சற்றே தள்ளி, ஆபத்தான தரையில் இறங்கி உள்ளது. தொழில்நுட்பத்தை உறுதிசெய்தல் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு, சுமார் 2 மணி நேரத்துக்குப் பெரும்பாலும் எதுவும் செய்யாது. அதில் உள்ள சாய்வு அளவை மானி மூலம், எந்த கோணத்தில் இருக்கிறது என்பதை பூமிக்கு அனுப்பும். அதேபோல நிலவில் தரை இறங்கியபோது நடந்த நிகழ்வுகளின் தரவுகளையும் நமக்கு அனுப்பி வைக்கும்.

மணல் மழை

நிலவில் காற்று இல்லாததால் ராக்கெட் இறங்கியபோது கிளம்பிய மண், தூசுகள் நேரடியாக மேலே சென்றுவிடும். எனினும் குறைவான நிலவீர்ப்பு விசை காரணமாக, அவை மெதுவாகவே கீழே வரும். இதனால் விண்கலம் இருக்கும் இடத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மணல் மழை பொழியும்.

சுமார் 2.5 மணி நேரத்துக்குப் பிறகு, ரோவர் பிரக்யான் லேண்டரின் வயிற்றுக்குள் இருந்து வெளியே வரும் பணி தொடங்கும். 3.10 மணி நேரத்துக்குப் பிறகு ரோவரின் சோலார் பேனர், தாய்க் கலமான விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும்.

முக்கிய நிகழ்வு

4 மணி நேரத்துக்குப் பிறகு முக்கிய நிகழ்வு நடைபெறும். அதாவது அந்த நேரத்தில், சோலார் பேனல் சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும். தொடர்ந்து ரோவர் லேண்டரையும், லேண்டர் ரோவரையும் புகைப்படம் எடுக்கும். இரண்டு புகைப்படங்களும் சுமார் 9.05 மணி அளவில் கிடைக்கும். இதன் மூலம் தாயும் சேயும் நலம் என்ற தகவலை நாம் பெறலாம். அதற்குப் பிறகுதான் இரண்டுமே இயங்க ஆரம்பிக்கும்.

தொடர்ந்து நிலவில் உள்ள தனிமங்கள், கனிமப் பொருட்கள் எப்படி உள்ளது என்று ஆராய்ச்சி தொடங்கும். இந்தத் தொழில்நுட்பத்தை நாம் எந்த நாட்டுக்கும் தர மட்டோம். மற்ற நாடுகளும் யாருக்கும் தர மாட்டார்கள்.’’

இவ்வாறு விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ads banner

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 28, March 2025